இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ரூ. 5.76 லட்சம் அபராதம் விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சொந்தக் கடலில் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் நம் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறிக் கைது செய்வதும், சிறையில் அடைத்து லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதும் தொடர்கதையாகிவிட்டது.
கார்ப்பரேட் நண்பர்களின் வியாபார நலனுக்காக மட்டுமே ஓடி ஓடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமர் மோடி, அண்டை நாடான இலங்கையிடம் சென்று நம் மீனவர்களின் உரிமைக்காக ஒரு வார்த்தை கூட பேச மறுப்பது ஏன்? ரஷ்யா – உக்ரைன் போரையே நிறுத்துவதாகப் பேசி நாடகம் ஆடும் மோடி அவர்கள், தன் சொந்த நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை வதைக்கும் போது கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? ஒருவேளை இவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் என்பதாலா இந்த அப்பட்டமான பாராமுகமும் ஓரவஞ்சனையும்?
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகளில் வரி விலக்கு கொடுக்கும் இந்த பாஜக அரசு, ஏழை மீனவர்களின் இந்த அபராதத் தொகையை உடனடியாக ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவிக்கப் பொறுப்பேற்க வேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இலங்கைக்கான இந்திய தூதரகம் உடனடியாகத் தலையிட்டு, இந்த அநியாயக் கைதுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு, நமது மீனவர்களையும் அவர்களது படகுகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாகத் தாயகம் அழைத்து வர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என வலியுறுத்தி உள்ளார்.
