‘கோடிகோடியாக பணம்.. அமைச்சர் பதவி’ – விமர்சனங்களுக்கு பேரவையில் அளித்த சையது ஃபாரூக் பாஷா

Published On:

| By Pandeeswari Gurusamy

சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, என்னையும் ஷாஜகானையும் தேடி வந்து கோடி கோடியாக பணத்தை பெட்டிகளில் கொண்டு வந்து கொடுத்து, உங்களுக்கு எந்த அமைச்சர் பதவி வேண்டும், கையெழுத்து போடுங்கள் என்று கேட்டனர்” என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா கட்சி கூட்டத்தில் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று(செப்டம்பர் 7) சட்டமன்றத்தில் பேசிய சையது ஃபாருக் பாஷா எம்எல்ஏ,”நேற்று முன்தினம் எங்களது கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழுவில் நான் தவறாகப் பேசியதாகச் சித்தரிக்கிறார்கள். நான் ஒன்றும் தவறாகப் பேசவில்லை; என்னுடைய தலைவர் சொன்னதைத்தான் நான் பொதுக்குழுவில் பேசினேன். திமுக, அதிமுக இரண்டும் இணைந்து அதிமுகவை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்று சொன்னார்கள் என்று சொல்லிய காரணத்தால், அதிமுக பிஜேபியுடன் கூட்டணியில் இருக்கிறது; அந்த கொள்கை எங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாது, நாங்கள் கோடிகளுக்காகச் செல்ல மாட்டோம் என்றோம்” என்றார். இதற்கு அதிமுக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.

ADVERTISEMENT

தொடர்ந்து பேசிய அவர், “நான் தவறாகப் பேசவில்லை; அந்த கொள்கையில் இருக்கும் கூட்டணியை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். கொள்கைக் கூட்டணியாக இருக்கக்கூடிய தவெகவை திராவிடக் கொள்கை கொண்ட கட்சியை நாங்கள் ஆதரிப்போம் என்று எங்கள் தலைவர் சொன்னார். அதைத்தான் நான் பொதுக்குழுவில் பேசினேன். பலர் தரகர்கள், தங்களது சுயநலத்திற்காகப் பேசியவர்கள் குறித்து பேசிவிட்டுத்தான் பல கோடி என்றெல்லாம் சொன்னார்கள். அந்த கோடிகளுக்கெல்லாம் சாயக்கூடிய இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிடையாது. கொள்கைக் கூட்டணியாக இருக்கக்கூடிய திராவிடக் கொள்கை கொண்ட தவெகவிற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று எங்கள் பொதுக்குழுவில் நான் சொன்ன வார்த்தை இது. நான் வேறு யாரையும் எதிர்த்து எதுவும் பேசவில்லை.

எங்கள் பொதுக்குழுவில் எங்களது தொண்டர்கள், ‘என்னப்பா, நீ கோடி கோடியாக வாங்கி விட்டாயாமே?’ என்று கேட்டார்கள். எங்கள் கட்சிக்காரர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய சூழல் இருந்த காரணத்தினால்தான், எங்களது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கைக் கூட்டணியுடன் இருப்பவர்கள், நாங்கள் கொள்கைக்காகச் சாய்ந்தவர்கள் என்று சொல்லி விளக்கம் அளித்தேன். நான் வேறு எதுவும் தவறாகச் சொல்லவில்லை” என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share