முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின் பல்வேறு சம்பவங்களை வரிசைப்படுத்தி கடுமையாக விமர்சித்தார் முதல்வர் விஜய்.
தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் விஜய் இன்று ( செப்.7) அளித்த பதில்: 03.09.2026 அன்று காவல்துறை மானியக் கோரிக்கையில் பேசுறப்போ, முதல்வர் பதில் சொல்றதைப் பற்றி ஏதோ நாகரிகமாகப் பேசுற மாதிரியே நக்கலாகவும், நையாண்டியாகவும் மாண்புமிகு எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் பேசியதையெல்லாம் மக்கள் லைவ்விலேயே பார்த்தாங்க.
நம்மைப் பொறுத்தவரைக்கும், சட்டமன்றத்தில் ஒவ்வொரு உறுப்பினரோட கேள்விக்கும் எல்லா நேரத்திலும் இடைமறிச்சுப் பேசுறது ஒரு தலைமைக்கு அழகு அல்ல. எந்தவித முன்தயாரிப்பும் இல்லாமல் irresponsible-ஆ பேசுறதும் சரியா இருக்காது.
ஏன்னா, நாம் இங்க பேசுறது நமக்காக மட்டுமல்ல; எட்டு கோடி மக்களோட நலன்களைத் தீர்மானிக்கிறதுக்காக அப்படிங்கிற அடிப்படைப் புரிதல் நமக்கு இருக்கு.
Yes, I do prepare and speak. I speak my heart for my people.
அதே மாதிரி, கூட்டுப் பொறுப்பை உணர்ந்து அமைச்சர்கள் பதில் சொல்றது எல்லா ஆட்சியிலும் நடக்கிற ஒன்றுதான். அது என்னவோ தற்போதைய எதிர்க்கட்சிக்கு மட்டும் ஏனோ தெரியல, வசதியா மறந்துடுறாங்க.
அதனால்தான் முதலமைச்சரைப் பற்றியும், அமைச்சர்களைப் பற்றியும் ஏதோ நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசுறதை ஒரு மிகப்பெரிய maturity-ஆ நினைச்சுக்கிறாங்க போல.
அதனால் நமக்கு ஒண்ணும் இல்லை.
எல்லா உறுப்பினர்களும் அவங்க தொகுதியைச் சார்ந்த மக்களின் குரலாக ஒலிக்கிறாங்க. அப்படி இருக்கிறப்போ, அதைப் பொறுமையாகக் கேட்டு, அதற்குப் பொறுப்பாகப் பதிலளிக்கிறதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
நாம் பொறுமையாக இருப்பதற்கான காரணத்தை எதிர்க்கட்சிக்குத் தெளிவுபடுத்திய பேரவைத் தலைவர் அவர்களே, தங்களுக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எதிர்க்கட்சியோட தலைமை பேசியதை சபையில் இருந்து முழுசாக நாம் கேட்டோம். அதே மாதிரி அவங்களும் கேட்கணும். அதைத்தான் நாம் அன்னைக்கும் சொன்னோம்.
மக்களின் குரலாக ஒலிக்கிற மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்றது மட்டுமல்லாமல், அதன் மீது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் நாம் எப்போதும் பின்வாங்குற ஆட்கள் இல்லை.
இந்த ஆட்சியில் திட்டங்களுக்குப் பெயர் மாற்றப்பட்டுள்ளது, திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுன்னு திமுக சொன்னாங்க.
திமுக ஆட்சியில் ரத்தான திட்டங்கள்
2021-ல் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் எதற்காக ரத்து செய்யப்பட்டன என்பது தெரியாது. ஆனால் அதையெல்லாம் படிச்சா, அதுக்கென்று தனியாக ஒரு பதிலுரையே கொடுக்கலாம் போல.
சிலவற்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தாலிக்குத் தங்கம் திட்டம், அம்மா இருசக்கர வாகனத் திட்டம், இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், அம்மா மினி கிளினிக் திட்டம் — இந்த மாதிரி பல திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
அது இல்லாமல், விலையில்லா லேப்டாப் திட்டத்தை நாலரை வருஷமா ரத்து செஞ்சுட்டு, தேர்தல் வருதுன்ன உடனே கடைசி நாலு மாசத்துல மட்டும் செயல்படுத்தினாங்க.
அதுமட்டுமா?
தமிழ்நாட்டில் 2021-க்கு முந்தைய அதிமுக அரசால் அறிவிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்ட அல்லது தொடங்கப்பட்ட பல புதிய திட்டங்கள் முந்தைய திமுக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ரத்து செய்யப்பட்ட சில திட்டங்களை இங்கு சுட்டிக்காட்ட விரும்புறேன்.
ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் கூனிமேட்டில் அடிக்கல் நாட்டப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், ரூ.235 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்ட அழகன்குப்பம் மீன்பிடித் துறைமுகத் திட்டம் ஆகிய திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு செயலாக்கத்தில் இருந்த டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்பட்டது.
ஒரு மாவட்டத்திலேயே இத்தனை மூடுவிழா நடத்தினீர்கள் என்றால், மாநிலம் முழுவதும் உங்கள் ஆட்சியில் எத்தனை திட்டங்களுக்கு மூடுவிழா கண்டீர்கள் என்பதைப் பட்டியலிட்டால் அதற்கே ஒரு நாள் தேவைப்படும்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான உரையின்போது காவல்துறைக்குப் பாடம் எடுக்க முயன்றாங்க.
பாடம் எடுப்பதில் தவறில்லை. ஆனால் பாடம் எடுக்கிறவங்க, அவங்க ஆட்சியே ஒரு பாடமாக இருந்திருந்தால் இப்ப பாடம் எடுக்கலாம்.
ஆனால் நடந்ததெல்லாம் என்ன தெரியுமா?
திமுக ஆட்சிக் கால சம்பவங்கள்
கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாடு கண்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், கள்ளச்சாராய உயிரிழப்புகள், போதைப்பொருள் கலாச்சாரம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் எழுந்த கேள்விகள் என அனைத்தும் இன்னும் மக்களின் நினைவில் நீங்காமல் அப்படியே இருக்கின்றன.
இதெல்லாம் திமுகவுக்குத் தெரியுமா?
சட்டம்-ஒழுங்கைப் பற்றிப் பேசுறதுக்கு முன்னாடி உங்க ஆட்சியைக் கண்ணாடியில் ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கிட்டா நல்லது.
கடந்த 60 ஆண்டு கால ஆட்சியில், 1971-ல் மதுவிலக்கை ரத்து செய்து தமிழ்நாடு எங்கும் மதுவைப் பரப்பியது யாரு?
“சுற்றிலும் நெருப்பு எரியும்போது கற்பூரம் எப்படித் தப்பிக்க முடியும்?”னு சொல்லி, அண்டை மாநிலங்கள் மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டும்போது தமிழ்நாடு மட்டும் வருவாய் இழக்கிறதான்னு சொல்லி, மதுவிலக்கை ரத்து செய்து தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் சீரழித்தது யாரு?
மக்களைச் சீரழித்தது போதாதுன்னு, ஆற்று மணல் கொள்ளை, இயற்கை வளங்கள் சுரண்டல்னு இயற்கை வளங்களையும் சுரண்டிச் சீரழித்தது யாரு?
எல்லாக் கேள்விக்கும் ஒரே பதில்தான்.
திமுக… திமுக… திமுக.
பல ஆண்டுகளாகத் தேக்கம் அடைந்துள்ள இந்த எல்லா நிர்வாகக் கோளாறுகளையும் சீர்செய்யப் போதுமான கால அவகாசமும், உறுதியான நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன. அதைத்தான் நம் அரசு செய்து வருகிறது.
இதெல்லாம் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே இருக்கும் திமுகவுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் நினைவூட்ட விரும்புறோம்.
தமிழ்நாட்டு மக்கள் திமுக செஞ்ச எல்லா வேலையையும் மறந்துட்டதா நினைக்கிறாங்க.
தமிழ்நாட்டு மக்களின் நினைவாற்றல் மிகவும் வலிமையானது. அதற்கான பதிலைத்தான் நம்ம தமிழ்நாட்டு மக்கள் தேர்தல் தீர்ப்பின் மூலம் வழங்கியிருக்காங்க.
இப்பவும் சொல்றோம்.
நம்ம அரசு குற்றச்சாட்டுகளுக்கு வார்த்தைகளால் மட்டும் பதிலளிக்கும் அரசு இல்லை. வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் செயல்பாடுகளால் மட்டுமே பதிலளித்து வருகிறது.
மக்கள் நம்மேல் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். இனியும் அப்படித்தான் இருப்போம்.
கடந்த திமுக ஆட்சியில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிர்வாகத்தில் அதிகமாக எழுந்த விமர்சனங்களில் முக்கியமானவை, முதல் தகவல் அறிக்கை — FIR — பதிவு செய்வதில் ஏற்பட்ட காலதாமதம், அரசியல் தலையீடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள்தான் என்பது எல்லாருக்கும் தெரியும்.
காவல்துறையின் சட்டப்பூர்வக் கடமையான FIR பதிவுகூட சில வழக்குகளில் உடனடியாக நடைபெறவில்லை என்றும், குறிப்பாக ஆளுங்கட்சியினர் தொடர்பான புகார்களில் நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டதாகவும் அன்றைய எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர்.
கடந்த கால திமுக ஆட்சியில் கட்சி நிர்வாகிகள் எத்தனை பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்ற உண்மைக் கதையெல்லாம் உள்ளது.
அவற்றை நம்மாலும் பட்டியலிட முடியும்.
ஆனால் அந்தப் பட்டியல் பெருசா இருக்கிறதுனால, ஒரு சில samples மட்டும் படிக்கலாம்னு பார்த்தா, samples-ஏ இவ்வளவு பெருசா இருக்கு.
இதைத்தான் நான் சொன்னேன்.
Yes, I do prepare.
நான் பொறுப்பாக, கவனமாக prepare பண்ணி வந்து அந்த சில samples-ஐ படிக்கிறேன்.
- கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி. ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் பணிபுரிந்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு என்பவர், கடந்த 20.09.2021 அன்று உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அவரது மரணத்தைத் தற்கொலை என்று சித்தரிக்க முயற்சி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
கடும் கண்டனங்களுக்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி. ரமேஷ் 11.10.2021 அன்று கைது செய்யப்பட்டார்.
- விருதுநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளரின் மகன் திரு. ஹரிகரன் எனும் சரவணன், 17-வது வார்டு உறுப்பினர் திரு. ஜீனைத் மற்றும் ஆறு பேர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கடுமையான கண்டனங்களுக்குப் பின்னரே வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
- சென்னை விருகம்பாக்கத்தில் 31.12.2022 அன்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவரிடம், 129-வது வட்ட திமுக இளைஞரணி செயலாளர் பிரவீன் மற்றும் திமுக உறுப்பினர் ஏகாம்பரம் ஆகியோர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இச்சம்பவம் தொடர்பாக பெண் காவலர் புகார் அளித்தும், முதலில் சமூகப் பதிவேடு மனு எண் — CSR — மட்டும் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
மேலும், பெண் காவலரின் புகாரை வாபஸ் பெற பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து 03.01.2023 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவ்விருவரும் கைது செய்யப்பட்டு 04.01.2023 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பெண் காவலர்கள் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டதையடுத்து இவ்வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திமுக ஆட்சியில் பெண் காவலருக்கே பாதுகாப்பற்ற சூழல் இருந்தது என்பதற்கு இச்சம்பவமே சான்று.
- 27.12.2023 அன்று திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு, வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. ஆர். ஸ்ரீதரன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுவாமி தரிசனம் செய்ய நுழைந்ததாகவும், அதுகுறித்து காவல் ஆய்வாளர் கேள்வி எழுப்பியதால் ஸ்ரீதரனின் மனைவி சிவசங்கரி காவல் ஆய்வாளரைக் கன்னத்தில் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அந்தச் சம்பவத்தில் திருக்கோவில் ஊழியர் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முக்கியக் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஸ்ரீதரன் மற்றும் அவரது மனைவி இருவரும் கைது செய்யப்படாமல், பின்னர் நீதிமன்றத்தின் மூலம் ஜாமீன் பெற்றுக்கொள்ள முந்தைய திமுக அரசு உதவியாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
- பல்லாவரம் தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ. கருணாநிதியின் மகன் இல்லத்தில் பணிபுரிந்த பணிப்பெண் துன்புறுத்தப்பட்டது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
தனக்கு நேர்ந்த கொடுமையைப் பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட காணொளி 18.01.2024 அன்று ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட பின்னரும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
பின்னர் 20.01.2024 அன்று பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஐந்து நாட்களுக்குப் பின்னர் ஆண்டோ மதிவாணன் மற்றும் மர்லின் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக எழுந்த முக்கியக் குற்றச்சாட்டுகளில், காலதாமதமாக FIR பதிவு செய்வதும் ஒன்று.
குறிப்பாக திமுக நிர்வாகிகள் அல்லது ஆதரவாளர்கள் மீது அளிக்கப்பட்ட புகார்களில் உடனடியாக FIR பதிவு செய்யாமல் காலதாமதம் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
எதிர்க்கட்சி நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவங்களில் முதலில் CSR மட்டும் வழங்கி, FIR பதிவு செய்யத் தாமதம் ஏற்பட்டதாகப் பல புகார்கள் எழுந்தன.
பெண்களுக்கு எதிரான வன்முறை, நில அபகரிப்பு, மிரட்டல் போன்ற புகார்களிலும் FIR பதிவு தாமதமானதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
மிக முக்கியமாக, சில வழக்குகளில் FIR பதிவு செய்ய காவல்துறை தாமதித்ததை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்து, உடனடியாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட சம்பவங்களும் இடம்பெற்றன.
நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடுகள்
உதாரணமாகச் சொல்லணும்னா, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்டோர் மீது எழுந்த குற்றச்சாட்டுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்யாமல், ‘முதல்கட்ட விசாரணை’ என்ற பெயரில் இழுத்தடிப்பதை அனுமதிக்க இயலாது என சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கண்டனம் தெரிவித்தது.
கடந்த 31.01.2025 அன்று, சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகினார்.
அப்போது காவல்துறை FIR பதிவு செய்வதில் காலதாமதம் செய்வதாக நீதிமன்றம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்ததோடு, அப்போதைய உள்துறைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டது.
- கடந்த 10.03.2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி காணாமல் போய், பின்னர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்திலும் FIR காலதாமதமாகப் பதிவு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை
பிஎஸ்பி கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காலம் தாழ்த்தி சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
முந்தைய ஆட்சியில் இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக உடனடியாக கைது செய்யப்படாமலும், வழக்குத் தாமதமாகப் பதிவு செய்யப்பட்டதாகவும் அல்லது வழக்கே பதிவு செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனால் நமது ஆட்சியில் எவ்விதப் பாகுபாடும் இன்றி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பட்டியலை எதிர்க்கட்சிக்காரங்க வாசிச்சாங்க.
எந்த வழக்காக இருந்தாலும், குற்றச்சாட்டு எழுந்தவுடன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதற்குப் பல சம்பவங்கள் உதாரணமாக உள்ளன.
தூத்துக்குடி, சென்னை மயிலாப்பூர், ஆலந்தூர், ராணிப்பேட்டை மற்றும் சேலம் உள்ளிட்ட இடங்களில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தேவையான இடங்களில் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சில வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் மாறுபட்ட வாக்குமூலங்கள் காரணமாக உண்மைத் தன்மையைக் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே, ஆளுங்கட்சியினராக இருந்தாலும் குற்றச்சாட்டு எழுந்தால் வழக்குப் பதிவு செய்து, தேவையான இடங்களில் கைது செய்தும், கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கையும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
