’கொடநாடு வாட்ச்மேன்’ மிசா பற்றி பேசலாமா? 3 ஃபைல் பற்றி சொல்லவே இல்லையே ஏன்? விஜய் மீது உதயநிதி சரமாரி தாக்கு!

Published On:

| By Mathi

Udhayanidhi Stalin Attacks CM Vijay Fiercely

சட்டசபையில் முதல்வர் விஜய்யின் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் சாடினார்.

சட்டசபையில் இன்று (செப்டம்பர் 7) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். அப்போது திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் முதல்வர் விஜய்.

ADVERTISEMENT

இதற்கு பதிலளிக்க திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாய்ப்பு கேட்டனர். இதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அனுமதி மறுத்தார். இதனால் சபாநாயகர் இருக்கையை திமுக எம்.எல்.ஏக்கள் முற்றுகையிட்டனர்.

பின்னர் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு தரப்படும் என்ற கூறியிருந்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் திடீரென அனுமதி மறுத்தார். இதனைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

ADVERTISEMENT

இதன் பின்னர் தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: கடந்த வியாழக்கிழமையன்று காவல்துறை அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை விவாதத்தில், எதிர்க்கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக நான் உரையாற்றியிருந்தேன்.

கிட்டத்தட்ட 35 முதல் 45 நிமிடங்கள் பேசியிருந்தேன். பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருந்தேன். இந்த ஆட்சியில் என்னென்ன நடந்திருக்கிறது, இந்த 114 நாட்கள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீரழிந்து போயிருக்கிறது என்பதை மிகத் தெளிவாக, விளக்கமாக, ஆதாரங்களோடு பேசியிருந்தேன்.

ADVERTISEMENT

15 கேள்விகளுக்கு பதில் இல்லையே

அரசுக்கு 15 கேள்விகள் வைத்திருந்தேன். குறிப்பாக முதலமைச்சரிடம் நேரடியாகக் கேள்விகள் கேட்டேன். “இதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள். டைவர்ஷன் பண்ணாமல், டைவர்ஷன் டாக்டிக்ஸாக இல்லாமல், நேரடியாக நான் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்” என்று கேட்டேன்.

15-வது நிமிடத்திற்குப் பிறகு எங்கள் மீது குற்றச்சாட்டு

இன்றைக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசினார். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசினார். அதில் முதல் 10 முதல் 15 நிமிடங்கள், காவல்துறையின் சார்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம், ஆன்லைன் fraud சம்பந்தமாக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு வந்தார். நாங்களெல்லாம் அமைதியாக உட்கார்ந்து அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் 15-வது நிமிடத்திற்குப் பிறகு, எந்தவித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளை எங்கள் மீது வைக்க ஆரம்பித்தார்.

திமுக ஆட்சிதான் நடப்பதாக நினைக்கும் விஜய்

நான் வியாழக்கிழமை பேசும்போதே, “நீங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள் என்பதை நம்புங்கள். இப்போது திமுக ஆட்சியில் இல்லை என்பதை நீங்கள் நம்ப வேண்டும். உங்களுடைய ஆட்சி அமைந்துவிட்டது என்பதை தயவுசெய்து நம்புங்கள். இன்னும் எங்கள் மேலேயே பழி போடாமல், இந்த மூன்று மாதங்களில் என்னென்ன செய்திருக்கிறீர்கள், அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைப் பதில் சொல்லுங்கள்” என்று சொல்லியிருந்தேன்.

ஆனால் மீண்டும் திமுக ஆட்சியே நடக்கிறது என்ற நினைப்பில் முதலமைச்சர் அவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்தார். சில கட்சிக் கூட்டங்களில் எங்களுடைய உறுப்பினர்கள் வெளியில் பேசியதையும், இந்த அரசு மீது வைத்த விமர்சனங்களையும் உள்ளே கொண்டுவந்து பேசி, அதையெல்லாம் அவைக் குறிப்பில் பதிவேற்றச் செய்ய ஆரம்பித்தார்.

பதில் சொல்ல வாய்ப்பு மறுப்பு

உடனே நானும் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து சபாநாயகரிடம், “முதலமைச்சர் வெளியில் பேசுவதைப் பற்றி இங்கே பேசுகிறார். எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டும்” என்று கேட்டோம். ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

தொடர்ந்து முதலமைச்சர் அவர்கள் பல தவறான குற்றச்சாட்டுகளை, பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்துக்கொண்டே இருந்தார். எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் எங்களுக்குப் பதில் சொல்வதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

முதலமைச்சர் பேசி முடித்த உடனே நாங்கள் அனைவரும் மீண்டும் எழுந்து, “எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். எங்களைப் பற்றிக் குற்றச்சாட்டு சொல்லியிருக்கிறார்” என்று கேட்டோம். ஆனால் அதற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. முதலில், “எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் வாய்ப்பு கொடுக்கிறேன்” என்று சபாநாயகர் சொன்னார்.

வெளிநடப்பு ஏன்?

ஆனால் என்ன pressure வந்தது என்று தெரியவில்லை. முதலமைச்சர் சொன்னதாலா, அமைச்சர் பெருமக்கள் யாராவது சொன்னார்களா, அரசு அதிகாரிகள் சொன்னார்களா என்று தெரியவில்லை. திடீரென்று அதை மாற்றி, “இல்லை, இல்லை; அனுமதிக்க முடியாது” என்று சொல்லிவிட்டார்.

நாங்கள் அமைதியாக இருந்தோம். எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று காத்துக்கொண்டிருந்தோம். ஆனால் மீண்டும் வாய்ப்பு இல்லை என்று சொன்னதால், எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக முதலமைச்சருடைய பேச்சை முழுமையாகக் கேட்டுவிட்டு வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

ஓடிப் போய்விட்டு ஒப்புவிக்க வந்த விஜய்

நாங்கள் வைத்த ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் சொன்னாரா என்று பார்த்தால், எதுவுமே இல்லை. கடந்த வியாழக்கிழமை முதலமைச்சர் வந்து, “இதற்கெல்லாம் நான் திங்கட்கிழமை பதில் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடிப் போய்விட்டார். நான்கூட, “ஏதாவது prepare பண்ணிட்டு வருவார். மூன்று நாள் time இருக்கு. நல்லா மனப்பாடம் பண்ணிட்டு வருவார்” என்று நினைத்தேன். அதே மாதிரி, வியாழக்கிழமை அன்றைக்கு எப்படி ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற மாதிரி ஓடினாரோ, அதே மாதிரி இன்றைக்கு மனப்பாடம் பண்ணிட்டு, ஒப்புவித்தல் போட்டி மாதிரி சட்டசபையில் தவறான கருத்துகளையும் பொய்யான குற்றச்சாட்டுகளையும் ஒப்புவித்திருக்கிறார்.

நான் சொன்ன அதே punch dialogue, அதே சினிமா வசனங்கள், அதே acting — Reels-க்காக மட்டுமே இந்த முதலமைச்சர் இந்தப் பதிலுரையைச் சொல்லியிருக்கிறார்.

சட்டம்-ஒழுங்கு கேள்விகளுக்கு பதில் எங்கே?

இந்த ஆட்சி அமைந்ததிலிருந்து சட்டம்-ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பது பத்திரிகை நண்பர்களான உங்களுக்குத் தெரியும். மக்களும் தினமும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு சம்பந்தமாக நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல், வெறும் punch dialogues, வெறும் diversion tactics தான்.

அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள், ஏன் ஒரு அமைச்சர், மாவட்டச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மீதெல்லாம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டிருந்தோம்.

ஆனால் அதற்கு மாறாக, “திமுக ஆட்சியில் இவர்கள் மீது இந்த வழக்குகள் இருந்தன” என்று எங்கள் மீது திருப்புகிறார். நாங்கள் என்ன சொல்கிறோம்? வழக்கு இருந்தால் நீங்கள் நடத்துங்கள். Action எடுங்கள். அதுதான் நாங்கள் சொல்கிறோம்.

IPL மேட்சிலேயே பொடி போட்ட அமைச்சர்

இன்னும் சொல்லப்போனால், ஒரு அமைச்சர் IPL match-லேயே உட்கார்ந்து பொடி போட்டதெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். Credit card-ல், போனில் வைத்து பொடி போட்டதெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாங்கள் வியாழக்கிழமை பேசிய உடனே, கடந்த மூன்று நாட்களாக அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் அவசர அவசரமாக என்னென்ன பண்ணிக்கொண்டிருந்தார்கள், என்னென்ன பிரச்சினைகளை solve பண்ணப் பார்த்தார்கள் என்பதைப் பத்திரிகை நண்பர்களான நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

அவர்களுடைய கட்சிக்காரர்களே இன்றைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார்கள். நேற்று சென்னையில் பட்டப்பகலில் இரண்டு கொலைகள் நடந்திருக்கின்றன. CCTV கேமராக்களில் எல்லாம் பதிவாகியிருக்கிறது. அதைப் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டேன். அதற்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

சர்க்காரியா கமிஷன், மிசா பற்றி பேச என்ன தகுதி?

இதையெல்லாம் கேட்டால், இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் 1970-க்குப் போய்விட்டார் முதலமைச்சர். சர்க்காரியா கமிஷனைப் பற்றிப் பேசுகிறார். மிசாவைப் பற்றிப் பேசுகிறார். மிசாவைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு இவருக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா? ஏதாவது தகுதி இருக்கிறதா? சர்க்காரியா கமிஷனைப் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா? யாரோ எழுதிக் கொடுத்ததை 3 நாளாக மனப்பாடம் பண்ணிட்டு வந்து இங்கே வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறார். சர்க்காரியா கமிஷனில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று அந்தக் கமிஷனே report கொடுத்திருக்கிறது.

அதே மாதிரி மிசாவைப் பற்றி இவர் பேசுகிறார். கொடநாட்டில் போய் இவருடைய படம் release-க்காக watchman வேலை பார்த்தவர்தான் இந்த முதலமைச்சர் அவர்கள். இவருக்கு மிசாவைப் பற்றியும், எங்களுடைய தலைவரைப் பற்றியும் பேசுவதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா? ஒரு சதவிகிதம் தகுதி இருக்கிறதா? அந்தத் தகுதியை இவர் ஏதாவது வளர்த்திருக்கிறாரா?

ஆட்சியைப் பிடித்தது பெரிய விபத்து

இவர் அரசியலுக்கு வந்தது ஒரு accident. இவர் ஆட்சியைப் பிடித்தது ஒரு பெரிய விபத்து. இவருக்கு மிசாவைப் பற்றியும் சர்க்காரியா கமிஷனைப் பற்றியும் பேசுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது. அதில் எந்த ஆதாரமும் கிடையாது. வெறும் குற்றச்சாட்டுகள். அதே மாதிரி ED சொன்ன விஷயங்களையெல்லாம் இவர் இங்கே படித்துக் காட்டுகிறார். அதெல்லாம் வெறும் குற்றச்சாட்டுகள். எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. விசாரணை போய்க்கொண்டிருக்கிறது.

அந்த 3 ஃபைலை ஓபன் செய்யலையே?

“3 ஃபைலை ஓபன் பண்ணப் போறேன்” என்று சொல்லிவிட்டு, அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. ED என்னென்ன குற்றச்சாட்டுகள் சொல்லியிருக்கிறது என்பதைத்தான் இவர் சட்டமன்றத்தில் படித்துக் காட்டுகிறார். இன்னும் சொல்லப்போனால், சர்க்காரியா கமிஷனுக்குப் பிறகு மக்களுடைய ஆதரவைப் பெற்று மூன்று முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும்.

ஆட்சியில் இருக்கும்போது ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே முதலமைச்சர் யார்? ஒரே தலைவர் யார்? என்பது இங்கு இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் தெரியும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எங்களுடைய தலைவர்களோ, எங்களுடைய முன்னாள் அமைச்சர்களோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களோ இதுவரைக்கும் யாரும் அந்த மாதிரி தண்டிக்கப்படவில்லை. எந்த ஊழல் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.

விஜய் மீது வருமான வரித் துறை வழக்கு

எனவே, இப்படி எங்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். முதலமைச்சர் மேல்கூட Income Tax வழக்கு இருக்கிறது. 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதை மறைத்ததாக அவர் மீது ஒரு வழக்கு இருக்கிறது; வருமான வரித்துறை வழக்கு இருக்கிறது. வருமானத்தை மறைத்ததற்கு வழக்கு போட்டால், “ரொம்ப லேட்டாக வழக்கு போட்டிருக்கிறீர்கள்” என்று நீதிமன்றத்தில் ஓப்பனாக ஒத்துக்கொண்டவர்தான் இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த dummy முதலமைச்சர்.

அதுமட்டுமில்லை. இங்கு இருக்கக்கூடிய பொதுப்பணித்துறை அமைச்சர் மீதும் அமலாக்கத்துறை case இருக்கிறது; நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள் கட்சியில் இப்போது புதிதாகச் சேர்த்திருக்கிற விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதெல்லாம் ED cases இருக்கின்றன.

இவர்களையெல்லாம் கூடச் சேர்த்து வைத்துக்கொண்டு, எங்களைக் குறை சொல்வதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

வழக்குகளை சட்டப்படி சந்திக்கத் தயார்

எங்கள் மீது ED case நடக்கலாம்; நீதிமன்றத்தில் வழக்கு நடக்கலாம். ஆனால் அதையெல்லாம் சட்டப்படி சந்திப்பதற்கு நாங்கள் அத்தனை பேரும் தயார். நேற்று முன்தினம் எங்களை மிரட்டுவதற்காக, நாங்களெல்லாம் பயந்துவிடுவோம் என்று முன்னாள் அமைச்சர், முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுடைய வீட்டுக்கு raid போனார்கள்.

Raid போனவர்கள் ஒரு ஐந்து, ஆறு மணி நேரத்தில் எல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்தார்கள். “ஒன்றும் இல்லை” என்று நேரு அவர்களே தெளிவாகப் பேட்டி கொடுத்திருக்கிறார். எனவே இதையெல்லாம் சட்டப்படி சந்திப்பதற்கு நாங்கள் தயார்.

விஜய்யின் நண்பர்கள் விஷ்ணு ரெட்டி, சுஜய் ரெட்டி, அனில் ரெட்டி

நான் இந்த அரசு மீது இப்போது ஓப்பனாக ஒரு குற்றச்சாட்டு வைக்கிறேன். முதலமைச்சருடைய நண்பர்கள், அவருடைய office-ல் இருக்கக்கூடிய advisers.. அதில் விஷ்ணு ரெட்டி. சமீபத்தில் ஒரு அமைச்சர் பேசும்போது நன்றி சொல்கிறார். விஷ்ணு ரெட்டி, அவருடைய மச்சான் சுஜய் ரெட்டி, அவருடைய business partner அனில் ரெட்டி.. இவர்கள் எல்லாம் சேர்ந்து இப்போது mining, அரசு நடத்தக்கூடிய mining எல்லாவற்றையும் full control-ல் வைத்திருக்கிறார்கள். இதற்கான ஒவ்வொரு ஆதாரத்தையும் நான் ஒவ்வொன்றாக வெளியிடப் போகிறேன்.

சினிமா ஷூட்டிங்குக்காக பதில் உரை

இப்படி நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்வதற்கு வக்கற்ற ஒரு அரசு இன்றைக்கு அமைந்திருக்கிறது. முதலமைச்சருடைய பதில் முழுக்க முழுக்க ஒரு சினிமா shooting-க்கு என்ன தேவையோ, அதை மூன்று நாள் உட்கார்ந்து மனப்பாடம் பண்ணி, prepare பண்ணிட்டு வந்து இங்கே பேசியிருக்கிறார். இதையெல்லாம் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களான நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.

அதே மாதிரி பாரபட்சமாக, ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டிருக்கக்கூடிய சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு எங்களுடைய கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share