சென்னை அடையாறு அடுத்த வண்ணான்துறை பகுதியில் தவெக பிரமுகர் கண்ணன் என்பவர் நேற்று இரவு அடையாளம் தெரியாத கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு அருகே வண்ணான்துறை பகுதியில் வசித்து வந்தவர் கண்ணன் (வயது 45). அதிமுகவில் இருந்த கண்ணன் அங்கிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவரை அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென வழிமறித்து விரட்டிச் சென்று பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த அடையாறு காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த கண்ணனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
முன்விரோதம் காரணமா?
இதற்கிடையே, கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் 5 பேரைத் தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த சிவா என்பவரின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாகவே கண்ணன் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கொலையைத் தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,” நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.
அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!
தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா?
இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?
இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.
