தமிழக சட்டசபையின் முதல் பெண் மாற்று தலைவர் சத்தியபாமாவா ? – சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ எதிர்ப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. சத்தியபாமா, தமிழகச் சட்டமன்றத்தில் மாற்று அவைத் தலைவராக அமர்ந்து அவையை வழிநடத்தியது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றாலும், இதுவே வரலாற்றில் முதல்முறை என்ற செய்திக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. லீமா ரோஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திருப்பூர் வடக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ. சத்தியபாமா நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் மாற்று அவைத் தலைவராக அமர்ந்து அவையை வழிநடத்தினார். தமிழக வரலாற்றில் ஒரு பெண் மாற்று சபாநாயகராகப் பொறுப்பேற்பது இதுவே முதல்முறை என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தவெக ஆட்சியில்தான் இதுபோன்று மாற்று பெண் அவைத்தலைவராக இருந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலானது.

ADVERTISEMENT

ஆனால், இதற்கு முன்பாகவே தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமன்றத்தில் பல்வேறு பெண் எம்எல்ஏக்கள் மாற்று சபை தலைவர்களாக இருந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெண் எம்.எல்.ஏ. ஏ.எஸ். பொன்னம்மாள், ராஜாத்தி குஞ்சிதபாதம், பி.கே.ஆர். லட்சுமிகாந்தம், யசோதா, ராஜம்மாள் என 5 பேர் மாற்று அவைத் தலைவர்களாக இருந்துள்ளனர்.

அதேபோல், திமுகவைச் சேர்ந்த எஸ்.பி. சற்குணம், காஞ்சனா கமலநாதன் ஆகியோரும், அதிமுகவைச் சேர்ந்த சி.எம். சூரியக்கலாவும் மாற்று அவைத் தலைவர்களாக இருந்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லீமா ரோஸ் எம்எல்ஏ மாற்று அவைத் தலைவர்களாகச் செயல்பட்டுள்ளார். தமிழகத்தின் நீண்ட சட்டமன்றப் பாரம்பரியத்தில் இதுவரை தமிழகத்தில் சபாநாயகராகவோ அல்லது துணை சபாநாயகராகவோ பெண்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்நிலையில் தான் தமிழகத்தின் மாற்று சட்டசபை தலைவர் சத்யபாமா என்ற செய்திகளுக்கு முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “தமிழக சட்டமன்றத்தில் தவெக கட்சியைச் சார்ந்த பெண் எம்.எல்.ஏ. மாற்றுத் தலைவராக இருந்து சபையை வழிநடத்தியதை நாங்கள் பாராட்டுகிறோம். உண்மைக்குப் புறம்பான ஒரு செய்தி தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு பெண் மாற்றுத் தலைவராக இருந்து சபையை வழிநடத்துவது இதுதான் என்கிறார்கள்; ஆனால், இது உண்மைக்குப் புறம்பானது. எனக்கு முன்பு பலமுறை எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொன்னம்மாள் மற்றும் இன்னும் பல பெண் தலைவர்கள் மாற்றுத் தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுச் சட்டமன்றத்தில் சபாநாயகராகச் செயல்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

2006–2011 காலகட்டத்தில் ஐந்தாண்டு காலமும் மாற்றுத் தலைவர் பட்டியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நானும் (லீமா ரோஸ்) இடம்பெற்றிருந்தேன். சமூக நலத்துறை மானியக் கோரிக்கையின் போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாற்றுத் தலைவர் என்ற முறையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அந்த சபையை நான் வழிநடத்தியிருக்கின்றேன்.

அந்தக் காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் பத்மா, அதேபோல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மரியாதைக்குரிய யசோதா அம்மாள் போன்றவர்களும் மாற்று தலைவர்களாக சபையை வழிநடத்தியிருக்கிறார்கள். ஒரு விஷயத்தை பாராட்டுவதை உண்மையில் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; ஆனால், பாராட்டும் போது ‘வரலாற்றில் முதல்முறை’ என்று சொல்லி உண்மையை திரித்துப் பேசுவது சரியில்லை என்று பதிவு செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தனது முகநூல் பதிவில், “தவெக ஆட்சியில்தான் முதல் பெண் மாற்று சபாநாயகர் என்பது தவறான தகவல்…!

-CPM முன்னாள் MLA தோழர் லீமாரோஸ்..

ஆம்…உண்மை.

தோழர்லீமாரோஸ் அவர்கள் மாற்று அவைத் தலைவராக சபையை நடத்தினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share