ஸ்ரீவைகுண்டம் தவெக பெண் நிர்வாகி பாலியல் புகார்: அமைச்சர் ஆனந்தின் பேச்சு ஏற்புடையதல்ல – மாதர் சங்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

ஸ்ரீவைகுண்டம் பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகார் குறித்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் சட்டமன்ற பேச்சு ஏற்புடையதல்ல என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தவெக நிர்வாகிகள் மீது தவெகவைச் சார்ந்த பெண் நிர்வாகி முன்வைத்துள்ள பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய புகார்களில் அரசு எந்தவித அரசியல் சார்பும் இன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணின் நியாயத்தை முன்னிறுத்திச் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணணுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளார், ஆனால், பாதிக்கப்பட்ட பெண் அளித்த விளக்கம் விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட பெண், தனது புகாரில் சட்டமன்ற உறுப்பினரின் பெயரை காவல் நிலையத்தில் சொன்ன போது “அவரது பெயரை சேர்க்கக்கூடாது” என்று கூறியதாகவும், விசாரணைக்கு அழைக்கப்படவில்லை என்றும், விசாரணை எங்கு நடைபெற்றது, யார் விசாரணை அதிகாரிகள் என்பதும் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடமே விசாரணை நடத்தப்படவில்லை என்றால், எந்த அடிப்படையில் விசாரணை நடைபெற்றது? அவரது புகாரின் முழுமையான அம்சங்கள் எவ்வாறு பரிசீலிக்கப்பட்டன? அவரது வாக்குமூலம் இல்லாமல் உண்மையை மதிப்பீடு செய்தார்களா?
ஒரு பெண் தனக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்கும்போது தலையீடு செய்வது விசாரணையின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குவது, விசாரணையின் சில அம்சங்களை மட்டும் சுட்டிக்காட்டி வழக்கை முடித்துவிட முயற்சிப்பது ஏற்புடையதல்ல.

ADVERTISEMENT

எனவே, அரசு இதுவரை நடைபெற்ற விசாரணையின் முழுமையான நடைமுறையை வெளிப்படையாக விளக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளில் சமரசத்திற்கோ, அரசியல் செல்வாக்திற்கோ, அதிகார அழுத்ததிற்கோ இடமிருக்கக் கூடாது.

ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் பக்கம் நிற்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் அரசு உறுதியாக நிற்க வேண்டும். அவர் எழுப்பியுள்ள அனைத்து கேள்விகளுக்கும் உரிய, வெளிப்படையான பதிலை அளித்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தனது முகநூல் பதிவில், “ஸ்ரீவைகுண்டம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண் இன்று புகார் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டிருக்கிறார்.நேற்றைய சட்டமன்றக்கூட்டத்தொடரில் தவெக எம்எல்ஏ விற்கும் இக்குற்ற நிகழ்விற்கும் சம்பந்தமே இல்லை என்றார் அமைச்சர் ஆனந்த் அவர்கள்.

கொடுத்த புகாரை வாபஸ் பெறும் அளவிற்கு அந்தப் பெண்ணுக்கு அச்சத்தையும் அழுத்தத்தையும் கொடுத்தது காவல்துறையா…தவெக எம்எல்ஏ வா?

எங்கே போய் சொல்வது சிங்கப்பெண்ணே?” என பதிவிட்டுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share