கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்த தவெக அமைச்சர்கள் – காரணம் என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக சுற்றறிக்கைக்கு வருத்தம் தெரிவித்துள்ளோம் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜோசப் விஜய் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சிடிஆர் நிர்மல்குமார், ராஜ் மோகன் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோரை சந்தித்தனர். வரும் செப்டம்பர் 9ம் தேதி தவெக ஆதரவு கட்சிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “நீண்ட நாட்களுக்குப் பிறகு சிபிஎம் அலுவலகத்திற்குச் சென்று தலைவர்களைச் சந்தித்துள்ளோம். இன்றைய தினம் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பொதுப் பிரச்சனைகள் குறித்துப் பேசி முடித்துள்ளோம்.

ADVERTISEMENT

டாஸ்மாக்கில் 30,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் உயர்த்தி கொடுத்த பிறகும் இன்று நிறைய இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சிபிஎம் தலைவர்களுடன் பேசி ஒரு சுமூகமான முறையில் சந்திப்பை முடித்துள்ளோம். மற்றபடி வேறு எதுவும் இல்லை. இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே.

குஜிலியம்பாறை விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அரசுக்குத் தெரியாமல், தாசில்தாரே தன்னிச்சையாக எடுத்த முடிவு அது. அதற்கு அப்போதே வருத்தம் தெரிவிக்கப்பட்டது. மேலும், பல்கலைக்கழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையும் திரும்பப் பெறப்பட்டது.

ADVERTISEMENT

அரசுக்குத் தெரியாமல் நடந்த இந்த நிகழ்வுக்கும், சுற்றறிக்கைக்கும் நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொண்டோம். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

இதைத்தொடர்ந்து தவெக அமைச்சர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கும் நேரில் சென்று மு.வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து பேசினர்.
மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

தவெக ஆதரவு கட்சிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அமைச்சர்களின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share