தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் திமுகதான் குதிரை பேரத்தில் ஈடுபட்டது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 7 சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா , “எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வெளியில் ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டியில் எங்களது கூட்டணிக் கட்சி ஐயூஎம்எல் குதிரைபேரத்தில் ஈடுபட்டது என்கின்ற பதிவைச் செய்திருக்கிறார். இதை கடந்த இரண்டு நாட்களாக மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு உரையில் பேசியதைத் திரித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டைச் செய்யக்கூடிய ஒரு பதிவைச் செய்து கொண்டிருக்கிறார்.
தேர்தலில் எங்களுக்கு வெற்றி கிடைத்தவுடன் மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்கி, காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி அவர்களுடைய ஒத்துழைப்புடன் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் கடிதம் (Letter) கிடைத்தது. காங்கிரஸ் காரியக் கமிட்டியின் கூட்டணியில் கேரளாவில் ஐயூஎம்எல் இருக்கிறது. அந்த மதச்சார்பற்ற கொள்கைகளின் உறுதியுடன், என்னுடைய தலைவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்கின்ற கருத்துடன் ஐயூஎம்எல் கேரளாவில் அமைச்சரவையில் பங்கேற்றவுடன், ஐயூஎம்எல் என்னுடைய தலைவருடைய ஒப்புதலுடன், தலைவருடைய வழிகாட்டுதலுடன் ஐயூஎம்எல் கேரளா தலைவர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நாங்கள் பேசினோம்.
அதன்பிறகு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முதுபெரும் தலைவராக இருக்கக்கூடிய கட்சித் தலைவர்களுடன் நாங்கள் பேசினோம். அதன்பிறகு விசிக, கம்யூனிஸ்ட் தலைவர்கள், அகில இந்தியத் தலைவர்களுடன் நாங்கள் பேசினோம். எந்தவித சட்டமன்ற உறுப்பினர்களிடமும் தனிப்பட்ட முறையில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளரோ நாங்களோ எப்போதும் பேசவில்லை. இந்த அரசு ஜனநாயகப்படி மக்கள் தீர்ப்பளித்ததைத் தலைவணங்கி, காங்கிரசும், ஐயூஎம்எல், விசிக, கம்யூனிஸ்ட் தோழர்களும் அனைத்துத் தோழர்களும் ஜனநாயகப் பார்வையுடன் ஆட்சி அமைத்ததே தவிர, குதிரைபேரத்தை நடத்தியது யார்? என்பது தெரியும்
இப்போது அமைச்சருடைய சட்டமன்ற உரையில் கூறியது போல் ‘அக்கார்டு (Accord) ஹோட்டலில் தங்க வைத்தது யார்? அந்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்ட அக்கார்டு ஹோட்டலின் ஓனர் யார் என்றால் ஜகத்ரட்சகன், திமுக-வுடைய எம்.பி-யோட ஹோட்டல்’ அப்ப அவங்களைத் தங்க வைத்தது யார் என்று கூடிய விரைவில் விசாரணை நடத்து வேண்டும் என்பதை நாங்கள் பதிவு செய்கிறோம். திமுகதான் குதிரைபேரம் நடத்தியது.”என்று திட்ட வட்டமாக தெரிவித்தார்.
