Social Justice “War”- Century Long History: தமிழகத்தில் ஆளும் தவெக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தொடர்பான கொள்கை ஆவணத்தில் இடஒதுக்கீட்டு வரலாறு எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது, எந்த வரலாற்றுக் கட்டங்கள் இடம்பெற்றுள்ளன அல்லது விடுபட்டுள்ளன என்ற விவாதம் மீண்டும் சமூகநீதி வரலாற்றை நோக்க வைத்துள்ளது.
1921-ம் ஆண்டு Communal G.O. தொடங்கி 1951-ன் முதலாவது அரசியல் சாசன திருத்தம், காமராஜர் கால மாற்றங்கள், சட்டநாதன் ஆணையம், கலைஞரின் இடஒதுக்கீட்டு விரிவாக்கங்கள், எம்ஜிஆரின் 50%, MBC/DNC 20%, மண்டல் ஆணைய அமலாக்கத்தில் கலைஞரின் ஆதரவு, ஜெயலலிதா ஆட்சியில் 69%-க்கான சட்டப் பாதுகாப்பு, உள் இடஒதுக்கீடுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் வரை சமூக நீதி வரலாற்றின் பயணம் நீண்டுள்ளது.
தமிழ்நாட்டில் நூற்றாண்டு காலமாய் தொடரும் சமூக நீதிப் பயணம் பற்றிய பார்வை
இந்திய சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக நிலவிய வர்ண–சாதி அமைப்பு, கல்வி, அறிவு, அதிகாரம் ஆகியவற்றைப் பெறுவதில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கவில்லை. பிறப்பின் அடிப்படையில் சமூக அந்தஸ்தும் வாய்ப்புகளும் தீர்மானிக்கப்பட்ட சூழல் நீண்டகாலம் நிலவியது.
சூத்திரர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கும் கட்டுப்பாடு
இந்துக்களின் வேதநூலாக கொண்டாடப்படும் மனுஸ்மிருதி, சூத்திரர்களின் கல்வியை மறுத்தது. இதுபோன்ற தர்மசாஸ்திர விதிகள் பிறப்பின் அடிப்படையில் கல்வி பெறுவதிலும் கற்பிப்பதிலும் இருந்த தடைகளுக்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன.
நவீனக் கல்வி வந்தது; சமத்துவம் வரவில்லை
ஆங்கிலேயர் ஆட்சியில் நவீனக் கல்வியும் புதிய அரசு நிர்வாகமும் விரிவடைந்தன. ஆனால் அந்த வாய்ப்புகளை அனைத்து சமூகங்களும் சமமாகப் பெறவில்லை.
கல்வி மற்றும் அரசுப் பணிகளில் பிராமணர்களின் பிரதிநிதித்துவம் மற்ற பல சமூகங்களைவிட அதிகமாக இருந்தது. இதனால் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் சமூகங்களுக்கு இடையேயான பிரதிநிதித்துவ வேறுபாடு அரசியல் பிரச்சினையாக உருவெடுக்கத் தொடங்கியது.
1911: கணக்கெடுப்பில் தெரிந்த சமூக இடைவெளி
1911 சென்னை மாகாண மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கல்வியறிவு, தொழில், சமூகப் பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பதிவு செய்தது.
கல்வி வாய்ப்புகளிலும் நவீன வேலைவாய்ப்புகளை அணுகுவதிலும் சமூகங்களுக்கு இடையே இருந்த பெரும் இடைவெளியை அந்தக் காலத் தரவுகள் வெளிப்படுத்தின.
அரசு வேலைகளில் பிரதிநிதித்துவக் கேள்வி
சென்னை மாகாண அரசுப் பணிகளில் பார்ப்பனர்களின் பிரதிநிதித்துவம் அவர்களது மக்கள் தொகை விகிதத்தைவிட மிக அதிகமாக இருப்பதாக பார்ப்பனர் அல்லாத தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டினர்.
இதனால் அரசு வேலைகளில் அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
1901: கல்வியில் பெரும் சமூக இடைவெளி
1901-ஆம் ஆண்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகங்களின் ஆண் எழுத்தறிவு விகிதம்:
தமிழ்ப் பார்ப்பனர்கள் — 73.6%
தெலுங்குப் பார்ப்பனர்கள் — 67.3%
நாயர்கள் — 39.5%
செட்டியார் — 32.0%
இந்தியக் கிறிஸ்தவர்கள் — 16.2%
நாடார் — 15.4%
பலிஜா நாயுடு / கவரை — 14.3%
வேளாளர் — 6.9%
கம்மா — 4.8%
காப்பு / ரெட்டி — 3.8%
ஆதாரம்: Census of India, 1921 – Madras, Vol. XIII, Part I, pp.128–129.
1912: Madras United League
1912-ல் பார்ப்பனர் அல்லாத அரசு ஊழியர்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் முயற்சியில் Madras United League உருவானது. டாக்டர் சி. நடேசனார் இந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
Madras Dravidian Association
Madras United League பின்னர் Madras Dravidian Association என்ற பெயரில் செயல்பட்டது. பார்ப்பனர் அல்லாத மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக முன்னேற்ற வாய்ப்புகளை ஏற்படுத்துவது அதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
நடேசனார் – தியாகராயர் – டி.எம். நாயர்
டாக்டர் சி. நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் உள்ளிட்ட தலைவர்கள் பார்ப்பனர் அல்லாத மக்களின் பிரதிநிதித்துவக் கோரிக்கையை வலுவான அரசியல் இயக்கமாக மாற்றினர்.
1912: அரசு உயர் பதவிகளில் யார்?
பார்ப்பனர் அல்லாதாருக்கான தனி அமைப்பு உருவாகத் தொடங்கிய 1912 காலகட்டத்தில், சென்னை மாகாண அரசின் முக்கிய உயர் பதவிகளில் பார்ப்பனர்களின் பிரதிநிதித்துவம் மிக அதிகமாக இருந்தது.
டெபுட்டி கலெக்டர்கள் — 55%
சப்-ஜட்ஜ்கள் — 83.3%
மாவட்ட முன்சீப்புகள் — 72.6%
அதே தரவுகளில் பார்ப்பனர் அல்லாத இந்துக்களின் பங்கு முறையே 21.5%, 16.7%, 19.5% மட்டுமே.

1916: South Indian Liberal Federation
1916-ல் பிராமணர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக South Indian Liberal Federation உருவாக்கப்பட்டது. அந்த இயக்கத்தின் Justice பத்திரிகையின் பெயரால் அது பின்னர் பொதுவாக Justice Party – நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது.
1916: Non-Brahmin Manifesto
1916-ல் சர் பிட்டி தியாகராயர் உள்ளிட்ட தலைவர்கள் முன்னெடுத்த Non-Brahmin Manifesto, பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு சமூக–பொருளாதார நீதி, சம உரிமை மற்றும் சம வாய்ப்புகள் வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் பிரகடனமாக முன்வைத்தது. கல்வி, அரசுப் பணி மற்றும் அரசியல் அதிகாரத்தில் உரிய பிரதிநிதித்துவம் பெறுவது பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் முக்கிய இலக்காக உருவானது.
சமூகப் பிரதிநிதித்துவம் அரசியல் கோரிக்கையானது
“அரசு நிர்வாகமும் கல்வி வாய்ப்புகளும் சிலரிடம் மட்டும் குவியக்கூடாது; அனைத்து சமூகங்களுக்கும் உரிய பங்கு கிடைக்க வேண்டும்” என்ற கோரிக்கை நீதிக்கட்சியின் முக்கிய அரசியல் கொள்கையாக உருவானது.
1918: லண்டனிலும் ஒலித்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் குரல்
Montagu–Chelmsford அரசியல் சீர்திருத்தங்களில் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்று நீதிக்கட்சி வலியுறுத்தியது.
இந்தக் கோரிக்கையை பிரிட்டனில் எடுத்துரைக்க டாக்டர் டி.எம். நாயர் லண்டன் சென்று, பார்ப்பனர் அல்லாத மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவ நிலையை எடுத்துரைத்தார்.
இதன் மூலம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கோரிக்கை சென்னை மாகாணத்தைத் தாண்டி பிரிட்டிஷ் அரசியல் அரங்கிலும் முன்வைக்கப்பட்டது.

நீதிக்கட்சி ஆட்சியும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்
1920: சென்னை மாகாணத் தேர்தல்
Montagu–Chelmsford சீர்திருத்தங்களின் அடிப்படையில் நடைபெற்ற 1920 சென்னை மாகாணத் தேர்தலை காங்கிரஸ் புறக்கணித்தது. நீதிக்கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. ஏ. சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் முதல் அமைச்சரவை அமைந்தது. பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் பிரதிநிதித்துவக் கோரிக்கைகளை அரசுக் கொள்கையாக மாற்றுவதற்கான வாய்ப்பு இதன் மூலம் உருவானது.
நீதிக்கட்சி ஆட்சிக்கு வருகிறது
1921: முதல் Communal G.O.
1921 செப்டம்பர் 16 அன்று சென்னை மாகாண அரசு முதல் Communal G.O.-வை வெளியிட்டது. அரசுப் பணிகளில் பல்வேறு சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதே அதன் அடிப்படை நோக்கம்.
1922: அடுத்த அரசாணை
1921 அரசாணையைத் தொடர்ந்து 1922 ஆகஸ்ட் 15 அன்று மேலும் ஒரு Communal G.O. வெளியிடப்பட்டது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நடைமுறையில் உறுதிப்படுத்தும் முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

நீதிக்கட்சி ஆட்சிக் கால சமூகநீதி அரசாணைகள்
1921 — பெண்களுக்கு வாக்குரிமை G.O. 108 — 10.05.1921
1922 — “பஞ்சமர்” என்ற பெயர் நீக்கம்; “ஆதிதிராவிடர்” என அழைக்க ஆணை G.O. 817 — 25.03.1922
1922 — கல்லூரி மாணவர் சேர்க்கைக்குக் குழுக்கள் G.O. 536 — 20.05.1922
1923 — பார்ப்பனர் அல்லாத பிள்ளைகளை தொடக்கப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை
G.O. 849 — 21.06.1923
1924 — தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களை கல்வி நிலையங்களில் அதிகமாகச் சேர்க்க நடவடிக்கை G.O. 205 — 11.02.1924; G.O. 1825 — 24.09.1924
1925 — இந்து சமய அறநிலையச் சட்ட நடவடிக்கை G.O. 29 — 27.01.1925
1922–1928 — சென்னை மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர் சேர்க்கை தொடர்பான ஆணைகள் G.O. 636 — 20.05.1922; G.O. 1880 — 15.09.1928
1929 — வகுப்புரிமைக்கான ஆணைG.O. 226 — 27.02.1929
1929 — Madras Public Service Commission உருவாக்கம் G.O. 484 — 18.10.1929

காங்கிரஸுக்குள் பெரியாரின் வகுப்புரிமைப் போராட்டம்
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்ட பெரியார்
காங்கிரஸில் செயல்பட்ட காலத்திலேயே தந்தை பெரியார், பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். அரசியல் சுதந்திரத்துடன் சமூக சமத்துவமும் அவசியம் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது.
மாநாடுகள் தோறும் எழுந்த கோரிக்கை
1920களில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கான தீர்மானத்தைக் கொண்டுவர தந்தை பெரியார் தொடர்ந்து முயன்றார். இந்தக் கோரிக்கை காங்கிரஸுக்குள் பெரிய அரசியல் முரண்பாடாக வளர்ந்தது.
1925: காஞ்சிபுரம் மாநாடு
1925 காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை நிறைவேற்ற தந்தை பெரியார் மேற்கொண்ட முயற்சி ஏற்கப்படவில்லை. இதன் பின்னர் அவர் காங்கிரஸிலிருந்து விலகினார்.
1925: சுயமரியாதை இயக்கம்
தந்தை பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கம் சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, பெண்கள் உரிமை, சமத்துவம் உள்ளிட்ட சமூக மாற்றக் கொள்கைகளை முன்னிறுத்தியது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் அதன் முக்கிய சமூகநீதிக் கோரிக்கைகளில் ஒன்றாகத் தொடர்ந்தது.

நடைமுறைக்கு வந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
1928: Communal G.O. வலுப்பெற்றது
1921, 1922 அரசாணைகளைத் தொடர்ந்து, 1928-ல் எஸ். முத்தையா முதலியார் அமைச்சராக இருந்தபோது வகுப்புவாரி சுழற்சி முறையை நடைமுறைப்படுத்தும் Communal G.O. வெளியிடப்பட்டது. இதன் மூலம் அரசுப் பணிகளில் சமூகப் பிரதிநிதித்துவம் செயல்பாட்டு வடிவத்தைப் பெற்றது.
சமூகநீதிக்கு நிர்வாக வடிவம்
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வெறும் அரசியல் முழக்கமாக இல்லாமல் அரசு நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதியாக மாறியது. தமிழகத்தின் பிற்கால இடஒதுக்கீட்டு அமைப்புக்கான முக்கிய வரலாற்று அடித்தளம் இதுவாக அமைந்தது.
1935–36: ‘Scheduled Castes’ என்ற பெயர்
‘Depressed Classes’ (தாழ்த்தப்பட்ட வகுப்பினர்) என குறிப்பிடப்பட்ட சமூகங்களைக் குறிக்க, ‘Scheduled Castes’ (பட்டியல் சாதியினர்) என்ற சொல் இந்திய சட்ட வரலாற்றில் முதன்முறையாக Government of India Act, 1935-ல் பயன்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1936 ஏப்ரல் 30 அன்று Government of India (Scheduled Castes) Order, 1936 பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு மாகாணங்களில் எந்தெந்த சமூகங்கள் ‘Scheduled Castes’ எனக் கருதப்பட வேண்டும் என்பதற்கான பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நீதிக்கட்சியிலிருந்து திராவிடர் கழகம் வரை
1937: நீதிக்கட்சியின் தேர்தல் தோல்வி
1937 சென்னை மாகாணத் தேர்தலில் நீதிக்கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று பின்னர் சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் அரசு அமைந்தது.

1938: இந்தி எதிர்ப்புப் போராட்டம்
ராஜாஜி அரசின் கட்டாய இந்திக் கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் தந்தை பெரியார் முக்கியத் தலைமையாக உருவெடுத்தார். போராட்டத்தின் போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்த பெரியார் நீதிக்கட்சித் தலைவர்
1938 டிசம்பரில் தந்தை பெரியார் சிறையில் இருந்தபோதே நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் நீதிக்கட்சியின் அரசியல் மரபும் சுயமரியாதை இயக்கத்தின் சமூக மாற்றப் பாதையும் மேலும் நெருங்கின.


1944: திராவிடர் கழகம்
1944 சேலம் மாநாட்டில் நீதிக்கட்சி திராவிடர் கழகம் என மறுசீரமைக்கப்பட்டது. தேர்தல் அரசியலைவிட சமூக மாற்றம், சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, சமூகநீதி ஆகியவற்றை முன்னிறுத்தும் இயக்கமாக அது தொடர்ந்தது.

1947: ஓமந்தூரார் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி ஒதுக்கீடு
இந்தியா சுதந்திரம் அடைந்த 3 மாதங்களில், சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் தலைமையிலான அரசு வகுப்புவாரி இடஒதுக்கீட்டு முறையில் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்தது.
1947 நவம்பர் 21 அன்று வெளியிடப்பட்ட G.O. Ms. No.3437 மூலம், அதுவரை ‘Non-Brahmin Hindus’ என்ற பொதுப் பிரிவில் இடம்பெற்றிருந்த பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு ‘Backward Hindus’ என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது.
திருத்தப்பட்ட 14 இட சுழற்சி முறையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 2 இடங்கள், அதாவது 14.29 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு வரலாற்றில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைத் தனியாக அடையாளப்படுத்தி அவர்களுக்கென தனி இடத்தை உறுதி செய்த முக்கியமான திருப்பமாக 1947 ஓமந்தூரார் அரசின் இந்த நடவடிக்கை அமைந்தது.
1949: திமுக உருவானது
1949-ல் பெரியாரிடமிருந்து அரசியல் ரீதியாகப் பிரிந்த அறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் – திமுக உருவானது. திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கைகளை தேர்தல் அரசியல் வழியாக முன்னெடுக்கும் புதிய பாதை இதன் மூலம் உருவானது.

அரசியலமைப்பும் இடஒதுக்கீட்டுக்கான நெருக்கடியும்
1950: அரசியலமைப்புச் சட்டமும் செண்பகம் துரைராஜன் வழக்கும்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த பிறகும், சென்னை மாகாணத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டு முறை (Communal G.O.) தொடர்ந்தது.
இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நடைமுறையில் இருந்த வகுப்புவாரி ஒதுக்கீட்டை எதிர்த்து செண்பகம் துரைராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இதேபோல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக சி.ஆர். சீனிவாசனும் வழக்கு தொடர்ந்தார்.
1950 ஜூலை 27 அன்று சென்னை உயர்நீதிமன்றம், வகுப்புவாரி அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் இடங்களைப் பிரித்து வழங்கிய Communal G.O. அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்று தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை மாகாண அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கே State of Madras v. Champakam Dorairajan என இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாற்றில் முக்கிய இடம்பிடித்தது.

1951: உச்சநீதிமன்றத் தீர்ப்பு
1951 ஏப்ரல் 9 அன்று உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. கல்வி நிறுவனங்களில் மதம், இனம், சாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதைத் தடுக்கும் அரசியலமைப்பின் Article 29(2)-க்கு Communal G.O. முரணானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் மூலம் சென்னை மாகாணத்தில் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கையில் நடைமுறையில் இருந்த வகுப்புவாரி ஒதுக்கீட்டு முறைக்கு சட்டரீதியான நெருக்கடி ஏற்பட்டது.
தமிழகத்தில் வெடித்த வகுப்புரிமைப் போராட்டம்
Communal G.O. செல்லாது என்ற தீர்ப்புக்கு எதிராக தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு உருவானது. தந்தை பெரியார் தலைமையில் வகுப்புவாரி உரிமையைப் பாதுகாக்க போராட்டங்கள் தீவிரமடைந்தன.

பிரிந்திருந்தாலும் ஒரே சமூகநீதிக் கோரிக்கை
1949-ல் திமுக தனி இயக்கமாக உருவாகியிருந்தாலும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் பிரச்சினையில் திராவிடர் கழகமும் திமுகவும் ஒரே கோரிக்கையை ஆதரித்தன.
அரசியலமைப்பையே மாற்ற வேண்டும்
நீதிமன்றத் தீர்ப்பால் ஏற்பட்ட தடையை நீக்க அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்திய அரசியலமைப்பில் முதல் திருத்தம்
1951: முதல் அரசியலமைப்புத் திருத்தம்
1951 ஜூன் 18 அன்று நடைமுறைக்கு வந்த Constitution (First Amendment) Act, 1951 மூலம் Article 15-ல் Clause (4) சேர்க்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியலமைப்புப் பாதுகாப்பு
Article 15(4), சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்கும் SC/ST மக்களுக்குமான சிறப்பு ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வழி ஏற்படுத்தியது.
1951: புதிய இடஒதுக்கீட்டு முறை
1951 செப்டம்பர் 27 அன்று G.O. Ms. No.2432 மூலம் 20-point roster கொண்டுவரப்பட்டது.
Backward Classes – 25%
SC/ST – 15%
என இடஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டது.

காமராஜர் ஆட்சியில் சமூகநீதி
1954: SC/ST இடஒதுக்கீடு உயர்வு
காமராஜர் ஆட்சியில் 1954 டிசம்பர் 30 அன்று G.O. Ms. No.2643 வெளியிடப்பட்டது. SC/ST இணைந்த இடஒதுக்கீடு 15%-லிருந்து 16%-ஆக உயர்த்தப்பட்டது. BC இடஒதுக்கீடு 25% ஆகத் தொடர்ந்தது.
1957: “Most Backward Communities”
1957 ஜனவரி 31 அன்று G.O. Ms. No.353 மூலம் Backward Classes-க்குள் துணைப்பிரிவு செய்யப்பட்டது. “Most Backward Communities” என்ற பெயரில் 58 சமூகங்கள் அடையாளப்படுத்தப்பட்டன.
1957: தனி இடஒதுக்கீடு அல்ல
Most Backward Communities என அடையாளப்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு கல்விச் சலுகைகள் நீட்டிக்கப்பட்டன. ஆனால் 1957-ல் MBCக்கு தனியாக ஒரு சதவீத இடஒதுக்கீடு உருவாக்கப்படவில்லை. இந்த வேறுபாடு முக்கியமானது.

கலைஞர் ஆட்சியில் இடஒதுக்கீட்டின் விரிவாக்கம்
1967: ஆட்சியில் திமுக
1967 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தலைமையில் அரசு அமைந்தது. திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கைகள் நேரடியாக ஆட்சி நிர்வாகத்தின் மையத்திற்கு வந்தன.
1969: கலைஞர் முதலமைச்சர்
அறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு 1969-ல் கலைஞர் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.

1969: சட்டநாதன் ஆணையம்
கலைஞர் அரசு 1969 நவம்பர் 13 அன்று G.O. Ms. No.842 மூலம் ஏ.என். சட்டநாதன் தலைமையில் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தது. பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையை அறிவியல் மற்றும் உண்மைத் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்வது அதன் நோக்கமாக இருந்தது.
1970: சட்டநாதன் ஆணைய அறிக்கை
சட்டநாதன் ஆணையம் 1970 நவம்பரில் அறிக்கையைச் சமர்ப்பித்தது. Backward Classes-க்கு அரசு வேலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் 33% இடஒதுக்கீடு வழங்க ஆணையம் பரிந்துரைத்தது.
1971: BC 25%-லிருந்து 31%
கலைஞர் அரசு 1971 ஜூன் 7 அன்று G.O. Ms. No.695 மூலம் Backward Classes இடஒதுக்கீட்டை 25%-லிருந்து 31%-ஆக உயர்த்தியது.
SC/ST 16%-லிருந்து 18%
அதே அரசாணையின் மூலம் SC/ST இணைந்த இடஒதுக்கீடு 16%-லிருந்து 18%-ஆக உயர்த்தப்பட்டது. இதனால் தமிழகத்தின் மொத்த இடஒதுக்கீடு 49% ஆனது.

எம்ஜிஆர் ஆட்சியில் புதிய திருப்பம்
1979: ₹9,000 வருமான உச்சவரம்பு
எம்ஜிஆர் அரசு 1979-ல் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற குடும்ப ஆண்டு வருமானத்திற்கு ₹9,000 உச்சவரம்பு விதித்தது. இந்த முடிவு தமிழகத்தில் கடும் அரசியல் மற்றும் சமூக எதிர்ப்பை ஏற்படுத்தியது.
வருமான உச்சவரம்பு வாபஸ்
எதிர்ப்புகளுக்குப் பின்னர் 1980 பிப்ரவரி 1 அன்று G.O. Ms. No.72 மூலம் ₹9,000 வருமான உச்சவரம்பு திரும்பப் பெறப்பட்டது.
1980: BCக்கு 50%
அதே நாளில் வெளியிடப்பட்ட G.O. Ms. No.73 மூலம் Backward Classes இடஒதுக்கீடு 31%-லிருந்து 50%-ஆக உயர்த்தப்பட்டது. SC/ST-க்கான 18% இடஒதுக்கீட்டையும் சேர்த்து தமிழகத்தின் மொத்த இடஒதுக்கீடு 68% ஆனது.

மண்டல் ஆணையம்
1979: மண்டல் ஆணையம்
இந்திய அளவில் சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலையை ஆய்வு செய்ய 1979-ல் இரண்டாவது Backward Classes Commission அமைக்கப்பட்டது. பி.பி. மண்டல் தலைமையில் அமைந்ததால் அது மண்டல் ஆணையம் என்று அழைக்கப்பட்டது.
1980: மண்டல் அறிக்கை
மண்டல் ஆணையம் 1980-ல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. மத்திய அரசுப் பணிகளில் OBC மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது அதன் முக்கிய பரிந்துரைகளில் ஒன்றாக இருந்தது.
பத்தாண்டுகளாக நடைமுறைக்கு வராத மண்டல் பரிந்துரை
மண்டல் ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் அதன் முக்கிய இடஒதுக்கீட்டுப் பரிந்துரை பல ஆண்டுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது.

தமிழகத்தில் MBC இடஒதுக்கீட்டின் அடுத்த கட்டம்
1982: அம்பாசங்கர் ஆணையம்
தமிழக அரசு 1982 டிசம்பர் 13 அன்று இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜே.ஏ. அம்பாசங்கர் அதன் தலைவராக இருந்தார். சமூக மற்றும் கல்வி ரீதியான பிற்படுத்தப்பட்ட நிலையை பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இந்த ஆணையம் ஆய்வு செய்தது.
1985: MBC என்ற தனி வகைப்பாடு
985 ஜூலை 30 அன்று தமிழக அரசு G.O. Ms. No.1564 மூலம் மாநிலம் முழுவதும் 201 சமூகங்களை Backward Classes பட்டியலில் அறிவித்தது. அதே நாளில் வெளியிடப்பட்ட G.O. Ms. No.1566 மூலம் 39 சமூகங்கள் Most Backward Classes (MBC) என்றும், G.O. Ms. No.1567 மூலம் 68 சமூகங்கள் Denotified Communities (DNC) என்றும் வகைப்படுத்தப்பட்டன.
இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்குள் MBC மற்றும் DNC சமூகங்களுக்கான தனித்த வகைப்பாடு அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது. ஆனால் இந்தக் கட்டத்தில் MBC/DNC-க்கு தனியாக 20% இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை; அது 1989-ல்தான் வழங்கப்பட்டது.

வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டம்
தனி இடஒதுக்கீட்டுக்கான கோரிக்கை
1980களில் வன்னியர் சமூகத்திற்குத் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்தது. வன்னியர் சங்கம். டாக்டர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. இந்த வன்னியர் சங்கமே பின்னாளில் பாமக-வாக உருவானது.
1987: ஒரு வார சாலை மறியல்
1987 செப்டம்பர் 17 முதல் 23 வரை வடதமிழகத்தில் ஒரு வார கால பெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது; பல இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது.

காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 21 பேர்
1987 இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர்.

கலைஞர் ஆட்சியில் MBC/DNCக்கு 20%
1989: தனி 20% இடஒதுக்கீடு
1989 மார்ச் 28 அன்று, கலைஞர் தலைமையிலான தமிழக அரசு G.O. Ms. No.242 மூலம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த 50% இடஒதுக்கீட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு (MBC/DNC) தனியாக 20% இடஒதுக்கீட்டை வழங்கியது. மீதமுள்ள 30% இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (BC) ஒதுக்கப்பட்டது.
வன்னியர்கள் உட்பட 108 சமூகங்கள்
இந்த 20% இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட தனி ஒதுக்கீடு அல்ல. வன்னியர்கள் உட்பட மொத்தம் 108 சமூகங்கள் இந்த MBC/DNC ஒதுக்கீட்டின் பயனைப் பெற்றன.
69% ஆன தமிழக இடஒதுக்கீடு
1990: பழங்குடியினருக்கு தனி 1%
1990 ஜூன் 22 அன்று Scheduled Tribes-க்கு தனியாக 1% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்மூலம் தமிழக இடஒதுக்கீட்டு அமைப்பு:
BC – 30%
MBC/DNC – 20%
SC – 18%
ST – 1%
என மொத்தம் 69% ஆனது.

மண்டல் ஆணையம்: தேசிய அளவில் கலைஞரின் பங்கு
1988: தேசிய முன்னணியில் சமூகநீதிக் குரல்
1988 செப்டம்பர் 17 அன்று சென்னையில் நடைபெற்ற தேசிய முன்னணி தொடக்க நிகழ்வில், மத்தியில் ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கலைஞர் வலியுறுத்தினார்.
1989: தேசிய முன்னணி அரசில் திமுக
1989 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வி.பி. சிங் தலைமையில் தேசிய முன்னணி அரசு அமைந்தது. திமுக அந்த தேசிய முன்னணியின் அங்கமாக இருந்தது; திமுக மூத்த தலைவர் முரசொலி மாறன் மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றார்.
கலைஞர் அரசு நிறைவேற்றிய தீர்மானம்
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கலைஞர் தலைமையிலான தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

7 ஆகஸ்ட் 1990: வி.பி. சிங்கின் அறிவிப்பு
1990 ஆகஸ்ட் 7 அன்று பிரதமர் வி.பி. சிங் மண்டல் ஆணையத்தின் முக்கியப் பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் முடிவை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். மத்திய அரசுப் பணிகளில் OBC மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்று முடிவு இதன் மூலம் எடுக்கப்பட்டது.
மண்டல் அமலாக்கத்தை வரவேற்ற கலைஞர்
வி.பி. சிங் மண்டல் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தபோது, அதை பிற்படுத்தப்பட்ட மக்களின் வெற்றி என கலைஞர் வரவேற்றார். மண்டல் அமலாக்கத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தபோதும், கலைஞர் தலைமையிலான திமுக வி.பி. சிங்கின் முடிவுக்கு உறுதியான ஆதரவு அளித்தது.

தமிழகத்தில் மண்டலுக்கு ஆதரவு
மண்டல் அமலாக்கத்திற்கு எதிராக வடஇந்தியாவில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் கலைஞர் மண்டல் இடஒதுக்கீட்டை ஆதரித்து பிரசாரம் செய்தார். வி.பி. சிங் அரசு வீழ்ந்த பின்னரும் கலைஞர் தலைமையிலான திமுக, மண்டல் சமூகநீதிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களை நடத்தியது.
தமிழ்நாட்டில் இன்றைக்கும் வி.பி. சிங் “சமூகநீதிக் காவலர்” எனப் போற்றப்படுகிறார்.

இந்திரா சஹானி தீர்ப்பும் 50% உச்சவரம்பும்
1992: இந்திரா சஹானி வழக்கு
மண்டல் இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வு 1992 நவம்பர் 16 அன்று தீர்ப்பளித்தது. OBC இடஒதுக்கீட்டின் அரசியலமைப்புச் செல்லுபடியை நீதிமன்றம் உறுதி செய்தது.
50% உச்சவரம்பு
அதே தீர்ப்பில் இடஒதுக்கீடு பொதுவாக 50%-ஐத் தாண்டக்கூடாது என்ற வரம்பை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. இதனால் தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பது மிகப்பெரிய சட்ட–அரசியல் பிரச்சினையாகியது.

ஜெயலலிதா ஆட்சியில் 69%-க்கு சட்டப் பாதுகாப்பு
1993: தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்
1993 நவம்பர் 9 அன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் 69% இடஒதுக்கீட்டைத் தொடர்ந்து பாதுகாக்க மத்திய அரசு அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1993: அனைத்துக் கட்சிக் கூட்டம்
1993 நவம்பர் 26 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டமும் தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஜெயலலிதா அரசு கொண்டு வந்த தனிச்சட்டம்
ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு 69% இடஒதுக்கீட்டை சட்டரீதியாகத் தொடர தனிச்சட்டத்தை நிறைவேற்றியது.
1994: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
தமிழக மசோதாவுக்கு 1994 ஜூலை 19 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். அது Tamil Nadu Act 45 of 1994 ஆக அறிவிக்கப்பட்டது.
76-வது அரசியலமைப்புத் திருத்தம்
தமிழக அரசு இந்தச் சட்டத்தை அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது. Constitution (Seventy-Sixth Amendment) Act, 1994 மூலம் Tamil Nadu Act 45 of 1994, Ninth Schedule-ல் Entry 257A ஆகச் சேர்க்கப்பட்டது.
69% இடஒதுக்கீட்டுக்கான பாதுகாப்பு
இதன் மூலம் தமிழகத்தின்:
BC – 30%
MBC/DNC – 20%
SC – 18%
ST – 1%
என்ற 69% இடஒதுக்கீட்டு அமைப்புக்கு சட்ட–அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.

கலைஞர் ஆட்சியில் உள் இடஒதுக்கீடுகள்
2007: இஸ்லாமியர்களுக்கு 3.5%
கலைஞர் தலைமையிலான அரசு 2007-ல் Backward Classes-க்கான 30% இடஒதுக்கீட்டிற்குள் Backward Class Muslims-க்கு 3.5% உள் இடஒதுக்கீடு வழங்கியது.
இதன்படி:
BC – 26.5%
BC Muslims – 3.5%
என்ற நடைமுறை உருவானது.
இது Tamil Nadu Act 33 of 2007 மூலம் வழங்கப்பட்டது.
2009: அருந்ததியர்களுக்கு 3%
கலைஞர் அரசு Scheduled Castes-க்கான 18% இடஒதுக்கீட்டிற்குள் அருந்ததியர்களுக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கியது. இதற்காக Tamil Nadu Arunthathiyars Special Reservation Act, 2009 கொண்டுவரப்பட்டது. இந்த 3% என்பது 69%-க்கு மேலான கூடுதல் இடஒதுக்கீடு அல்ல; SC-க்கான 18% இடஒதுக்கீட்டிற்குள் வழங்கப்பட்ட உள் இடஒதுக்கீடு.

வன்னியர் 10.5% உள் இடஒதுக்கீடு
2021: அதிமுக அரசின் 10.5%
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு 2021 பிப்ரவரி 26 அன்று MBC/DNCக்கான 20% இடஒதுக்கீட்டிற்குள் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது.
MBC/DNC 20% மூன்றாகப் பிரிப்பு
2021 சட்டம் MBC/DNCக்கான 20% இடஒதுக்கீட்டை உள் பிரிவுகளாகப் பிரித்தது. இதில் வன்னியர்களை உள்ளடக்கிய பிரிவுக்கு 10.5% ஒதுக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கிய இந்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
2021: உயர்நீதிமன்றம் ரத்து
2021 நவம்பர் 1 அன்று சென்னை உயர்நீதிமன்றம் வன்னியர் 10.5% உள் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை செல்லாது என்று அறிவித்தது.
2022: உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது
2022 மார்ச் 31 அன்று உச்சநீதிமன்றம் வன்னியர் உள் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை செல்லாது என அறிவித்த முடிவை உறுதி செய்தது. ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்குள் துணைப்பிரிவு செய்வதற்கான மாநிலத்தின் அதிகாரத்தையே நீதிமன்றம் மறுக்கவில்லை.
10.5% ஏன் செல்லவில்லை?
வன்னியர்களுக்கு 10.5% என்ற அளவில் தனி உள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கான போதுமான, சமகால, அளவிடக்கூடிய தரவுகள் – Quantifiable Data – இல்லை என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அடிப்படையாக அமைந்தது.
தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டு அமைப்பு
இன்றைய அடிப்படை கட்டமைப்பு
தமிழகத்தின் இடஒதுக்கீட்டு கட்டமைப்பில்:
Backward Classes – 26.5%
Backward Class Muslims – 3.5%
Most Backward Classes / Denotified Communities – 20%
Scheduled Castes – 18%
Scheduled Tribes – 1%
மொத்தம் – 69%
தொடரும் சமூகநீதிப் பயணம்
1921-ல் தொடங்கிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப் பயணம், அரசாணைகள், போராட்டங்கள், ஆணையங்கள், அரசியலமைப்புத் திருத்தங்கள், சட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளைக் கடந்து இன்று 69% இடஒதுக்கீட்டு கட்டமைப்பாகத் தொடர்கிறது. தமிழகத்தின் சமூகநீதிப் பயணம் இன்னும் தொடர்கிறது.
