‘நல்ல சாவே வராதா?.. சத்தியமா புரியல’ ஆர்.எஸ் பாரதி பேச்சுக்கு விஜய் பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

கடந்த 60 வருடங்களாக உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களை பார்த்து எப்படி நல்ல சாவே வராது என்று உங்களால் பேச முடிகிறது என முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று (செப்டம்பர் 7) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் விஜய் பதில் அளித்து பேசுகையில், “கருத்து சுதந்திரம், பேச்சுரிமை இதெல்லாம் எந்த அளவுக்கு எல்லாரும் சரியாக பயன்படுத்துகிறோம் என்பது பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் , அரசியல் ரீதியா ஒருத்தருக்கு ஒருத்தர் என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்து கொள்ளலாம். அது கடுமையான விமர்சனங்களாக கூட இருக்கலாம். அதெல்லாம் மக்கள் நேரலையில் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். யாரோட கருத்தை எடுத்து கொள்ள வேண்டும், எதை விட்டுவிடவேண்டும் என்பதெல்லாம் அவங்களோட ஒரு சாய்ஸ், அதை அவர்கள் பார்த்து கொள்வார்கள்.

ஆனால், அதே அரசியலுக்காக தனிப்பட்ட முறையில நம்ம மக்களையும், அல்லது நமது நம்ம பெண்களையும், வேற யாரையாவது தாழ்த்தி, தரம் தாழ்ந்து பேசுவது எல்லாம் வேண்டாம் என்பது தான் அந்த வேண்டுகோள். இது எல்லாருக்கும் பொதுவான ஒரு வேண்டுகோள்தான். இது நான் ஏன் சொல்றேன் என்றால், சமீப காலமாக, நம்ம தமிழ்நாட்டில் ஒரு ஆபாச நதியா ஓடிக்கிட்டு இருக்கிறது. வன்ம நதியா ஓடிக்கிட்டு இருக்கிறது. இதெல்லாம் இந்த நதிகளெல்லாம் மக்கள் பாத்துட்டு இருக்கிறார்கள்

ADVERTISEMENT

அப்புறம் பெண்களை பற்றி அவதூறாக, அசிங்கமாக, இந்த டபுள் மீனிங்கில் பேசுவது, ட்ரிபிள் மீனிங்ல பேசுவது, இதெல்லாம் மக்கள் வாட்ச் பண்ணி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்குமே நான் சொல்லுவது ஒன்றுதான், நம்ம வீட்டுல இருக்கிற ஒரு தாயா, ஒரு அக்காவா, தங்கச்சியா கூட இருக்கிறதும் அதே பெண்கள்தான். அதனால் அதை மைண்ட்டில் வைத்துக்கொண்டு கொஞ்சம் எல்லாரும் கொஞ்சம் பேசினால் நல்லா இருக்கும். என்றார்.

அதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதைத்தொடர்ந்து ஆவேசமடைந்த முதல்வர் விஜய், “அடுத்து தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டும் என்றால் கூட, இதற்கு முன்னாடி மக்கள் எனக்கு கொடுத்த இடமாக இருக்கட்டும், இப்போது எனக்கு மக்கள் கொடுத்திருக்கிற இடமாக இருக்கட்டும், பல காரணங்கள் இருக்கிறது. அதுல ரொம்ப ரொம்ப முக்கியமான காரணம், இதெல்லாம் சாத்தியமானதுக்கு காரணம் நம்ம வீட்டுப் பெண்கள்தான். அதனால, இந்த பெண்களைப் பற்றி யாராவது ஏதாவது அவதூறாக, அசிங்கமாக, இந்த மாதிரி எல்லாம் ஏதாவது பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும். என்னடா, இவன் வந்து ஏதோ அரசியல் காரணம், அரசியல் காழ்புணர்ச்சியில ஏதோ பேசுறாரு, அப்படி இப்படின்னு யாராவது நினைச்சுட்டாங்கன்னா, அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.

ADVERTISEMENT

ஏனென்றால். இதற்காக எல்லாம் நாம் அரசியலுக்கு வரல, அது நமக்கு அவசியமும் இல்லை, அதை நாம் செய்யப் போறதுமில்லை. முன்னால் நடந்த நிறைய விஷயங்களை நம்ம கேள்விப்படுறோம். மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் மேடம் ஜெயலலிதா மேடம், ஒரு பெண்ணாக எவ்வளவு அவமானங்களை சந்தித்திருக்கிறார் என்பதை நம்ம கேள்விப்படுறோம். இதே சட்டசபையில, இதே எதிர்க்கட்சியினால், எவ்வளவு அவமானங்களை சந்திச்சிருக்காங்கன்றதெல்லாம் நாம் கேள்விப்படுறோம். அதனால், அதெல்லாம் இன் பியூச்சர் எந்த பெண்களுக்கும் நடந்திடக்கூடாது என்பதால் ரொம்ப தெளிவாக இருக்கிறோம் என்றார். இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

தொடர்ந்து பேசிய அவர் டெக்னாலஜி எல்லாம் வளர்ந்து வேறு எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது. நாகரிகம் எல்லாம் வளர்ந்து போய் கொண்டு இருக்கிறது.. அதனால, மறுபடியும் சொல்றேன், அரசியல் ரீதியா என்ன வேணா கமெண்ட் பண்ணிக்கலாம், அது ஹார்ஷான கமெண்ட்ஸா கூட இருக்கலாம், அதுல தப்பு இல்லை. ஏன்னா, அதுதான் கருத்துரிமை, அதுதான் பேச்சுரிமை. இன்னைக்கு தேதிக்கு நடந்த சட்டமன்ற நிகழ்வில் உறுப்பினர் பேசும்போது சொல்றாங்க, ஏதோ ஆர்தோ சர்ஜன் மாதிரி டாக்டர் மாதிரி சட்டசபைக்குள்ள எலும்பு உடைப்பாராம். இந்த மாதிரி எல்லாம் பேச்சுகள் எதுக்குன்னு கேட்கிறேன், இதான் அரசியலா? இப்படி எல்லாம் பேசுறதுதான் அரசியலா? இப்படி எல்லாம் பேசிப் பேசிதான், மக்கள் அதை பார்த்து பார்த்துதான், எல்லாரும் அந்த சைடு உட்கார்ந்து இருக்கிறார்கள்.” அதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

ADVERTISEMENT

அப்போது பேசிய சபாநாயகர், இந்த பிரச்சினை ஏற்கனவே அவை உரிமை குழுவுக்கு அனுப்பப்பட வேண்டுமென்று அறிவித்திருக்கிறேன். அவை உரிமை குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், இந்த பிரச்சினை அவை உரிமை குழுவுக்கு அனுப்பப்படும், அது செல்லும். என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர், “நான் உங்களுக்கு அட்வைஸ் பண்ணலாம் வரல, என்ன ரியாலிட்டி? அதாவதுதிமுகவில் இருக்கிற இன்னொரு ஒரு மூத்த உறுப்பினர் பேசும்போது சொல்றாரு, அதாவது, மக்கள் அவங்க கட்சிக்கு ஓட்டு போடாததால், அந்த மக்கள் எல்லாம் நல்ல சாவே வராதாம்? எனக்கு சத்தியமாக புரியவில்லை. அதாவது இத்தனை வருஷமாக, இந்த 50, 60 வருஷமாக இதே மக்கள்தான் அவங்களுக்கு ஓட்டு போட்டுட்டு இருக்காங்க. அந்த மக்களை பார்த்து, எப்படி அந்த வாயில் இருந்து ஒரு வார்த்தை வருது? என்னால அதை நினைச்சு பார்க்கவே முடியல. அதான், மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத அந்த மனசு எப்போ இல்லையோ, இவங்கல்லாம் ஏன் அரசியல்ல இருக்க வேண்டும் என்ற அந்த கேள்விதானே வரும்?” என்றார்.

முன்னதாக சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, “சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன் செய்தவற்றைப்போல வேறு எவரும் செய்ததில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதியால்கூட அங்கே மருத்துவமனையைக் கொண்டுவர முடியவில்லை. ஆலந்தூர் பகுதியினருக்கும் இது பெரும் வசதியாக இருந்தது.

அந்த மருத்துவமனையில் நோயாளியாகச் சென்றவர்களும், அவர்களின் உறவினர்கள் வாக்களித்திருந்தால்கூட திமுக ஜெயித்திருப்போம். அவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் காட்டமான கருத்துகளை முன் வைத்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share