விஜய் கிண்டலடித்த ‘மிசா ஹிஸ்டரி’ இதுதான்.. 1978-ல் சட்டசபையில் கலைஞர் பேசியது!

Published On:

| By Mathi

முதல்வர் விஜய் கிண்டலடித்த மிசா கொடூரங்கள் பற்றி கலைஞர் பேசியது

தமிழக சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு இன்று செப்டம்பர் 7-ந் தேதி முதல்வர் விஜய் பதிலளித்தார். அப்போது, “நம்ம நண்பர்கள் எது பேசினாலும், மிசா பார்த்தவங்க, மிசா பார்த்தவங்க, எல்லாத்துக்கும் மிசாவை கொண்டு வந்து விட்டாங்கன்னா என்ன செய்வதுன்னு தெரியல. ஐயா பெரியோர்களே, எல்லாருக்கும் அந்த மிசாவை பத்தின ஹிஸ்டரியை (MISA HISTORY) பற்றி நல்லா தெரியும்” என்று முதல்வர் விஜய் பேசினார்.

மிசாவும் நெருக்கடி நிலையும்

MISA – Maintenance of Internal Security Act என்பது இந்தியாவில் 1971-ல் கொண்டுவரப்பட்ட உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம். நாட்டின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் ஒருவரை வழக்கமான நீதிமன்ற விசாரணைக்கு முன்பாகவே தடுப்புக் காவலில் வைக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு விரிவான அதிகாரங்களை இந்த சட்டம் வழங்கியது.

ADVERTISEMENT

1975 ஜூன் 25-ஆம் தேதி, பிரதமராக இருந்த இந்திரா காந்தி பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது அரசமைப்புச் சட்டத்தின் 352-வது பிரிவின் கீழ் இந்தியாவில் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். நெருக்கடி நிலைக் காலத்தில் ஏற்கெனவே அமலில் இருந்த மிசா சட்டம் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் நெருக்கடி நிலையை எதிர்த்து வந்த திமுக அரசு 1976 ஜனவரி 31-ஆம் தேதி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் திமுகவினர் மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்தாபன காங்கிரஸ், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மிசாவின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

அவசர நிலை- மிசா ரத்து

1977 மார்ச் 21-ஆம் தேதி நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு மிசாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தது. Maintenance of Internal Security (Repeal) Act, 1978 மூலம் மிசா சட்டம் 1978 ஆகஸ்ட் 3 அன்று ரத்து செய்யப்பட்டது.

நீதிபதி இஸ்மாயில் கமிஷன்

தமிழகத்தில் சென்னை மத்திய சிறையில் மிசா அரசியல் கைதிகள் தாக்கப்பட்டதாகவும் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க 1977 மே 12-ஆம் தேதி ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி தலைமையிலான ஆளுநர் ஆட்சிக் காலத்தில் நீதிபதி எம்.எம். இஸ்மாயில் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இஸ்மாயில் கமிஷன் விசாரணை நடத்தி, சென்னை மத்திய சிறையில் மிசா கைதிகள் தாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் உண்மை எனக் கண்டறிந்து, சில சிறை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது. அந்தக் கமிஷன் தனது அறிக்கையை 1977 செப்டம்பர் 26-ஆம் தேதி எம்ஜிஆர் தலைமையிலான முதலாவது அதிமுக அரசிடம் சமர்ப்பித்தது.

சட்டசபையில் விவாதம்

இந்த இஸ்மாயில் கமிஷன் அறிக்கை மீது 1978-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் 1978-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி தமிழக சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் பேசியதாவது: சட்டப் பேரவைத் துணைத் தலைவரவர்களே, நடந்து விட்ட, ஆனால் இனி என்றென்றும் நடக்கக் கூடாது என்று நாம் எண்ணுகின்ற கோர நிகழ்ச்சிகளைப் பற்றி நடைபெற்ற விசாரணையில் அறிக்கை மீது இரண்டு நாட்களாக இந்த மாமன்றம் விவாதத்தை நடத்தி, இந்த அறிக்கை மீது உடனடி நடவடிக்கையை எடுக்க இந்த அரசு முனைந்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிற நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய கருத்துக்களைக் கூற முற்படுகின்றேன்.

20 மாத காலமாக இந்தியாவை இருள் கவ்விக் கொண்டு இருக்கிறது என்று விமர்சிக்கப்பட்ட அந்த நேரத்தில் சென்னை மாநகரத்தின் சிறைச்சாலை பயங்கர குகையாக உருவெடுத்து, மனிதர்கள் வேங்கைகளாகவும், புலிகளாகவும், சிறுத்தைகளாகவும், நரிகளாகவும் மாறி மிசாக் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்ட பல்வேறு கட்சித் தோழர்கள் கொடுமைப்படுத்தியது குறித்து இஸ்மாயில் கமிஷன் தன்னுடைய அறிக்கையினைத் தந்து இருக்கின்றது.

அறிக்கை தரப்பட்டு 5 திங்கள்களுக்கு மேலாகியும் இன்னும் நடவடிக்கை அந்த அறிக்கை மீது எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது மக்களின் ஒரு பெரும் மனக்குறை என்பதை நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

நெருக்கடி நிலையும் அதிகாரிகளின் பொறுப்பும்

ஏற்பட்டு விட்ட அந்தக் கொடுமைகளுக்கு யார் காரணம், எவர் காரணம் என்கின்ற ஆராய்ச்சியில் இரண்டு நாட்களாக இந்த மாமன்றம் இந்த அறிக்கையின் அடிப்படையில் ஆராய்ந்து தங்களுடைய கருத்துக்களை உறுப்பினர்கள் வழங்கியிருக்கின்றார்கள். இவ்வளவு கொடுமைகளுக்கும் அதிகாரிகளைத் தூண்டிவிடக் காரணமாக இருந்தது நெருக்கடிக்கால பிரகடனம் என்பதை யாரும் மறுத்திட இயலாது.

ஒரு குழந்தையைத் தூக்கிப் போட்ட குற்றம் முன்பு இருந்த மத்திய அரசைச் சாரும் என்றால் இந்தக் குழந்தையின் தலையில் ஒரு பெரும் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்ட குற்றம் அதைக் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்த அதிகாரிகளைச் சாரும் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒன்றை நான் நினைவுபடுத்த வேண்டுமானால், உச்ச நீதிமன்றத்தில் அன்றைய அட்டர்னி ஜெனரலாக இருந்தவர் மிகக் கம்பீரமாக எழுந்து நின்று ஒரு பயங்கரமான கருத்தைத் தெரிவித்தார். சிறைச்சாலையில் வைக்கப்படும் மிசாக் கைதிகள் எக்கதிக்கு ஆளாக்கப்பட்டாலும், சுட்டுக் கொல்லப்பட்டாலும், கவர்னரையே சிறையில் அடைத்தாலும், என்ன நடந்தாலும், நீதிமன்றம் ஏன் என்று கேட்கக்கூடாது என்று அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் வாதாடிய நேரம் அந்த நேரம்.

திமுக அரசு கலைப்பு – மிசா கைதுகள்

அப்படிப்பட்ட நேரத்தில் இனி ஒருமுறை சுதந்திர ஒளியை இந்திய நாட்டு மக்கள் காண்பார்கள் என்ற எண்ணமே இல்லாத சூழலில், சுதந்திர மூச்சினை இந்திய நாட்டு மக்கள் சுவாசிக்க இயலும் என்று நம்ப முடியாத ஒரு நிலை. அந்த நேரத்தில்தான் 1976-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 31-ஆம் நாள் நெருக்கடி நிலையை எதிர்த்தோம் என்ற காரணத்திற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது வெறுப்பு கொண்டு, மத்திய அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசைக் கலைத்தது.

அப்படிக் கலைக்கப்பட்ட பிறகு 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட கழகத்தினர், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நண்பர்கள், பழைய காங்கிரஸைச் சேர்ந்த தோழர்கள், திராவிடர் கழக நண்பர்கள், நெருக்கடி நிலையை எதிர்த்த கட்சிகள் எவை எவையோ அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மிசா கைதிகளாக தமிழகத்திலே பல்லாயிரக்கணக்கானோர் சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டார்கள்.

அவர்கள் அங்கே கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதையும் அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்பதையும், கவர்னர் பெருமதிப்பிற்குரிய மேதகு பட்வாரி அவர்கள் பதவிப் பொறுப்பை ஏற்பதற்குமுன்பு என்னுடைய நண்பர் லத்தீப் அவர்கள் இங்கே சுட்டிக்காட்டியதைப் போல ஏற்கெனவே இருந்த கவர்னர் ஆட்சியில் இலாகாப் பூர்வமான விசாரணை நடைபெற்று எந்தவிதமான தவறும் எத்தகைய கொடுமையும் சிறைச்சாலையிலே நடைபெறவில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்க, நீதிபதியைக் கொண்டு விசாரிப்பதே மேல் என்று சொல்லி, 1977 மே திங்கள் 12-ஆம் நாள் தமிழக அரசு சிறப்பு வெளியீட்டில் கவர்னர் பட்வாரி அவர்கள் ஆட்சியில் போடப்பட்ட ஆணை பின்வருமாறு:

“சென்னை மத்திய சிறையிலே காவல், பாதுகாப்பு அரசியல் கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், அடிக்கப்பட்டதாகவும் 1976 பிப்ரவரியில் குற்றச்சாட்டுக்கள் செய்யப்பட்டது. அந்த நிலையில் அந்தக் குற்றச்சாட்டுக்கள் இலாகா அளவில் விசாரணை நடத்திட அரசு ஆணையிட்டது. அந்த விசாரணையின் போது குற்றச்சாட்டுக்கள் மெய்ப்பிக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய வேண்டும் என்ற முறையீடு எழுந்தது. அதற்கிணங்க இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய நீதிபதி இஸ்மாயில் அவர்களைக் கொண்டு தனிநபர் விசாரணைக் கமிஷன் நியமிக்கப்படுகிறது” என்ற அறிவிப்பு வெளியாயிற்று.

இஸ்மாயில் கமிஷன் கண்டறிந்த உண்மை

எனவே, இஸ்மாயில் கமிஷன் அறிக்கையில் சென்னை சிறைச்சாலையிலே அரசியல் கைதிகள் தாக்கப்பட்டது, கொடுமைப்படுத்தப்பட்டது உண்மை என்று திட்டவட்டமாக, தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அதிகாரிகள் பொறுப்பாளிகள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இத்தனையும் அறிவித்து—நண்பர் லத்தீப் அவர்கள் இங்கே குறிப்பிட்டதைப் போல இலாகா விசாரணையில் எதுவுமே நடக்கவில்லை என்று அறிவித்திருக்கிறார்களே, அதுவே மாபெரும் குற்றமாகும்.

எனவே, அரசியல் கைதிகளை அடித்தவர்கள், நொறுக்கியவர்கள், கொடுமைப்படுத்தியவர்கள்—அவர்கள் யார்? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்பதற்கு முன்பு அப்படி நடக்கவே இல்லை என்று விசாரணை நடத்தி அறிவித்தார்களே, அவர்கள் யார், எவர் என்று தெரிந்து அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று இந்த அரசை மிகுந்த பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

1976 ஜனவரி 31 – ஆட்சி கலைப்பு

சென்னை சிறைச்சாலையில் சம்பவங்கள் எப்படி நடைபெற்றன என்ற சுருக்கத்தை அறிக்கையிலே நாம் காணுகிறோம் என்றாலும், நான் அது குறித்து சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன்.

1976 ஜனவரி 31-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் கழக ஆட்சி கலைக்கப்பட்டது என்ற செய்தியை நாங்கள் அன்றைக்கு செய்தி நிறுவனங்கள் மூலமாக அறிகிறோம்; வானொலி மூலமாக அறிகிறோம். அந்தச் செய்தி எங்கள் காதிலே விழுகிற அதே நேரத்தில் எல்லா அமைச்சர்கள் வீட்டு டெலிபோன்களும் துண்டிக்கப்படுகின்றன.

நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல மாநிலம் முழுவதும் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்படுகிறார்கள். அப்படி கைது செய்யப்பட்ட யாரையும் இன்டர்வியூ காண—நேர்காணல் என்ற ஒரு முறை இருக்கிறது—அதைப் பயன்படுத்திக் கொள்ள எந்த உறுப்பினருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டார்கள்? உடனடியாக உறவினர்களுக்கு இன்டர்வியூ காண சந்தர்ப்பம் அளிப்பதுதானே சிறைச்சாலையிலே உள்ள முறை. ஏன் அளிக்கப்படவில்லை என்று ஒரு நாள் பொறுத்துப் பார்த்தோம். ஒரு வாரம் பொறுத்துப் பார்த்தோம்.

இதற்கிடையில் எங்களுக்கு செய்தி எட்டுவதற்கு முன்பாக பல மைல் தொலைவிலுள்ள உற்றார் உறவினர்களுக்கெல்லாம் சென்னை சிறையிலே அரசியல் கைதிகள், மிசா கைதிகள் மிக பலமாக அடித்து நொறுக்கப்படுகிறார்கள் என்ற செய்தி தமிழ்நாடு முழுவதும் பரப்பப்படுகிறது.

ஏன் தமிழகத்தின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் இந்தக் கொடுமை நடைபெறவில்லையா? சென்னைச் சிறைச்சாலையிலே நடந்தது மட்டும் அப்படிப் பரப்பப்படுகிறது. அரசியல் கட்சிக்காரர்களை அச்சுறுத்துகின்ற நோக்கத்திலே தமிழ்நாட்டிலே ஒரு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளே யார் யார் அடிபடுகிறார்கள் என்ற செய்தி பரப்பப்படுகிறது.

அவர்களுடைய உற்றார், உறவினர் எல்லாம் வெளியே இருக்கிறோம். எங்களுக்குத் தகவல் எட்டுவதற்கு முன்பாக பல கல் தொலைவில் இருக்கின்ற மக்களுக்கு இந்தச் செய்தி பரப்பப்படுகிறது.

சென்னை சிறைச்சாலையிலே திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பழைய காங்கிரஸ், திராவிடர் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர் பலர் கைதிகளாக அடைக்கப்பட்டார்கள். அவர்கள் கடுமையாக அடிக்கப்படுகிறார்கள். அவர்களிலே பலபேர் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற அளவுக்குச் செய்திகள் வருகின்றன. இங்கே சிறைச்சாலை வாசலிலே உற்றார் உறவினர் காத்திருக்கிறார்கள். அவர்களிலே யாருக்கும் நேர்காணலுக்கு (இன்டர்வியூ) அனுமதி தரப்படவில்லை.

இந்திரா காந்தி, குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு தந்தி

இதற்குப் பிறகு நாங்கள் பிப்ரவரி 26-ஆம் நாள் வரையில் பொறுத்துப் பார்த்தோம். அதற்குப் பிறகு குடியரசுத் தலைவரவர்களுக்கும், இந்தியப் பிரதமருக்கும்—

தலைவரவர்களே, பிப்ரவரி திங்கள் 26-ஆம் நாளன்று இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருக்கும், இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், ஆளுநருக்கும் ஒரு தந்தி கொடுத்தேன். அந்தத் தந்தியில்,

“Interview for relatives of MISA detenus of DMK party in Tamil Nadu not yet granted for the past 26 days in Madras prison: Reason we reliably understand the detenus are mercilessly beaten inside the prison. M.Ps., former MLAs and office-bearers of DMK party are amongst such detenus so beaten. Request your immediate intervention preventing ill-treatment and necessary action to get interview”,

என்று ஒரு தந்தியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவன் என்கிற முறையில் அளித்து அந்தத் தந்தியின் நகல்களை இரா. செழியன் எம்.பி-க்கும், கவர்னரின் ஆலோசகருக்கும், தமிழ்நாடு அரசு சீஃப் செக்ரட்டரிக்கும், எம்.ஜி. கோரே எம்.பி-க்கும் (சோசலிஸ்ட் பார்ட்டி, பாம்பே), டி.கே. சீனுவாசனுக்கும், ஹோம் மினிஸ்டர் பிரமானந்த ரெட்டிக்கும், ஸ்டேட் மினிஸ்டர் ஃபார் ஹோம் டிபார்ட்மெண்ட் ஓம் மேத்தாவுக்கும் அனுப்பிவைத்தேன். இத்தனைப் பேர்களுக்கும் அந்தப் பிரதிகளை அனுப்பி வைத்தேன்.

குடியரசுத் தலைவருக்கு எழுதிய முழுக் கடிதம்

26-ஆம் தேதி தந்தி கொடுத்தது மாத்திரமல்ல. 27-ஆம் தேதியன்று குடியரசுத் தலைவருக்கு மிசா கைதிகள் இந்த நிலையிலே சிறைச்சாலையிலே நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்து ஒரு கடிதம் எழுதினேன்.

அந்தக் கடிதத்தில்,

“Your Excellency.

After the DMK Ministry has been dissolved followed by the imposition of President Rule in Tamil Nadu, the convict warders and warders of other category in the Madras Central Jail have been used for brutal attacks over the arrested persons for 2 or 3 days from January 31st onwards. They have terribly beaten and tortured the MISA detenus, including DMK prisoners.

Notwithstanding the pain and torture, it is said that some people have signed on compulsion. They were not even provided with proper food and water till one week after they were locked up inside 11 gallows.

Among those who have been treated so very badly, some are Deputy Secretaries of the DMK Head Office, some are Members of Parliament, some are Members of the Legislative Assembly. They have been scolded in abusive and filthy language. They have been treated bitterly. They have been locked inside the cells even at day time till 10 days. I do hope that the Government would not have ordered to treat them like this.

Those people who have been brutally beaten have been terrorised that if they reveal the fact outside, they will be beaten once again inside the Jail. If your Excellency want to know the facts about those tortures, you can gather information from the confidential files. Things have happened.

I request you to take necessary steps to protect the prisoners of Madras Central Jail from such tortures at least in the near future.

MISA detenus who are kept in Madurai and Vellore jails have been allowed for interview for the past two weeks. But in Madras Central Jail the relatives of the MISA detenus have not been allowed for interview even now.

I do hope that your conscience will not accept the way in which the political prisoners have been treated worser than those who have been convicted for murder. I request you to save the jail birds from torture by the Madras Central Jail authorities.”

என்று குடியரசுத் தலைவருக்கு நான் எழுதி இருக்கிறேன்.

சிறை வாசலில் உண்ணாவிரதம்

இதற்கிடையில் சென்னை தவிர மற்றச் சிறைச்சாலைகளில் உறவினர்கள் அல்லது பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மிசா கைதிகளை இன்டர்வியூ பார்க்கலாம் என்பதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டு விட்டன.

நான் டெல்லிக்கும் இங்குள்ள கவர்னருக்கும் கடிதமும் தந்தியும் அனுப்பிய பிறகும் எந்தவிதமான பதிலும் விளக்கமும் எங்களுக்குக் கிடைக்காத நிலையில், அடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் பிற்பகல் 1 மணி அளவில் அப்போது போலீஸ் ஐ.ஜி.யாக இருந்த அருள் அவர்களைத் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டேன்.

ஏறத்தாழ 27 நாட்களுக்கு மேலாகிறது. எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள், மற்றக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு அவர்களை இதுவரையில் நேர்காண அனுமதிக்கப்படவில்லை.

நான் ஒரு நாள் உங்களுக்கு நேரம் தருகிறேன். அதற்குள்ளாக எங்களுக்கு நீங்கள் தக்க பதில் அளிக்காவிட்டால், அந்தக் கைதிகளைப் பார்ப்பதற்கு அவர்களது உற்றார் உறவினர்களுக்கு அனுமதி வழங்காவிட்டால், மறுநாள் காலையில் என்னுடைய தலைமையில் உள்ளே இருக்கிற அரசியல்வாதிகளுடைய வீட்டார் அனைவரும் புறப்பட்டு சென்னை சிறைச்சாலை வாசலிலே உட்கார்ந்து உண்ணாவிரதம் தொடங்குவதாக இருக்கிறோம் என்று நான் ஐ.ஜி. அவர்களுக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தேன்.

அப்போது ராஜாஜி மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு ஆளுநர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உடனடியாக ஐ.ஜி. அவர்கள் ராஜாஜி மண்டபத்திற்கு விரைந்து சென்று அங்கே செய்தியை அறிவித்து, அதற்குப் பிறகு மறுநாள் எங்களுக்கு உள்ளே இருக்கிற கைதிகளைக் காண அந்தக் கைதிகளின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக டெலிபோன்கள் வருகின்றன; அதைத் தொடர்ந்து கடிதங்களும் வருகின்றன.

ஸ்டாலினைச் சந்தித்தபோது

நாங்கள் இன்டர்வியூ பார்க்கப் போன நேரத்தில் இங்கே கூட ஒரு நண்பர் பேசும்போது குறிப்பிட்டார்கள். கருணாநிதி இன்டர்வியூ பார்க்கப் போனபோது அவருடைய மகன் ஸ்டாலினே கூட தான் அடிப்பட்டதாகச் சொல்லவில்லை என்று இஸ்மாயில் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று எடுத்துச் சொன்னார்கள்.

அதற்குப் பிறகு தொடர்ந்து என்ன குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி இஸ்மாயில் அவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. தான் அடிப்பட்டோம் என்பதைச் சொல்லக்கூட முடியாத நிலைமையிலே அங்கே கைதிகள் இருந்தார்கள் என்பதற்கு அது ஒரு உதாரணம்.

நானும் எங்கள் வீட்டாரும் சென்று அமர்ந்திருக்கிற நேரத்தில் ஸ்டாலினையோ மாறனையோதான் பார்க்க முடியும். உற்றார் உறவினர்களைத்தான் பார்க்க முடியும் என்ற விதி இருப்பதால் மற்ற நண்பர்களைப் பார்க்க இயலாது. அப்படி உட்கார்ந்திருக்கிற நேரத்தில் எங்களைச் சுற்றி வளையம்போல் அதிகாரிகள் வந்து நின்றுகொள்வார்கள். இன்னும் சொல்லப்போனால் வெளியே இருக்கிற போலீஸ் அதிகாரிகள் கூட வந்து நின்றுகொள்வார்கள்.

செளக்கியமாய் இருக்கிறாயா என்று கேட்கலாம். ஆமாம், இருக்கிறேன் என்று சொல்லலாம். அடிப்பட்டாயாமே என்று நான் கேட்டதற்கு அதையெல்லாம் கேட்கக்கூடாது என்று என்னிடத்தில் சொல்லிவிட்டு, என் மகனிடத்தில் அந்தப் போலீஸ் அதிகாரி ஒரு பார்வையைத் திருப்ப, அவன் கண்கள் கலங்கி என்னிடத்தில் சொன்ன அந்தக் காட்சியினை நான் மறந்துவிடவில்லை.

அடிபடவில்லை என்றுதான் சொன்னான். ஆனால், ஆம் அடிபட்டோம் என்று அவன் சொல்லியிருப்பானேயானால் அன்று மாலையோ அல்லது அடுத்த நாள் காலையோ அவன் மட்டுமல்ல, சிறைச்சாலையில் இருந்த அரசியல் கைதிகள் அனைவரும் அதே கோர நிலையைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது என்பதை நான் இந்த மாமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

மு.க.ஸ்டாலின், சிட்டிபாபு

சிட்டிபாபுவின் நாட்குறிப்பு

சிட்டிபாபுவினுடைய நாள்குறிப்புப் புத்தகம் பற்றி இங்கே பேசப்பட்டது. சிட்டிபாபு தான் மறைவதற்கு முன்பு இப்படியொரு நிலை வரும் என்று எதிர்பார்த்தா அந்த டைரியை எழுதினான்? சிட்டிபாபுவை நமக்கெல்லாம் தெரியாதா? எங்களைவிட நெருங்கிய நண்பன் அல்லவா சிட்டிபாபு.

இந்த சென்னையில் மேயராக வீற்றிருந்து அவன் ஆற்றிய பணிகள் மாற்றாரும் புகழ்கிற அளவிற்கு இருந்திடவில்லையா? நாடாளுமன்ற உறுப்பினராக நாடு மெச்சுகின்ற அளவுக்கு, பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது சிட்டிபாபு அவர்களின் போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் ஆளாகின்ற அளவிற்கு பணிகளை ஆற்றிடவில்லையா?

அவனுடைய டைரியையா நாம் சந்தேகிக்கிறோம்? அவன் எழுதிய நாட்குறிப்பையா நாம் சந்தேகிக்கிறோம்? அவன் எழுதிய எழுத்துக்களையா நாம் சந்தேகிக்கிறோம்? என்பதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.

இப்ப இஸ்மாயில் கமிஷன் வரும் என்று சிட்டிபாபு டைரி எழுதிய நேரத்தில் எண்ணியிருக்க முடியாது. அந்த விசாரணைக்கு இந்த டைரி சாட்சியாகச் செல்லும் என்று கூட சிட்டிபாபு எண்ணியிருக்க முடியாது. நடந்தவைகளை நடந்தவைகளாக எழுதிக் கொண்டு வந்த டைரிதான் சிட்டிபாபு எழுதிய அந்த நாள்குறிப்புப் புத்தகம்.

நீதிபதி இஸ்மாயில் அவர்களுக்கு கிடைத்த வலுவான சாட்சியங்களில் ஒன்றாக அது இருந்ததால் அந்த அடிப்படையிலும் வேறு பல சாட்சியங்களின் அடிப்படையிலும் தன்னுடைய அறிக்கையை நமக்குத் தந்திருக்கிறார். சிட்டிபாபுவின் நாட்குறிப்பின் பல்வேறு பகுதிகளை இந்த அறிக்கையிலே இஸ்மாயில் அவர்கள் சுட்டிக்காட்டி இருப்பதை ஒருமுறை இங்கே படிப்பதின் வாயிலாக இந்த அவையின் நடவடிக்கைக் குறிப்பில் அது பதிவாகுமேயானால் சிட்டிபாபுவுக்கு நான் செய்த கடமை அதைவிட வேறு ஒன்றும் இருக்க முடியாது என்று நான் கருதுகிறேன்.

அந்த வீரமறவனுக்கு என்னுடைய நண்பர், மாண்புமிகு உறுப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்தராசன் அவர்கள் பேசும்போது சிட்டிபாபுவினுடைய குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதி தரவேண்டுமென்று சொன்னார்கள். அதுகூடத் தேவையில்லை. ஆனால், அவன் எழுதிய டைரி இந்த அவைக் குறிப்பில் ஏறுவது இருக்கிறதே அது அந்த மாவீரனுக்கு நாம் காட்டுகிற மரியாதை என்று சொன்னால் அது மிகையாகாது.

அவன் எழுதுகிறான்:

“மாலை 5 மணி மீண்டும் உணவு களியுடன்கூடிய தட்டு, யாரோ பயன்படுத்திய தட்டுக்கள், யாரோ பயன்படுத்திய சிறுநீர் பானைகள், யாரிடம் கேட்பது, கேட்டால் பதில் யார் சொல்வது. இரவு 7.30 மணி. அறைக்குள்ளே இருட்டுத்தான். ஆயினும் வெளிவாசலில் ஓரிரு விளக்குகள். மங்கலான ஒளியில் எட்டு மணியளவில் சில உருவங்கள் வருவதைக் காண முடிந்தது. காரணம் நான் இருந்த இடம் வருவோரைப் போவோரைப் பார்க்கும் வகையில் அமைந்திருந்தது. காக்கி உடைகள், வெள்ளை உடைகள், சற்றேறக்குறைய இருபதுக்கும் மேற்பட்டோர். சிறை அதிகாரிகள் இருவர். கயூம்—அழகான பெயர். அன்பு என்ற சொல்லுக்கு அளித்திட்ட உருது சொல்தான் கயூம். ஆமாம், அந்த அன்புதான் அந்த அரசியல் கைதிகளை அடித்திட்ட ஆட்களுடன் அங்கே நின்றிருந்தார்.”

“அவர் மட்டுமல்ல. அவர் கீழ் உள்ள அதிகாரிகள் உட்பட அவரது கையசைவில் அத்தனை பேரும் நாங்கள் இருக்கும் மண்டபத்திற்குள் நுழைந்தனர். எப்படி இரு கோடுகள் தனித்தனியே படுக்க வைத்தால் இருக்குமோ அப்படிப்பட்ட அமைப்பில் அவர்கள் நின்றிருந்தனர். அவர்களது கையிலிருந்த தடிகளை அவர்கள் நீட்டினால் ஏற்படும் அளவே இரு கோடுகளுக்கும் இடையேயுள்ள இடைவெளி. பட்டாளத்தின் வீரர்களைப்போல் அவர்கள் நின்றிருந்தனர்.”

“திறக்கப்பட்ட கதவு பளீர் என்ற சத்தத்துடன் திறந்து கொண்டது. ஏதோ சினிமாவில் காணும் காட்சி போல் இருந்தது. கொலைகார கைதிகளின் கைத்தடிகள் அரசியல்வாதிகளின் உடலைச் சுவைத்துக் கொண்டிருந்தன. அலறல், அழுகுரல்கள், ஐயோ, அப்பா, அம்மா என்னும் அபயக் குரல்கள்.”

“ஓடு உள்ளே என்ற உத்தரவு. சர்க்கஸ் புலி, ஆட்டுக்குட்டியின் தலையைத் தன் அகண்ட வாயில் வைத்துச் சுவைக்காமல் காண்போருக்கு வித்தை காட்டுவதுபோல், கணநேர அதிர்ச்சி. ஓடு என்றவுடன் தீ வளையத்தைத் தாண்டிச் செல்லும் சிங்கம் போல் கூண்டுக்குள் அடங்கியது.”

“அறை நான்கு முடிந்து பூட்டும் போடப்படுகிறது. அடுத்து நாம்தான். பூட்டு திறக்கப்படும் சப்தம் கேட்டது. கதவைத் தள்ளினார்கள். ‘வாங்கடா’ என்ற குரல்.”

“கதவு திறந்ததும் யார் முன்னே வெளியில் செல்வது என்ற காலம் கதவுகளை மூடப்போவதில்லை. அர்ச்சனைக்கு கொண்டு வந்த அரசியல் மலர்கள் அல்லவா நாங்கள். எனவே, திரும்பிப் பார்த்தேன். தீர்மானமாகவே முதலில் வெளியில் வந்தேன். பெயர் சொல்லி அழைத்தனர். எதிர்பார்த்த ஆள் அல்லவா நான். எனவே, ஓர் அடி எடுத்து வைப்பதற்குள் கன்னத்தில் வீழ்ந்த அறைகள் அடடா… நிலைக்கண்ணாடி கல் பட்டு உடைந்து விழுந்ததுபோல் எனக்குத் தோன்றியது.”

“கண்கள் கணநேரம் காண்பது எல்லாம் காரிருள்போல் இருந்தது. இரு கோடுகளுக்கு இடையில் தள்ளப்பட்ட எலி. ஆம் அவர்கள் அடித்ததும் அப்படித்தான். அவர்கள் நினைத்தனர் இது எலி அல்ல, புலி என்று. காரணம் அத்தனை அடிக்கும் என் உடல் தரை நோக்கி விழவில்லை. தள்ளினார்கள் மதில் சுவர்மீது. சட்டென்று திரும்பிக் கொண்டேன். வயிற்றில் எட்டி உதைத்து விட்டான்.”

“வீராசாமி நெடுமரமாக கீழே சாய்ந்து கிடந்தார். வெறிக்கூட்டம் முரசு பறை அறைவதுபோல் இரு கைகளால் அடி கொடுத்துக் கொண்டிருந்தது. ஒருபுறத்தில் இக்காட்சி. பள்ளிக்கூட மாணவன் பெஞ்சு மீது ஏறி நிற்பதுபோல் இரும்பு ஏணி அருகில் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு கதறும் வி.எஸ். கோவிந்தராசன். ஒரே குத்துத்தான் நீலநாராயணனுக்கு. குள்ள உருவம் அவருக்கு. மேலே நிமிர்ந்து பார்த்திட, மார்பகத்தில் மற்றொரு குத்து. முதுகில் இரண்டு தடி அடி. அவ்வளவுதான். குலை நோயில் கேவிக்கொண்டு கீழே விழும் நோயாளிபோல் சுருண்டு விழுவதைக் கண்டேன்.”

“அருகே என் அன்புத் தம்பி. ஆமாம் ஸ்டாலின்தான். தமிழகத்து முன்னாள் முதலமைச்சரின் மகன் என்று நேற்றுவரை அறிந்த அந்த சுருளிராஜன், தன் கால் பூட்சால் அவன் அழகிய முகத்தைச் சுவைபார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள்பட்டையில். காக்கி உடை அணிந்த வார்டர் ஒருவன் கன்னத்தில் கை நீட்டினான்.”

“கண்டேன் காட்சியை. இவர்கள் அவனை அடித்தே கொன்று விடுவர் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. மற்றவர்கள்தான் மண்ணுடன் சாய்ந்து கிடப்பவர்களாக இருக்கின்றனர். உதவிக்கு எழ அவர்கள் முடியாதபடி அருகில் எமதூதர்கள். என்ன செய்வது? எனக்கென்று ஓர் துணிவு. திடீரென்று குறுக்கே பாய்ந்தேன். தம்பியைத் தள்ளிக்கொண்டே தடிகள் கழுத்தில். அவைகள் அடிகள் அல்ல. உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தட்டிப் பதப்படுத்தும் உளியாக மாறி விழும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தது. கழுத்தில் அத்தனையையும் தாங்கிக் கொண்டேன். அன்புத் தம்பி அறைக்குள்ளே ஓடிவிட வழி கிடைத்தது.”

ஆர்க்காடு வீராசாமி

“வீராசாமியைத் தூக்கி நிறுத்தி ஒரு குத்துவிட்டு உள்ளே தள்ளினர். நீலநாராயணன் மூச்சுத் திணற, வி.எஸ். கோவிந்தராசனைத் தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்றார். தம்பியோ தான் பட்ட அடியை மறந்து, தன் உடன்பிறப்புக்களை அழைத்துச் செல்லும் காட்சி கண்டேன். அவர்களைப் படுக்க வைக்க, தன் தோள்துண்டை தரையில் போட்டு, தாக்கப்பட்டவர்களைத் தாங்கிப் படுக்கவைத்த காட்சி கண்டேன்.”

“கொடிய காற்றில் நெடிய மரம் சாய்ந்து விழுவதுபோல் அறையில் நான் வீழ்ந்தேன். இல்லை, தள்ளப்பட்டேன். அறை முழுவதும் இருள் அல்லவா? நினைவு வேறு எனக்குப் பாதியாகத்தானே இருக்கிறது. பூட்டு பூட்டப்பட்டது. உள்ளே அழுகுரல், முனகல், அப்பா, அம்மா என்ற ஒலி.”

“அன்புத் தம்பியோ அருகில் வந்தான். அண்ணன் நீலத்தையும், கோவிந்தராசனையும் மார்பில் சாய்த்துவிட்டு, அவன் தன் பிஞ்சுக் கரங்களால் என் முகத்தைத் தடவிக்கொண்டே கேட்டான்: ‘அண்ணே, இன்னும் உயிருடன் இருக்கிறாயா?’ ஆமாம். அவன் கேட்டதில் நியாயம் இருக்கிறது. அடிக்க வந்தவர்கள் அல்லவே அவர்கள். கொலைவெறித் தாக்குதல் அல்லவா நடத்தினார்கள்.”

“‘அடி பலமா உனக்கு?’ என்றேன். ‘அதெல்லாம் இல்லை அண்ணே’ என்று பெற்றவனைப்போல் பேசினான், தெம்பு குறையக்கூடாது என்பதற்காக. ‘தம்பி, உன்னையும் அடித்தார்களா பாவிகள்?’ என்றேன். ‘இருக்கட்டும் அண்ணே’ என்று சொல்லி அவன் என்னைத் தன் கரங்களால் அடிபட்ட இடங்களைத் தடவிக் கொடுத்துக்கொண்டே, என் கிழிந்த சட்டையைக் கழற்றிட உதவிபுரிந்தான்.”

“முகத்தைத் துடைத்துக்கொண்டே, ‘தம்பி தண்ணீர் தேவை’ என்றேன். பாவம் அவன் என்ன செய்வான்? அறையில் இருந்தால்தானே தர. அதற்குள் அதட்டல் குரல்: ‘யார்டா சிட்டிபாபு, வீராசாமி, நீலநாராயணன்; வாங்கடா வெளியே.’”

“பூட்டு திறக்கப்பட்டது. தம்பியைப் பார்த்தேன். அவன் போலும். பாவம் தண்ணீர் கேட்டதற்கு அவன் அப்பொழுது கண்ணீர் விட்டான். அந்தக் காட்சிகள் இதய இணைவுகள் அல்லவா?”

“அதிகாரிபோல் வந்தவர்கள் என்னை வீரமணி இருந்த அறை எண் எட்டில் தள்ளினார்கள். அதுபோல் நண்பர்கள் வீராசாமியையும், நீலநாராயணனையும் தனித்தனியே பூட்டியதைப்போல், ஸ்டாலினையும் தனியாக்கினர். அது பிரிவின் முதற்கட்டம்.”

“அறை எட்டு. ஏற்கனவே அங்கு ஏழு பேர்; அத்தோடு நானும். அடிபட்ட வேகத்தில் விடுதலை ஆசிரியர் வீரமணிக்கு முகம் வீங்கிவிட்டது. ஏற்கனவே அறுவை சிகிச்சைக்கு ஆட்பட்ட விடுதலை சம்பந்தம் அடிபட்டபோது, அவரது அறுவை சிகிச்சையில் மீண்டும் அவதி. இதய நோயுடன் வேதனைப்படும் தியாகராஜன். இவர்களுடன் நீதிபதியின் மகன் சத்தியேந்திரன். அன்றியில் மேலும் மூவர். என்னுடன் சேர்த்து ஆக எட்டு. அறையும் எட்டு என்ற இலக்கத்தில்.”

“‘அடி பலமா?’ என்று ஆசிரியர் வீரமணி கேட்டார். அழுவதைத் தவிர அவருக்கு என்ன பதில் என்னால் அப்போது தர முடியும்?”

“கழுத்து, வயிறு, தோள், கை, கால் இவைகள் போதாது என்று வீங்கிய உதடுகள். இத்தனையும் பார்த்தே அவர்கள் ‘எப்படித் தாங்கினாய்?’ என்றனர். என்ன செய்வது? என்னால் படுக்க, ஏன் நிற்க, நீட்டி உட்கார முடியாததால் சத்தியேந்திரன் தாங்கிப் பிடித்து சுவரில் சாய்த்து உட்கார வைத்தார். வழக்கறிஞர் அவர். அவரும் அடிபட்டவர்தானே.”

“சிறுநீர் கழிக்க வேண்டும் என்று எண்ணினேன். நகர்ந்தே கம்பி அருகில் வந்தேன். சிறுநீர் வந்தால்தானே? வயிறு வெடித்திடும் போன்ற பிரமை. அப்பா, அம்மா என்ற முனகல்.”

இது சிட்டிபாபுவின் டைரி. இறுதியாக சில மாதங்களில் சிட்டிபாபுவுக்கு நீண்ட அமைதியே வந்துவிட்டது.

மிசா கைதியாக இருந்தவர்கள் இந்தச் சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள்; இப்போதும் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார்கள்; இப்போதும் இருக்கிறார்கள். மேலவையின் உறுப்பினராக இருந்திருக்கிறார்கள்; இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் எந்த வகையில் நடத்தப்பட்டார்கள்? எப்படிப்பட்ட கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள்?

இவ்வளவுக்கும் யாரோ தனிப்பட்ட ஒருவர்தான் காரணம் என்று நான் கூறிட மாட்டேன். இங்கே பேசிய பல நண்பர்கள் எடுத்துக்காட்டியது போல் ஒன்றைச் செய்தார்கள். அதனுடைய பல்வேறு விளைவுகள் இந்த அளவுக்குக் கொண்டு வந்து விட்டன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

நெருக்கடி நிலை என்ற அந்தக் கோரப் பிசாசு அவிழ்த்துவிடப்பட்ட காரணத்தால் இப்படிப்பட்ட கொடுமையான நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடக்கக் காரணமாய் இருந்தது என்பதை யாரும் மறுத்திட முடியாது.

சாதி, மதம் கடந்த நிலை

அரசு நெருக்கடி நிலை என்ற நிலையை வகுத்தது. அதைத் தொடர்ந்து தி.மு.க. மற்றும் உள்ள கட்சிகள் நெருக்கடி நிலை கூடாது என்ற நிலையை எடுத்தது. இது கொள்கை வேறுபாடு. கொள்கை மாறுபாடு அல்லது கொள்கை முரண்பாடு என்ற அளவில் முடிந்திருக்க வேண்டிய ஒன்றே அல்லாமல், சென்னை சிறைச்சாலையை மற்ற சிறைச்சாலைகளுக்கெல்லாம் பூச்சாண்டி காட்டுகிற இடமாக, தமிழ்நாட்டில் இருக்கும் மக்களை எல்லாம் பீதி கொள்ளச் செய்கிற ஒரு நிலையமாக ஆக்கிக் கொள்ளவும், எங்கள் மீது போடப்பட்டிருக்கும் சர்க்காரியா கமிஷனுக்குக்கூட சாட்சிகளைக் கட்டாயப்படுத்தி தயாரிக்கின்ற இடமாகவும் ஆக்கிக் கொண்டார்கள் என்றால், அந்த அதிகாரிகள் யாராக இருந்தால் என்ன, எந்த மதத்தைச் சேர்ந்தவர், எந்த வகுப்பைச் சேர்ந்தவர், எந்த சாதியைச் சேர்ந்தவர், யாருக்கு வேண்டியவர்கள் என்பதல்ல முக்கியம்.

அதிகாரிகள் எந்த வகுப்பு, எந்த மதம், எந்த சாதி, யாருக்கு வேண்டியவர் என்று பார்த்தால் மாத்திரம் போதுமா? அடிப்பட்டவர்கள் யார்? அதிகாரியிலே ஒருவர் இன்ன இனத்தைச் சேர்ந்தவர் என்றால், அடிப்பட்ட சத்தியேந்திரன் எந்த இனத்தைச் சேர்ந்தவர்? அடிப்பட்ட முத்துராமலிங்கம் எந்த இனத்தைச் சேர்ந்தவர்? மறந்துவிட முடியுமா?

கயூம் என்ற அதிகாரி தவறு செய்தார் என்று இஸ்மாயில் என்ற நீதிபதி தீர்ப்பளிக்கவில்லையா? அறிக்கை தரவில்லையா? அப்படிப்பட்ட முடிவு எழுதவில்லையா? இதிலே சாதிகள், மதங்கள், வகுப்புகள் அனைத்தையும் கடந்த ஒரு நிலைமையைத்தான் நாம் எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

பாளையங்கோட்டை சண்முகம்

பாளையங்கோட்டை சண்முகத்தைப் பற்றி இங்கே நண்பர் கந்தசாமி பேசினார். இஸ்மாயில் கமிஷன் அறிக்கை மீது எடுத்துக்கொண்ட நேரத்தைவிட பாளையங்கோட்டை சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட நேரம் அதிகம்.

பத்து ஆண்டுகாலத்திற்கு முன்பு, பாளையங்கோட்டை சண்முகம் கொண்டிருந்த கொள்கைக்கும், இன்றைக்கு உள்ள கொள்கைக்கும் உள்ள மாறுபாட்டைச் சொன்னார்கள். அரசியலில் நேற்றைக்கு ஒரு கொள்கை, இன்றைக்கு ஒரு கொள்கை என்று வெகு காலத்தில் கொள்கைகள் மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், 10 ஆண்டு காலத்தில் ஒரு கொள்கை மாற்றம் பாளையங்கோட்டை சண்முகம் அவர்களுக்கு ஏற்பட்டது என்பதை—அதுவும் கந்தசாமி அவர்கள் சொல்லுகிற நேரத்தில் எனக்கு மிக மிக ஆச்சரியமாக இருந்தது.

எனவே, கொள்கை மாற்றங்கள் அல்ல நடவடிக்கை எடுக்க வேண்டியது இஸ்மாயில் கமிஷனின் அறிக்கைப்பார் யார் மீது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் மக்களைத் தூண்டிவிடுகிறார் என்றால், “மக்கள் நடவடிக்கை எடுப்பார்கள்” என்று சொல்லுகிறார் என்றால், அரசு எவ்வழியோ; குடிகள் அவ்வழி.

“மக்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்பதற்கு என்ன நியாயம் கற்பிக்கப்படுகிறதோ, அதே நியாயந்தான் பாளையங்கோட்டை சண்முகம் சொல்கிற “மக்கள் நடவடிக்கை எடுப்பார்கள்” என்பதற்கும் நியாயம் கற்பிக்கப்பட வேண்டும்.

ஆகவே, “மக்கள் நடவடிக்கை எடுப்பார்கள்” என்றால், ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் அல்ல; வன்முறையில் அல்ல, அற முறையில், அன்பு முறையில், அரசுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய முறையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை “மக்கள் எடுப்பார்கள்” என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பாளையங்கோட்டை சண்முகத்திற்கு ஏதோ ஒரு வகுப்பார் மீது துவேஷம் என்றெல்லாம் வெளியே பேசப்படுகிறது, பத்திரிகையில் செய்தி போடப்படுகிறது. துண்டு அறிக்கை வெளியிடப்படுகிறது. அவரே கூட்டங்களில் பேசியிருக்கிறார்; பேசுகிறார். செந்தாமரை என்ற அந்த அதிகாரியும் நீக்கப்பட வேண்டுமென்று பேசுகிறார்.

செந்தாமரைக்கும், பாளையங்கோட்டை சண்முகத்திற்கும் என்ன உறவு என்பதும், அவர்கள் இருவரும் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் நிதியமைச்சர் அவர்களுக்குத் தெரியும். இதிலே வகுப்பு பேதம் இல்லை. சாதி பேதம், மத பேதம் இல்லை.

குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை

மனிதனை மனிதனாக எண்ணாமல், மிருகங்களைப் போல் நடத்தி, மாக்களைப்போல் நடத்தி, மிருக ஆட்சியைச் சிறைச்சாலையில் புரிந்த, அதற்குத் துணை நின்றவர்கள்மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நடைபெறுகிற விவாதம். அதிலே திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய கருத்தை எடுத்து வைத்திருக்கிறது.

ஆகவே, இனியும் காலதாமதம் செய்யாமல், யார் யார், எந்த எந்த அதிகாரிகள் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்கள் மீது இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த அரசு சிறைச்சாலைச் சம்பவங்களுக்குப் பொறுப்பு அல்ல என்றாலும், நடைபெற்றுவிட்ட சம்பவங்களுக்கு விசாரணை நடத்தி, அறிக்கை வைத்த பிறகு, அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், அந்தப் பொறுப்பும், பழியும் இந்த அரசின்மீது ஏற்பட்டு விடக்கூடும் என்பதை நான் எச்சரித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும், தமிழக அரசையும் கேட்டுக்கொண்டு என் உரையை முடிக்கிறேன். இவ்வாறு கலைஞர் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share