நீதிமன்றம் வைத்த குட்டு… அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜர்!

Published On:

| By Kavi

தனது சகோதரரை தாக்கிய வழக்கில் நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று (செப்டம்பர் 4) புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் 2022 ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள தனது சகோதரர் மரிய க்ளோத் வீட்டுக்குள் புகுந்து கட்டையால் அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது.

ADVERTISEMENT

இது தொடர்பாக அவரது சகோதரர், மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பான வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் பலமுறை ஆஜராக உத்தரவிட்டும் மரிய வில்சன் நேரில் ஆஜராகவில்லை.

ADVERTISEMENT

தன் மீதான வழக்கை ரத்து செய்ய கேட்டும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி நீதிபதி லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்த போது, ‘மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் அல்ல. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து இருக்கிறார். நீங்கள் சட்டத்துக்கு மேலானவர் அல்ல” என்று குட்டு வைத்து நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் சகோதரரை தாக்கிய வழக்கில் மரிய வில்சன் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை அவர் பெற்றுக் கொண்ட நிலையில் மீண்டும் செப்டம்பர் 9ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் என்று நீதிபதி சந்திரசேகர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அவர்கள் கூறுகையில், ”இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி தான். அவர்கள் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். 2022-ல் நடந்த சம்பவம் 2026-ல் எப்படி திடீரென உயிர்ப்பெற்றது? மரிய வில்சன் அமைச்சரான பிறகுதான் இந்த வழக்கு உயிர் பெற்றிருக்கிறது” என்று குறிப்பிட்டனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share