திமுக ஆட்சிக் கால குற்ற சம்பவங்களை டேட்டாவுன் சொல்லிவிட்டு ஒதுங்கும் கீழான அரசியலை செய்யமாட்டேன் என்று முதல்வர் ஜோசப் விஜய் (CM Vijay) தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று (செப்டம்பர் 7) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் ஜோசப் விஜய் அளித்த பதில்: ஒரு மாநிலத்தோட முன்னேற்றம் என்பது சாலைகள் அமைப்பதால் மட்டுமோ, தொழிற்சாலைகள் வருவதால் மட்டுமோ தீர்மானிக்கப்படுவது இல்லை. அந்த மாநிலத்தில் வாழ்கிற ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு பாதுகாப்பாகவும், பயமில்லாமலும் வாழ்கிறார் என்பதில்தான் உண்மையான முன்னேற்றம் இருக்கிறது.
சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் முதலீடுகள் வரும்; புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்; சுற்றுலாத்துறை வளரும்; பெண்களும் இளைஞர்களும் சுதந்திரமாகக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பங்கேற்பார்கள்.
அதனால் காவல்துறை என்பது வெறும் குற்றவாளிகளைக் கைது செய்யும் அமைப்பு மட்டுமல்ல. ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக அமைதிக்கும், முதலீட்டுச் சூழலுக்கும், மக்களின் நம்பிக்கைக்கும் அடித்தளமாக விளங்கும் ஒரு முக்கியமான அமைப்பாகும்.
காவல்துறையைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான கருத்தை இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்குக் காவல்துறை உற்ற நண்பனாகவும், சட்டத்தையும் பிறரின் உரிமைகளையும் மீறுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் இருக்க வேண்டும். ஒரு காவலர் இந்த இரண்டு பண்புகளையும் கொண்டவராக இருக்க வேண்டும்.
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்குக் காவலர்கள் எந்தவித அச்சமும் இடையூறும் இன்றி தங்களது பணியை நேர்மையாகவும் துணிச்சலாகவும் மேற்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு இந்த அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது.

முதலமைச்சராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும், எந்த அரசியல் அதிகாரத்திற்கும் காவல்துறையின் சட்டபூர்வ நடவடிக்கைகளில் தேவையற்ற தலையீடு இருக்கக்கூடாது என்பதை கடுமையாக வலியுறுத்தியுள்ளேன்.
குற்றவாளி யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை வேண்டும் என்பதும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுமே இந்த அரசின் நிலைப்பாடு.
இந்த அவையில் மாண்புமிகு உறுப்பினர்கள் பலரும் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து தங்களது கருத்துகளை முன்வைத்துள்ளனர். இந்த அரசைக் குறை கூறும் நோக்கில் கூறியவர்களின் கருத்தைக்கூட, மக்களின் பாதுகாப்பு குறித்த அவர்களின் கவலையையும் அக்கறையையும் இந்த அரசு மிகுந்த பொறுப்புணர்வுடன் எடுத்துக்கொள்கிறது.
உள்நோக்கத்துடன் கூடிய கருத்தாக இருந்தாலும்கூட, அதிலும் உண்மை இருக்கிறதா எனப் பொறுப்புடன் பரிசீலித்து, ஏற்க வேண்டியதை ஏற்பதில் எந்தப் பாகுபாடும் காட்ட மாட்டோம்.
நமது தமிழ் மரபில் நல்லாட்சிக்கும் நீதிக்கும் மிக உயர்ந்த இடம் வழங்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு எப்படி செயல்பட வேண்டும் என்பதை நமது திருவள்ளுவர் அன்றே கூறியுள்ளார். யாரிடமும் சார்பில்லாமல், நன்றாக ஆராய்ந்து, நடுநிலையுடன் நீதி வழங்குவதே முறையான ஆட்சி என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் தந்தை பெரியார் சமூக நீதியை வலியுறுத்தினார். காமராஜர் நேர்மையான நிர்வாகத்தை வலியுறுத்தினார். பேரறிஞர் அண்ணா மக்கள் நல ஆட்சியை வலியுறுத்தினார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஏழை, எளிய மக்களின் நலனை தனது அரசின் மையமாகக் கொண்டிருந்தார்.
இந்த மாபெரும் ஆளுமைகளின் சிந்தனைகளையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, காவல்துறை என்பது அதிகாரத்தின் அடையாளமாக இருக்கக்கூடாது; அது மக்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
குற்றத்தைப் பார்க்கும் பார்வையில் மாற்றம் வேண்டும். ஒரு குற்றம் நடந்துவிட்டது என்பதற்காக மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. தனிப்பட்ட குற்றச் சம்பவத்திற்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம்-ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு இருக்கிறது.
ஒரு குற்றம் நடந்துவிட்ட பிறகு அதற்கான பொறுப்பை அரசு மீது சுமத்தி மற்றவர்கள் ஒதுங்கிவிட முடியாது. ஏனெனில் அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியவை அல்ல.
ஒவ்வொரு குற்றத்திற்குப் பின்னாலும் ஒரு குடும்பப் பிரச்சினை இருக்கலாம்; சொத்துத் தகராறு இருக்கலாம்; முன்விரோதம் இருக்கலாம்; பழிவாங்கும் மனநிலை இருக்கலாம்; போதைப்பொருள் பயன்பாட்டின் தாக்கமாகவும் இருக்கலாம்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சட்டத்தின் மீதான பயமின்மை, சிலரின் ஆதிக்கத்தின் கீழ் காவல்துறையின் செயல்பாடு, போதைக் கலாச்சார வளர்ச்சி போன்றவையும் காரணமாக இருக்கலாம்.
சமூகக் கட்டுப்பாடு குறைதல், சாதி அடையாளம், நிலம் மற்றும் அதிகாரத்தின் மீதான போட்டி, கலப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு, உள்ளூர் அதிகாரப் போட்டி, அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கம், சமூக வலையமைப்புகளின் தாக்கம் போன்ற பல்வேறு சமூகக் காரணிகளும் குற்றங்களுக்குப் பின்னணியாக இருக்கலாம்.
எனவேதான் 30.7.2026 அன்று நடைபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில், காவல்துறையின் பணி என்பது குற்றவாளியைக் கைது செய்வதோடு முடிந்துவிடக்கூடாது; குற்றம் உருவாகும் சூழலைக் கண்டறிந்து, அந்தச் சூழலையே மாற்றி, குற்றம் நடைபெறுவதற்கு முன்பே தடுப்பதே நவீன காவல்துறையின் இலக்காக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.
இதற்கு ஒவ்வொரு காவல் நிலையமும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வார்டிலும், ஒவ்வொரு தெருவிலும் நிலவும் பிரச்சினைகள் குறித்து காவல்துறையினர் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று சட்டம்-ஒழுங்கு என்பது தெருவில் நடைபெறும் குற்றங்களுடன் மட்டும் முடிவதில்லை. நாம் டிஜிட்டல் உலகத்திற்குள் நுழைந்துவிட்டோம். அதனால் சைபர் குற்றங்களும் நவீன சட்டம்-ஒழுங்கின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன.
இணைய மோசடி, போலி முதலீட்டுத் திட்டங்கள், ஓடிபி மற்றும் வங்கி மோசடிகள், போலி வேலைவாய்ப்பு, சமூக ஊடக மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொழில்நுட்பத்தின் வாயிலாக நடைபெறுகின்றன.
இதற்குக் காரணம் தொழில்நுட்பம் மட்டுமல்ல. டிஜிட்டல் கல்வியறிவு குறைவு, அவசரமாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலை, சரிபார்க்காமல் முதலீடு செய்வது, முதியோருக்குப் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த போதிய அறிமுகமின்மை போன்ற காரணிகளும் சைபர் குற்றங்களுக்கு வாய்ப்பளிக்கின்றன.
எனவே சைபர் குற்றங்களைத் தடுப்பதற்குக் காவல்துறையின் தொழில்நுட்பத் திறனை மட்டும் அதிகரிப்பது போதாது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த அடிப்படைக் கல்வி வழங்கப்பட வேண்டும்.
காவல்துறை, வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்படும் ஒரு வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
ஒரு குற்றவாளியைக் கைது செய்வது காவல்துறையின் வெற்றி. ஆனால் ஆயிரம் பேர் அந்தக் குற்றத்திற்கு இரையாகாமல் தடுப்பது அதைவிடப் பெரிய வெற்றி.
நாம் நமது காவல்துறையை தகவல் சார்ந்த காவல்துறை, தொழில்நுட்பம் சார்ந்த காவல்துறை, மக்களுடன் இணைந்த காவல்துறை, குற்றத்தை முன்கூட்டியே தடுக்கும் காவல்துறை, சட்டத்தின் முன் நடுநிலையாகச் செயல்படும் காவல்துறை என்ற புதிய பரிமாணத்தில் உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஒவ்வொரு காவல் நிலையமும் ‘கிரைம் மேப்பிங்’ (Crime Mapping) மற்றும் ‘பிரிவென்டிவ் போலீசிங்’ (Preventive Policing) முறையில் செயல்படத் தேவையான வழிகளை ஆராய்ந்து இந்த அரசு செயல்படுத்தும்.
சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த அமுதன் கொலை மற்றும் சென்னை திருவொற்றியூரில் நடந்த தனுஷ்குமார் கொலை போன்ற சில கொலைச் சம்பவங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
ஒரு மாணவன் உயிரிழப்பது என்பது மிகவும் வேதனையான சம்பவம். அந்த மாணவனை இழந்த பெற்றோரின் மனவேதனையை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
இந்த நிகழ்வில் குற்றத்தில் ஈடுபட்ட 36 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம் தனது கடமையை சமரசமின்றிச் செய்து வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை வழங்கப்படும்.
ஆனால் தண்டனை வழங்குவது மட்டுமே இந்த அரசின் நோக்கமல்ல. மாணவர்கள் குற்றத்தில் ஈடுபடாத வகையில் அவர்களை வழிநடத்துவதும், அவர்களது குடும்பங்களோடு இணைந்து செயல்படுவதும் நமது பொறுப்பாகும்.
ஒரு குழந்தை குற்றவாளியாக வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் விரும்புவதில்லை. ஆனால் சமூகச் சூழல், குடும்பத்திலிருந்து கிடைக்கும் அரவணைப்பின்மை, தவறான நட்பு, சமூக ஊடகங்களின் தாக்கம், போதைப்பொருள் பயன்பாடு, சரியான புரிதலும் பக்குவமும் இன்றி எல்லாவற்றிலும் தன்னை ஒரு பெரிய பிம்பமாக முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற மனநிலை, சட்ட அறிவின்மை, இதனால் குடும்பத்தினருக்கு ஏற்படும் மனவேதனை பற்றி அறியாதது போன்ற பல்வேறு காரணங்களால் இளம் வயதினர் குற்றச் செயல்களில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது.
இதற்கெல்லாம் யார் காரணம்?
இந்த நிகழ்வுகளைப் பொறுத்தவரை யார் மீது பழி போடலாம் என்று அரசியல் ரீதியாகச் சிந்திக்கும் எதிர்க்கட்சியினருக்கு இணையாக, நானும் 2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்றச் சம்பவங்களை டேட்டாவுடன் கூறிவிட்டு ஒதுங்க மனம் வரவில்லை.
அதுபோன்ற கீழான அரசியலை நாம் செய்வதும் இல்லை. செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
ஒரு மாணவனை அடிக்கும்போது, அந்த மாணவனைத் தாக்கும் பிற மாணவர்கள் எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாத அளவிற்கு உருவாகியிருக்கிறார்கள் என்பதை உளவியல் ரீதியாக நாம் மறுக்க முடியாது.
‘போதை கலாச்சாரம்’ என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி, ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையும் குறைகூறிவிட்டு நாம் தப்பித்துக்கொள்வது ஒரு சிறந்த தலைமைப் பண்பு அல்ல. அதை நமது அரசு செய்யாது.
இதுபோன்ற சம்பவங்களால் ஒரு மாணவனின் உயிர் போவது மட்டுமல்லாமல், அதில் சம்பந்தப்பட்ட அனைவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடுகிறது. அனைவரின் குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
இதை மாணவர்கள் உணரவில்லை என்றால், அவர்களுக்குச் சரியான பாதை இதுவரை வகுத்துத் தரப்படவில்லை என்பதுதான் உண்மை.
இதற்கும் 100 நாட்களான இந்த அரசுதான் காரணமா?
தாக்கப்பட்ட மாணவர்களின் அண்ணனாகவும், தாக்கிய மாணவர்களின் அண்ணனாகவும், அவர்களின் பொறுப்பான குடும்ப உறவாகவும் இருந்து சிந்தித்துப் பார்க்கிறேன்.
எனவே இத்தகைய நிகழ்வுகளை மேம்போக்காக எதிர்கொண்டு, மாணவர்களை ‘போதை கலாச்சாரம்’ என்ற ஒற்றை வார்த்தையில் கொச்சைப்படுத்தி ஒடுக்காமல், அனைத்து குடும்பங்களிலும் ஒருவனாக இருந்து, உளவியல் ரீதியாகவும் பொறுப்புடனும் சிந்தித்து, மாணவர் சமுதாயத்தைச் சரியான பாதைக்குக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு எடுக்கும் என்பதை மாண்புமிகு உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் விஜய் கூறினார்.
