பஞ்சமி நிலங்களை கண்டறிய புதிய ஆணையம் – அமைச்சர் வன்னி அரசு

Published On:

| By Pandeeswari Gurusamy

தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் முதல்வர் விஜய் வழிகாட்டுதல் அடிப்படையில் பஞ்சமி நிலங்களை கண்டறிய ஒரு ஆணையம் அமைக்கப்படும்

சட்டமன்றத்தில் இன்று (செப்டம்பர் 7) பஞ்சமி நிலம் மீட்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ மாரிமுத்து கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

ADVERTISEMENT

அதற்கு பதில் அளித்து பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, “முதல்வர் உரையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் கலப்பு மணம் செய்வதும் ஒரு காரணம் என்று தெரிவித்தார். இது மிக முக்கியமான கருத்தாக, முக்கியமான செய்தியாக இந்த சாதி மறுப்பு திருமணம் செய்வதால் சட்ட ஒழுங்கு பிரச்சினை இருக்கிறது என்பதை தெரிவித்த முதல்வருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சமூக பிரச்சினை, அந்த சமூக பிரச்சினையும் சட்ட ஒழுங்கு பிரச்சினை இருக்கிறது என்பதை தெரிவித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது உறுப்பினர் அவர்கள் பேசும் பொழுது இந்த பஞ்சமி நிலம் குறித்து பேசினார்கள். அது குறித்தும் ஒரு அறிவிப்பாக முதல்வர் அவர்களுடைய ஒப்புதலோடு அறிவிக்கிறன். பஞ்சமி நிலம் தொடர்பாக அன்றைக்கு பிரிட்டிஷார் இருந்த பொழுது 1891-ஆம் ஆண்டில் ஆட்சியாராக இருந்த த்ரமென் கீர் என்பவர்தான் அந்த நிலங்களை கண்டறிந்தார். இங்கு தமிழகத்தில் தலித்துகள் ஆதிதிராவிட மக்கள் மிக மோசமான நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு நிலம் வேண்டும், அவர்களின் நிலம் மற்றவர்களாக இருப்பதை கண்டறிந்து கண்டறிந்து இங்கிலாந்து மகாராணிக்கு வந்து கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

அந்த கடிதத்தின் அடிப்படையில் இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்படுகிறது. அந்த இரண்டு அரசாணையில் 12 லட்சம் ஏக்கர் நிலம், தரிசு நிலம் ஆதிதிராவிட மக்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய நிலமாக அறிவிப்பு செய்கிறார்கள். அந்த அறிவிப்பின் அடிப்படையில் தொடர்ந்து அந்த நிலம் வந்து அவர்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற அந்த அரசாணை இருக்கிறது. இந்த அடிப்படையில்தான் பஞ்சமி நிலம் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

தமிழகத்தை பொறுத்தளவு ஆதிதிராவிடர் என்றால் ஒரு சமூகமென்று சொல்கிறார்கள். அந்த ஆதிதிராவிடர் என்பது பட்டியல் சாதி (Scheduled Caste), பட்டியல் சாதியில் 76 சாதிகள் இருக்கின்றன. அதில் எல்லா சமூகமும் குறிப்பாக இன்னைக்கு இருக்கின்ற தமிழ்நாட்டில் இருக்கிற சமூகம் எத்தனை இருக்கின்றதோ அந்த 76 சாதிகளும் இருக்கின்றன. அந்த அடிப்படையில் அவைகளுக்குதான் நிலம் கண்டறியப்பட்டது.

ADVERTISEMENT

1996-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிய போகும் நேரத்தில் வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் பஞ்சமி நிலம் ஆய்வு செய்வதற்காக ஒரு குழு போடப்பட்டு அது முன்னெடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு அந்த குழு அப்படியே நீர்த்து போய்விட்டது; அது செயல்படவே இல்லை.

2011-ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து இந்த மாநாடுகளை, பஞ்சமி நிலம் தொடர்பான மாநாடுகளை நாங்கள் நடத்தி வருகின்றோம். அந்த அடிப்படையில் பஞ்சமி நிலத்தை மீட்போம், பைந்தமிழ் காப்போம் என்கின்ற முழக்கமிட்டு அதற்கான தேவைகளை சொன்னோம். அப்பொழுது முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் நீதியரசர் மருதமுத்து அவர்களுடைய தலைமையில் ஒரு கமிட்டி போட்டார். அந்த கமிட்டி போடப்பட்டு எவ்வளவு நிலங்கள் இருக்கிறது என்பதை கண்டறிந்தார்கள். அந்த அடிப்படையிலும் அந்த குழு செயல்படாமல் அப்படியே கிடக்கின்றது.

இப்பொழுது மீண்டும் அந்த பஞ்சமி நிலம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் வருகின்றன. அரசுக்கும் அரசின் கவனத்திற்கும் மனுக்கள் கொடுக்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஒரு உயர் நீதிமன்ற தீர்ப்பு வருகிறது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் பஞ்சமி நிலங்களை கண்டறிவதற்காக ஒரு அதிகாரிகள் குழு போடப்படுகிறது.

அதிகாரிகள் குழு தான். ஆனால் அதற்கு முன்பு போடப்பட்ட மருதமுத்து குழு என்னவானது என்று தெரியவில்லை, அதற்கு முன்பு மரியாதைக்குரிய எஸ்.டி. சோமசுந்தரம் தலைமையில் போடப்பட்ட குழு என்னவானது என்று தெரியவில்லை. எதுவுமே கண்டறியவில்லை. இறுதியாக அரசு நீதிமன்றத்தின் மூலமாக பெறப்பட்ட, ஆர்டிஐ (RTI) மூலமாக பெறப்பட்ட அந்த அடிப்படையில் இன்றைக்கு 12 லட்சம் ஏக்கர் நிலம் இருந்தது. இன்றைக்கு வெறுமனே 1,86,000 ஏக்கர் நிலம் மட்டுமே இருக்கிறது; அதுதான் பஞ்சமி நிலமாக இருக்கின்றது. இதுதான் இன்றைய நிலவரம்.

இன்று தவெக தலைமையிலான கூட்டணி அரசில் முதல்வர் வழிகாட்டுதல் அடிப்படையில் பஞ்சமி நிலங்களை கண்டறிய ஒரு ஆணையம் அமைக்கப்படும்” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share