விஜய்க்கு எதிராக பேசுபவர்களைக் கைது செய்கின்ற ஒரு ஹிட்லர் மனப்பான்மையில் உள்ளது தவெக அரசு என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உசிலம்பட்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “முதலமைச்சர் விஜய், ‘நான் பதில் சொல்லும் போது யாரும் வெளியில் எழுந்து ஓடக்கூடாது’ என்று தெரிவித்ததாகச் சட்டமன்றத்தில் கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அப்படி சொல்லிய முதல்வர் விஜய்தான், அவரே ஓடிப் போய்விட்டார். அவருக்கு அப்படித்தான் பேசத் தெரிகிறது. அவர் சாதாரணமாக அமைதியாகத் தெரிவாரே தவிர, மிகவும் நரித்தனமாக, தந்திரமாக, இன்னும் சொல்லப்போனால் விஷமத்தனமான செயல்பாடுகளில் தான் ஈடுபட்டு வருகிறார். அவர் ஆட்சிக்கு வருவோம் என்று நினைத்தெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளைச் சொல்லவில்லை; அதையெல்லாம் நிறைவேற்றுவதற்கு எந்த முயற்சிகளையும் எடுப்பது போல் தெரியவில்லை. முதலில் அது குறித்த புரிதல் இருக்குமா என்று தெரியவில்லை” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “முதலமைச்சர் எழுதி வைத்திருப்பதைக்கூட ஒழுங்காகப் பேச முடியவில்லை. அன்று ஆதவ் அர்ஜுனா பெரிய சாக்ரடீஸ் போல், அரசியலைக் கரைத்துக் குடித்தவர் போல் பேசுகிறார். திரவப் பொருளை மில்லி லிட்டர், லிட்டர் என்றுதான் அளப்போம். ஒரு லிட்டர் பால் என்றுதான் சொல்வோம். ஒரு மீட்டர் பால் என்று கேட்போமா? சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்குக்கூடத் தெரியும் இது போன்ற விஷயங்கள் குறித்த புரிதல் இல்லாமல் இருக்கின்றனர். மரிய வில்சன் என்ற நிதி அமைச்சர் மதத்தை இழுத்து விடுகிறார். மதத்திற்கும் மொழிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? அப்படி நீங்கள் உண்மையான கிறிஸ்தவராக இருந்தால், உங்கள் அண்ணனையும் அண்ணியையும் கட்டை எடுத்து அடிக்கும் வீடியோ வருகிறது. நீங்கள் கோர்ட்டுக்குப் போவதற்குப் பயந்து கொண்டு இருப்பதாக நீதிமன்றம் கண்டிக்கிறது. நிர்மல் குமார் எத்தனை கட்சியில் இருந்து பல கட்சிக்குப் போனவர்? அவர் பேசுவது எப்படி உள்ளது.
எதிர் வரிசையில் இருக்கும் திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு அனுபவம் மிக்கவர்கள்! எத்தனை முறை அமைச்சர்களாக இருந்தவர்கள், முதல்வர்களாக இருந்தவர்கள், துணை முதல்வர்களாக இருந்தவர்கள். எவ்வளவு அனுபவஸ்தர்கள். அவர்களது அனுபவங்களை எல்லாம் உதாசீனப்படுத்துகின்ற வகையில் இவர்கள் பேசுவதும், அதைச் சபாநாயகர், ‘நான் நடுநிலையாக இருக்கிறேன், எதிர்க்கட்சிக்குப் பேச வாய்ப்பு தருகிறேன்’ என்று சொல்வதும் முறையல்ல. நேரலையில் நான் இப்போது பேசுகின்றேன்; அதை எடிட் செய்து போட்டாலும், இப்போது நேரலையில் வந்ததை எடுத்து தற்குறிகள் பெரிய சாதனையாகப் பேசுகிறார்கள். அவர்களுக்கு ஆறாம் அறிவு இருக்கிறதா என்ற அளவிற்குத்தான் அவர்களது செயல்பாடுகள் இருக்கிறது.
இவர்கள் எப்படிப்பட்டவர்கள்? படித்த இளைஞர்களும், இளம் பெண்களும், வேலையில் இருப்பவர்களும், வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களும் மாற்றம் வர வேண்டும் என்பதற்காக யாரைக் கொண்டு வந்துள்ளீர்கள்? தொகுதியில் யார் வேட்பாளர் என்று தெரியாமல், அடிப்படைப் புரிதல் இல்லாதவர்களைச் சட்டமன்றத்தில் தேர்ந்தெடுத்துள்ளனர். பிளாக் டிக்கெட் விற்றவர்கள் தானே அவர்கள்? அதனால் அவர்களது சட்டமன்றச் செயல்பாடுகள் எல்லாம் காட்டு கத்தலாக உள்ளது. ஆளும் கட்சி ஆகிவிட்டோம் என்பதற்காகத் தலைகால் புரியாமல் இருக்கின்றனர்.
‘மக்கள் கொடுத்த ஆட்சியை எப்படி கவிழ்ப்பீர்கள்?’ என்கிறார்கள் சிலர். முதலில் உங்களுக்கு அறுதிப் பெரும்பான்மையை மக்கள் கொடுக்கவில்லை. நீங்கள் தில்லுமுல்லு செய்துதான், மற்ற கட்சி எம்.எல்.ஏ-க்களைப் பேரம் பேசி, பதவி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி உங்களுக்கு ஆதரவாக வரவழைத்தீர்கள். 25 பேரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, 6 எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வைத்தீர்கள். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்னை மீண்டும் எம்.எல்.ஏ-வாகச் செயல்பட விடுங்கள் என்று கேட்கும் அளவிற்குச் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள் நாட்டில் நடக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் கேள்விப்படாத குதிரைப்பேரத்தை உருவாக்கியது நேர்மையாளர், தூய சக்தி என்று சொல்கின்ற இந்த நாசக்கர சக்திதான். அதனால் இவர்கள் அவர்களாகவே விழுந்து விடுவார்கள். அதற்கு அறிவு நுட்பம் உள்ளவர்கள், அனுபவஸ்தர்கள் சரியான நேரத்திற்காகக் காத்திருக்கிறார்கள்.
இந்த ஆட்சியைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஆட்சியில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும், ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களையும், விஜய் அவர்களுக்கு எதிராகப் பேசுபவர்களைக் கைது செய்கின்ற ஒரு ஹிட்லர் மனப்பான்மை உள்ள ஆட்சிதான் இது. யார் அவர்களுக்கு வாக்களித்தார்களோ, அவர்களே இவர்களுக்குப் பாடம் புகட்டுகின்ற நேரம் வந்துவிட்டது. உடனடியாக மக்கள் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள்” என்றார்.
