திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.
காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சோதனை நடத்தப்பட்டது.
இதன்பிறகு திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு,
”லஞ்ச ஒழிப்புத் துறையினர் காலை 8 மணிக்கு வீட்டிற்கு வந்து, டெண்டரில் தவறு நடந்திருப்பதாகக் கூறி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், சோதனை நடத்த வேண்டும் என்றும் கூறினர். அதற்கு நானும் ஒத்துழைப்பு கொடுத்தேன்.
சென்னை, திருச்சியில் இருக்கும் என்னுடைய வீட்டிலும், தம்பியின் அலுவலகம் மற்றும் உதவியாளர் அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டனர். இதில் எதுவும் சிக்கவில்லை.
ஆனால் அலுவலகம் சம்பந்தமான கோப்பு ஒன்று இருந்தது. அது வழக்கமான கோப்புதான். அதன் நகல் ஒன்றை எடுத்துக்கொண்டார்கள். தம்பி அலுவலகத்தில் ஒரு குறிப்பேட்டில் வரவு-செலவு கணக்கு இருந்தது. அதையும் எடுத்துக்கொண்டார்கள். தொடர்ந்து என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்று விட்டார்கள்” என்றார்.
12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லியிருக்கிறார்களே?
“ஆமாம்… என்னை உட்பட 12 நபர்கள் மீது போட்டிருக்கிறார்கள். சில அதிகாரிகள் மீது போட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சோதனை நடைபெற்றது. நாங்கள் சோதனைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தோம். அவர்கள் சொல்வது போல் டெண்டர் விஷயமாக நான் யாரிடமும் பேசவில்லை.
ஏற்கனவே உள்ள அமலாக்கத் துறை சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, வேண்டுமென்றே புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழைய வழக்கு குறித்து எதுவும் கேட்கப்படவில்லை. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நீதிமன்றம் சென்று நிரபராதி என வெளியே வருவோம்” என்றார்.
நீங்கள் சட்டசபையில் அடிக்கடி கேள்வி கேட்கிறீர்கள்… அதனால் உங்களை பழிவாங்கும் நோக்கில் இந்த ரெய்டு நடத்தப்பட்டதா?
”இருக்கலாம்… அரசாங்கம், காவல்துறை எப்போதும் பார்க்கலாம்… அதிகாரம் இருக்கிறது. அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். அடிக்கடி கேள்வி கேட்கிறோம் என்று நிருபர்கள் சொல்வது பெருமையாக இருக்கிறது”
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்தப்பட்டதா?
”அப்படிதான் இருக்கும். அரசியல் ரீதியாக பார்த்தால் எங்களை மிரட்டி வைக்கலாம் என்ற வகையில் இந்த ரெய்டு நடத்தியிருக்கலாம். இது பழிவாங்கும் நடவடிக்கைதான். அரசியல் காழ்ப்புணர்ச்சிதான்.
திமுக தலைவர் என்னிடம் பேசி, ’விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்’ என அறிவுறுத்தினார்” என்று கூறினார்.
