1954-ல் காமராஜரின் குடியாத்தம் முதல்.. ’சரித்திரம் படைத்த’ இடைத்தேர்தல்கள்- முழு வரலாறு!

Published On:

| By Mathi

தமிழக இடைத் தேர்தல்களின் வரலாறு

History of Tamil Nadu by-elections: தமிழ்நாட்டில் மீண்டும் “இடைத்தேர்தல்” களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்தியபாமா ஆகியோர் பின்னர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். அத்துடன் இருவருமே அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன.

ADVERTISEMENT

இவற்றில் தேர்தல் தொடர்பான வழக்குகள் காரணமாக 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், சட்டச் சிக்கல் இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று நமது மின்னம்பலம் “டிஜிட்டல் திண்ணை”யில் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதன்படியே தற்போது மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆன முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கும், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தங்களது அரசியல் பலத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டிய திமுக, அதிமுக ஆகிய எதிர்க்கட்சிகளுக்கும் இந்த இரண்டு இடைத்தேர்தல்களும் முக்கியமான அரசியல் சோதனையாக மாறியுள்ளன.

குறிப்பாக அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் காலியான தொகுதிகள் என்பதால், அந்த வாக்காளர்கள் மீண்டும் அதிமுகவையே தேர்வு செய்கிறார்களா, ஆளும் தவெகவுக்கு ஆதரவளிக்கிறார்களா அல்லது திமுகவுக்கு வாய்ப்பளிக்கிறார்களா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில் இடைத்தேர்தல்கள் என்பவை வெறும் காலியான ஒரு சட்டமன்ற அல்லது மக்களவை இடத்தை நிரப்புவதற்கான தேர்தல்களாக மட்டும் இருந்ததில்லை. சில நேரங்களில் முதல்வர்களின் பதவியை உறுதிப்படுத்தியிருக்கின்றன; சில தேர்தல்கள் புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு கட்சியை தமிழகத்தின் பிரதான அரசியல் சக்தியாக மாற்றியிருக்கின்றன; சில தேர்தல்கள் ஆட்சியையே காப்பாற்றியிருக்கின்றன.

உதாரணமாக, 1954 குடியாத்தம் இடைத்தேர்தல் காமராஜர் முதல்வராகத் தொடர வழிவகுத்தது. 1973 திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தல், எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுகவை தமிழகத்தின் பிரதான அரசியல் சக்திகளில் ஒன்றாக உயர்த்திய முதல் மிகப்பெரிய தேர்தல் வெற்றியாக அமைந்தது. 2002 ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் ஜெயலலிதாவை மீண்டும் சட்டமன்றத்திற்குள் கொண்டு வந்து முதல்வர் பதவிக்குத் திரும்ப வழிவகுத்தது. 2019-ல் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தொடருமா, கவிழுமா என்ற கேள்விக்கே பதிலளிக்கும் தேர்தல்களாக அமைந்தன.

அந்த வரிசையில் இப்போது மதுராந்தகம்–தாராபுரம் இடைத்தேர்தல்களும் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

தமிழக அரசியலில் இதற்கு முன்பு பரபரப்பையும் திருப்புமுனையையும் ஏற்படுத்திய இடைத்தேர்தல்கள் எவை? அவை ஏற்படுத்திய அரசியல் தாக்கங்கள் என்ன?

1954 குடியாத்தம்: முதல்வர் காமராஜருக்கான தேர்தல்

1954 ஏப்ரல் 13-ல் சென்னை மாநில முதல்வராக காமராஜர் பொறுப்பேற்றபோது அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லை. அதற்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களவை உறுப்பினராக இருந்த அவர், முதல்வராகப் பொறுப்பேற்றதும் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.

காமராஜர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெறுவதற்காக குடியாத்தம் எம்.எல்.ஏ.வாக இருந்த ஏ.ஜே. அருணாசல முதலியார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் குடியாத்தம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.

காங்கிரஸ் வேட்பாளராக காமராஜர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வி.கே. கோதண்டராமன் களமிறங்கினார். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் இருந்தது; அக்கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பின்னர்தான் பிரிந்தது.

குறிப்பிடத்தக்க வகையில் அப்போது காங்கிரஸின் எதிர்க்கட்சியாக வளர்ந்து கொண்டிருந்த திமுக, காமராஜரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை; அவருக்கு ஆதரவு அளித்தது. தந்தை பெரியாரும் “பச்சைத் தமிழர்” என்று காமராஜரை ஆதரித்தார். பேரறிஞர் அண்ணாவும் காமராஜருக்கு ஆதரவு தெரிவித்து, ”குணாளா! மணாளா! குலக்கொழுந்தே! குடியாத்தம் சென்று வா! வென்று வா” என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா.

1954 ஆகஸ்டில் நடைபெற்ற குடியாத்தம் இடைத்தேர்தலில் காமராஜர் 64,344 வாக்குகளைப் பெற்றார். கம்யூனிஸ்ட் வேட்பாளர் கோதண்டராமன் 26,132 வாக்குகளைப் பெற்றார். 38,212 வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜர் வெற்றி பெற்றார்.

முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த காமராஜர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தனது பதவியைத் தொடர வழிவகுத்த தேர்தல் என்பதால் குடியாத்தம் இடைத்தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் தனி இடம் பெற்றது.

1969 நாகர்கோவில்: தோல்விக்குப் பிறகு காமராஜரின் மீள்வருகை

1967 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தமிழக ஆட்சியை இழந்தது. திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது. காமராஜரே விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் நாகர்கோவில் மக்களவை உறுப்பினராக இருந்த ஏ. நேசமணி 1968-ல் மறைந்ததால் தொகுதி காலியானது. அதைத் தொடர்ந்து நாகர்கோவில் மக்களவை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் சார்பில் காமராஜர் களமிறங்கினார். அவருக்கு எதிராக ராஜாஜியின் சுதந்திரா கட்சி வேட்பாளராக எம். மத்தியாஸ் போட்டியிட்டார். தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுகவும் காமராஜரை எதிர்த்து மத்தியாஸுக்கு ஆதரவளித்தது. அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திமுக தலைவர்கள் தேர்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றினர்.

1969 ஜனவரி 8-ல் நடைபெற்ற தேர்தலில் காமராஜர் 1,28,201 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1967 தோல்விக்குப் பிறகு காமராஜரின் அரசியல் மீள்வருகையை உறுதி செய்த தேர்தலாக நாகர்கோவில் அமைந்தது. 1971 தேர்தலிலும் இத்தொகுதியில் காமராஜர் வென்றார்.

1973 திண்டுக்கல்: அதிமுகவின் முதல் மிகப்பெரிய தேர்தல் சோதனை

1972 அக்டோபரில் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர்., அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். புதிய கட்சிக்கு உண்மையில் மக்கள் ஆதரவு இருக்கிறதா என்ற கேள்விக்கான முதல் பெரிய பதிலை அளித்தது திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தல்.

திண்டுக்கல் தொகுதியின் திமுக எம்.பி. எம். ராஜாங்கம் மறைவால் இடைத்தேர்தல் ஏற்பட்டது. 1973 மே 20-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிமுக சார்பில் கே. மாயத்தேவர் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில்தான் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. அந்த இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்ததும் மாயத்தேவர்தான்.

அதிமுகவின் மாயத்தேவர் 2,60,824 வாக்குகளைப் பெற்றார். ஸ்தாபன காங்கிரஸின் என்.எஸ்.வி. சித்தன் 1,19,032 வாக்குகளையும், திமுகவின் பொன். முத்துராமலிங்கம் 93,496 வாக்குகளையும் பெற்றனர். மாயத்தேவர் 1,41,792 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதிமுக உருவான சில மாதங்களிலேயே கிடைத்த இந்த வெற்றி, எம்.ஜி.ஆர். வெறும் திரைப்பட நட்சத்திரம் மட்டுமல்ல; தனியாக ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தை நடத்தக்கூடிய தலைவர் என்பதற்கான முதல் தேர்தல் சான்றாக அமைந்தது.

1974 கோவை மேற்கு: திண்டுக்கல் வெற்றி தற்செயலானதல்ல

கோவை மேற்கு சட்டமன்றத் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. பி. கோபால் மறைந்ததால் அந்தத் தொகுதி காலியானது. 1973 திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற முதல் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, புதிய கட்சியின் அரசியல் பலம் மீண்டும் சோதிக்கப்பட்ட களம் கோவை மேற்கு.

1974 பிப்ரவரியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் சி. அரங்கநாயகம் போட்டியிட்டார். ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் 2-வது இடம் பெற்றார். ஆளும் கட்சியான திமுகவுக்கு 3-வது இடம்தான் கிடைத்தது. மிகவும் கடுமையான போட்டியில் சி. அரங்கநாயகம், ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளரை வெறும் 517 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆனால் அதைவிட அரசியல் ரீதியாக கவனிக்கப்பட்டது திமுக 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டதுதான். ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளருக்கும் திமுக வேட்பாளருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசமே 8,700-க்கும் அதிகமாக இருந்தது.

திண்டுக்கல்லில் அதிமுக பெற்ற வெற்றி ஒரு தனிப்பட்ட அதிர்ச்சி முடிவு அல்ல; கொங்கு மண்டலத்திலும் புதிய கட்சி வேரூன்றத் தொடங்கிவிட்டது என்பதை கோவை மேற்கு முடிவு உறுதிப்படுத்தியது.

பின்னாளில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுகளில் அமைச்சராகப் பணியாற்றிய சி. அரங்கநாயகத்தின் அரசியல் பயணத்திலும் இந்த இடைத்தேர்தல் முக்கியமானதாக அமைந்தது.

1979 நாகப்பட்டினம்: திமுக–இடதுசாரிகள் வெற்றி

நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.ஜி. முருகையன் கொலை செய்யப்பட்டதால் தொகுதி காலியானது. இதனால் 1979 ஜூன் 17 அன்று நாகப்பட்டினத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

கொலை செய்யப்பட்ட முருகையன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே. முருகையன் போட்டியிட்டார். அவருக்கு திமுகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவளித்தன.

எதிரணியில் அதிமுகவின் எம். மகாலிங்கம் போட்டியிட்டார். அவருக்கு இந்திரா காங்கிரஸ் ஆதரவளித்தது. கே. முருகையன் 2,88,000 வாக்குகளும், அதிமுகவின் மகாலிங்கம் 2,72,059 வாக்குகளும் பெற்றனர். வெறும் 15,941 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ வெற்றி பெற்றது.

1979 தஞ்சாவூர்: அதிமுக ஆதரவுடன் வென்ற இந்திரா காங்கிரஸ்

நாகப்பட்டினம் இடைத்தேர்தல் நடைபெற்ற அதே 1979 ஜூன் 17 அன்று தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தொகுதியில் இந்திரா காந்தி போட்டியிடுவது தொடர்பாக அப்போது பெரிய அளவில் அரசியல் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இறுதியில் இந்திரா காங்கிரஸ் சார்பில் எஸ். சிங்காரவடிவேல் களமிறங்கினார். அவரை அதிமுக ஆதரித்தது. எம்.ஜி.ஆர். இந்தக் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்தார். இந்திரா காந்தியும் தஞ்சாவூரில் நேரடியாகப் பிரச்சாரம் செய்தார். திமுக சார்பில் பி. தர்மலிங்கம் போட்டியிட்டார்.

சிங்காரவடிவேல் 3,09,868 வாக்குகளைப் பெற்றார். தர்மலிங்கம் 2,17,020 வாக்குகளைப் பெற்றார். சிங்காரவடிவேல் 92,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நாகையில் திமுக–இடதுசாரிகள் ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றி; தஞ்சையில் அதிமுக ஆதரவு பெற்ற இந்திரா காங்கிரஸ் வெற்றி என ஒரே நாளில் இரண்டு மாறுபட்ட அரசியல் முடிவுகள் கிடைத்தன.

1981 திருப்பத்தூர்: எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு ஆதரவளித்த எம்.ஜி.ஆர்.

1980 சட்டமன்றத் தேர்தலில் அப்போதைய ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த திருப்பத்தூர் தொகுதியில் இந்திரா காங்கிரஸ் சார்பில் வி. வால்மீகி வெற்றி பெற்றிருந்தார். அவர் மறைந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏற்பட்டது. 1981 நவம்பர் 29 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தது. திமுகவும் இந்திரா காங்கிரஸும் அரசியல் கூட்டணியில் இருந்த சூழல்.

ஆனால் ஆளும் அதிமுக திருப்பத்தூரில் வேட்பாளரை நிறுத்தாது என்று எம்.ஜி.ஆர். அறிவித்தார். பொதுத்தேர்தலில் ஒரு தொகுதியை வென்ற கட்சியின் உறுப்பினர் மரணம் போன்ற காரணத்தால் அந்த இடம் காலியானால், அந்தத் தொகுதியை அந்தக் கட்சியே மீண்டும் பெற அனுமதிக்க வேண்டும் என்ற தனது கருத்தை அவர் முன்வைத்தார். அதன்படி இந்திரா காங்கிரஸ் வேட்பாளருக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்றும் அறிவித்தார். எம்.ஜி.ஆரே நேரடியாகப் பிரச்சாரமும் செய்தார்.

இந்திரா காங்கிரஸ் சார்பில் ஆர்.என். அருணகிரி போட்டியிட்டார். ஜனதா கட்சி சார்பில் டி.எஸ்.எஸ். திருமால் யாதவர் களமிறங்கினார். அருணகிரி 42,676 வாக்குகள் பெற்றார். திருமால் யாதவர் 17,608 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் அருணகிரி 25,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்தத் தேர்தலின் முக்கியத்துவம் வெற்றி வித்தியாசத்தில் மட்டும் இல்லை. மத்திய அரசில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸுடன் உறவை மீண்டும் நெருக்கமாக்க எம்.ஜி.ஆர். முயன்ற காலகட்டத்தில் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளரையே ஆளும் அதிமுகவும் ஆதரித்ததால் தமிழக அரசியலில் வித்தியாசமான தேர்தலாக இது அமைந்தது.

அதிமுகவின் முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அப்போது “வசதிக்கேற்ற அரசியல்” என்று விமர்சித்தது. எம்.ஜி.ஆர். தரப்போ, இடைத்தேர்தல்களால் ஏற்படும் தேவையற்ற செலவைத் தவிர்த்து பொதுத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை முழு ஐந்தாண்டுகளுக்கும் மதிக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கொள்கையின் அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தது.

இதனால் 1981 திருப்பத்தூர் இடைத்தேர்தல், திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸை ஆளும் அதிமுகவும் ஆதரித்த அபூர்வமான தேர்தல் என்ற வகையில் தமிழக அரசியல் வரலாற்றில் தனி இடம் பெற்றது.

1982 பெரியகுளம்: திமுகவிடமிருந்து தொகுதியைப் பறித்த எம்.ஜி.ஆர்.

1980 மக்களவைத் தேர்தலில் பெரியகுளத்தில் திமுகவின் கம்பம் என். நடராஜன் வெற்றி பெற்றிருந்தார். அவர் மறைந்ததால் பெரியகுளம் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏற்பட்டது.

1982 செப்டம்பரில் நடைபெற்ற தேர்தல் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசுக்கு முக்கியமான அரசியல் சோதனையாக மாறியது.

அதிமுக சார்பில் எஸ்.டி.கே. ஜக்கையன், திமுக சார்பில் சி.என். ராமகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் ஏ.கே. ஷேக் ஆகியோர் போட்டியிட்டனர். ஜக்கையன் 2,52,377 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் 1,83,117 வாக்குகளைப் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளருக்கு 28,869 வாக்குகள் கிடைத்தன. அதிமுகவின் வெற்றி வித்தியாசம் 69,260.

1980-ல் திமுக வென்றிருந்த தொகுதியை 2 ஆண்டுகளுக்குள் அதிமுக கைப்பற்றியது. 1977, 1980 சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளுக்குப் பின்னரும் எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கு குறையவில்லை என்பதைக் காட்டிய முக்கியமான தேர்தல் இது.

1983 திருச்செந்தூர்: ஜெயலலிதாவுக்கு முதல் அரசியல் வெற்றியைத் தந்த தேர்தல்

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த எஸ். கேசவ ஆதித்தன் மறைந்ததைத் தொடர்ந்து 1983-ல் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 1982-ல் அதிமுகவில் இணைந்த ஜெயலலிதாவை, 1983-ல் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர். நியமித்திருந்தார். அதன்பிறகு அவர் சந்தித்த முதல் பெரிய தேர்தல் சோதனையாக திருச்செந்தூர் அமைந்தது.

அதிமுக சார்பில் அமிர்தராஜ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திமுக சார்பில் அந்தப் பகுதியில் செல்வாக்கு பெற்றிருந்த நெல்லை நெடுமாறன் களமிறக்கப்பட்டார். புதிய கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயலலிதாவின் தேர்தல் திறமையை சோதிக்கும் வகையில், திருச்செந்தூர் இடைத்தேர்தல் பொறுப்பை எம்.ஜி.ஆர். அவரிடம் ஒப்படைத்தார்.

இதையடுத்து காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர் உள்ளிட்ட தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஜெயலலிதா தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக வீடு வீடாகச் சென்று பெண்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். கடும் போட்டியின் முடிவில் அதிமுக வேட்பாளர் அமிர்தராஜ் 1,710 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் நெல்லை நெடுமாறனைத் தோற்கடித்தார்.

இந்த வெற்றி அதிமுகவுக்கு ஒரு தொகுதியைத் தக்கவைத்த வெற்றியாக மட்டும் அமையவில்லை. ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தில் அவர் தேர்தல் பொறுப்பேற்று பெற்ற முதல் வெற்றியாகவும் அமைந்தது.

எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுகவில் ஜெயலலிதாவின் வேகமான அரசியல் வளர்ச்சிக்கு முக்கிய தொடக்கப்புள்ளியாக அமைந்த தேர்தல் 1983 திருச்செந்தூர் இடைத்தேர்தல் என்ற வகையில் தமிழக அரசியல் வரலாற்றில் இதற்கு தனி முக்கியத்துவம் உள்ளது.

1985 திருச்செந்தூர்: அதிமுக–காங்கிரஸ் கூட்டணி வெற்றி

1984 மக்களவைத் தேர்தலில் திருச்செந்தூரில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற கே.டி. கோசல்ராம் மறைந்ததால் இடைத்தேர்தல் ஏற்பட்டது.

1984 பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுகவும் காங்கிரஸும் கூட்டணியாகப் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தன. அதே அரசியல் பின்னணியில்தான் இந்த இடைத்தேர்தலும் நடைபெற்றது.

காங்கிரஸ் சார்பில் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் போட்டியிட்டார். அவரை ஆளும் அதிமுக ஆதரித்தது. அவருக்கு எதிராக ஜனதா கட்சியின் பொன். விஜயராகவன் போட்டியிட்டார். தனுஷ்கோடி ஆதித்தன் 1,69,710 வாக்குகளையும், விஜயராகவன் 93,891 வாக்குகளையும் பெற்றனர். காங்கிரஸ் 75,819 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைத் தக்கவைத்தது.

எம்.ஜி.ஆர்.–ராஜீவ் காந்தி கால அதிமுக–காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் பலம் தொடர்வதை வெளிப்படுத்திய தேர்தலாக இது அமைந்தது.

1986 அருப்புக்கோட்டை, நெல்லை: கலைஞரின் கவிதையில் இடம்பிடித்த தேர்தல்கள்

1986-ல் அருப்புக்கோட்டை, திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.

அருப்புக்கோட்டையில் அதிமுக சார்பில் வி.எஸ். பஞ்சவர்ணமும், திமுக சார்பில் வி. தங்கபாண்டியனும் போட்டியிட்டனர். பஞ்சவர்ணம் 55,125 வாக்குகளையும், தங்கபாண்டியன் 34,202 வாக்குகளையும் பெற்றனர். அதிமுக 20,923 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

திருநெல்வேலியில் எம்.ஜி.ஆர். தனது அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் இருந்த ஆர்.எம். வீரப்பனை அதிமுக வேட்பாளராக நிறுத்தினார். திமுக சார்பில் ஏ.எல். சுப்பிரமணியன் போட்டியிட்டார். ஆர்.எம். வீரப்பன் 52,729 வாக்குகளையும், ஏ.எல். சுப்பிரமணியன் 39,495 வாக்குகளையும் பெற்றனர். அதிமுக 13,234 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1986 ஆகஸ்ட் 31 அன்று நடைபெற்ற இரு தொகுதிகளின் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றது.

இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 1986 செப்டம்பர் 15-ல் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா கவியரங்கில் கலைஞர், அருப்புக்கோட்டை–நெல்லை தோல்வியை அரசியல் கவிதையாக மாற்றினார்.

கலைஞரின் அருப்புக்கோட்டை நெல்லை இடைத்தேர்தல் தோல்வி குறித்த கவிதை

காதில் விழுகிறது சிலபேரின் கேலிச் சிரிப்பு…
கவியரங்கம் ஒருகேடா கழகத்திற்கு,
விழா நடத்த சிறிதேனும் வெட்கம் இலையோ இவர்களுக்கு

வெற்றி பெற்ற நாமிங்கே வீரவாள் சுழற்றி நிற்க,
வீணர்களுக்கென்ன முப்பெரும் விழா வேண்டி கிடக்குதென ஆவணக் குரல் ஒன்று கேட்குதங்கே…
விளக்கமொன்று அவர்களுக்கும் உங்களுக்கும் சொல்வேன் நான்….

விளக்கை அணைத்துவிட்டு வீட்டுக்குள் புகுந்த திருடன்..
அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு அகப்படாமல் ஓடியதுபோல்…
அருப்புக்கோட்டை, நெல்லை தொகுதிகளை வென்றுவிட்டார்..

இதற்குத்தான் நான் முன்பே சொன்னேன்,
இந்த இடியமீன் ஆட்சியிலே நமக்கு இடைத்தேர்தல் எண்ணம் எள்முனையும் வேண்டாமென்று…
இருந்தாலும் போர்க் களத்தில் விழுப்புண் பெறுவதே பெருமையென்று,
இனிய உடன்பிறப்புகள் எல்லோரும் இருகருத்துக்கிடமின்றி எடுத்துரைத்த காரணத்தால்,
பணநாயக படை எதிர்த்து நமது ஜனநாயக படை மோதிற்று…

மறைந்திருந்து மானமிகு வாலியை வீழ்த்திய, மாண்புமிகு ராமச்சந்திரனை…
மாவீரன் என்று போற்ற மகாகவி கம்பனே தயங்கினானென்றால்…
மாண்டாலும் வெற்றி வாலிக்குத்தானே…
ஆண்டாலும் அவன் தம்பி சுக்ரீவன் துரோகி தானே…
எனவே விழுந்தாலும் விழுப்புண் பெற்றவர்தான் வீரர்கள் பட்டியலில் இடம்பெறுவர்…

தாழ்ந்தாலும் தமிழன் தன்மானம் இழந்து தன் தலையை மட்டும் தாழ்த்தமாட்டான்…
தாய் தந்தையரை நன்றியுடன் போற்றும் தனிப் பண்பாட்டை மறக்கமாட்டான்…
தாயாக தமிழர்க்கு அண்ணாவும், தந்தையாக பெரியாரும் வாய்த்ததாலே…
அவருக்கு சேயாக விளங்குகின்ற திமு கழகம் செய்நன்றி சிறிதளவும் மறவாமல்…
இன்று, தெருமுனையில் பட்ட புண்னை சிரிப்பாலே ஆற்றி வருங்கால வெற்றிக்கு வழிவகுக்க காண்பீர்…

1989 மருங்காபுரி, மதுரை கிழக்கு தேர்தல்

1989 ஜனவரி 21-ல் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றபோது 234 தொகுதிகளில் 232 தொகுதிகளில்தான் தேர்தல் நடத்தப்பட்டது. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

அதற்குள் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு இரண்டாகப் பிளந்திருந்த ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகள் ஒன்றிணைந்தன. ஜெயலலிதா ஒன்றுபட்ட அதிமுகவின் தலைவராக உயர்ந்தார். தேர்தல் ஆணையமும் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் அதிமுகவுக்கு வழங்கியது.

ஒத்திவைக்கப்பட்ட மருங்காபுரி, மதுரை கிழக்கு தொகுதிகளுக்கு 1989 மார்ச் 11 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. இரு தொகுதிகளிலும் ஒன்றுபட்ட அதிமுக வெற்றி பெற்றது.

எனவே இவை முறையாக “இடைத்தேர்தல்கள்” அல்ல. ஆனால் ஜெயலலிதா தலைமையிலான ஒன்றுபட்ட அதிமுகவும் மீட்டெடுக்கப்பட்ட இரட்டை இலை சின்னமும் சந்தித்த முதல் முக்கிய தேர்தல்கள் என்பதால் தமிழக அரசியல் வரலாற்றில் தனி இடம் பெற்றன.

1991 துறைமுகம்: அதிமுக பேரலையிலும் திமுக தக்கவைத்த தொகுதி

1991 சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. கலைஞர் சென்னை துறைமுகம் தொகுதியில் வெறும் 890 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் கே. சுப்புவைத் தோற்கடித்திருந்தார்.

கட்சியின் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கலைஞர் 1991 ஜூன் 22 அன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் துறைமுகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

1991 ஆகஸ்ட் 24 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆகஸ்ட் 25 அன்று முடிவு அறிவிக்கப்பட்டது.

திமுக சார்பில் ஏ. செல்வராசன் 19,347 வாக்குகளும், அதிமுக–காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே. சுப்பு 16,111 வாக்குகளும் பெற்றனர். செல்வராசன் 3,236 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

1991 பொதுத்தேர்தலில் அதிமுக–காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தை முழுவதுமாக வாரிச் சென்ற சூழலில்கூட திமுக துறைமுகத்தைத் தக்கவைத்தது என்பதால் இந்த இடைத்தேர்தல் முக்கியமானது.

1993 பழனி: உடைந்த அதிமுக–காங்கிரஸ் உறவின் சோதனை

1991 மக்களவைத் தேர்தலில் பழனி தொகுதியில் காங்கிரஸின் ஏ. சேனாதிபதி கவுண்டர் வெற்றி பெற்றிருந்தார். அவர் மறைந்ததால் பழனிக்கு இடைத்தேர்தல் ஏற்பட்டது.

1991 பொதுத்தேர்தலில் அதிமுகவும் காங்கிரஸும் கூட்டணியாக இருந்தன. ஆனால் 1993-க்கு வந்தபோது இரு கட்சிகளின் உறவு கடுமையாகச் சீர்குலைந்திருந்தது.

பழனியில் அதிமுக சார்பில் குமாரசாமி, திமுக சார்பில் சுப்புலட்சுமி, காங்கிரஸ் சார்பில் வேணுகோபால் ஆகியோர் போட்டியிட்டனர்.

அதிமுகவின் குமாரசாமி 2,78,995 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுகவின் சுப்புலட்சுமிக்கு 2,34,070 வாக்குகளும், காங்கிரஸின் வேணுகோபாலுக்கு 1,30,626 வாக்குகளும் கிடைத்தன.

அதிமுகவின் வெற்றி வித்தியாசம் 44,925.

1991-ல் காங்கிரஸ் துணையுடன் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, காங்கிரஸுடனான உறவு முறிந்த அரசியல் சூழலிலும் தனது கட்சியின் தனித்த தேர்தல் பலத்தை நிரூபித்த தேர்தலாக இது அமைந்தது.

1997–2000: திமுக ஆட்சிக்கு தொடர்ச்சியான இடைத்தேர்தல் சோதனைகள்

1996-ல் மிகப்பெரிய வெற்றியுடன் ஆட்சிக்கு வந்த திமுக அடுத்த நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக பல இடைத்தேர்தல்களைச் சந்தித்தது.

1997 பிப்ரவரி 8 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகவின் பி. மாரி அய்யா 57,769 வாக்குகளையும், அதிமுகவின் எஸ். செல்லதுரை 45,745 வாக்குகளையும் பெற்றனர். திமுக 12,024 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைத் தக்கவைத்தது.

1998 பிப்ரவரி 22 அன்று குன்னூர் மற்றும் அருப்புக்கோட்டையில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.

குன்னூரில் திமுகவின் எம். ரங்கநாதன் 47,850 வாக்குகளையும், அதிமுகவின் எஸ். கருப்புசாமி 37,945 வாக்குகளையும் பெற்றனர். திமுக 9,905 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அருப்புக்கோட்டையில் திமுக எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான வி. தங்கபாண்டியன் மறைந்ததைத் தொடர்ந்து தேர்தல் ஏற்பட்டது. அவரது மகன் தங்கம் தென்னரசு திமுக வேட்பாளராக முதன்முறையாகக் களமிறங்கினார். தங்கம் தென்னரசு 40,223 வாக்குகளையும், அதிமுகவின் வி.எஸ். பஞ்சவர்ணம் 38,272 வாக்குகளையும் பெற்றனர். 1,951 வாக்குகள் வித்தியாசத்தில் தங்கம் தென்னரசு வெற்றி பெற்றார்.

1999 செப்டம்பர் 5 அன்று நத்தத்தில் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம் மறைவால் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் ஆர். விஸ்வநாதன் 38,764 வாக்குகளைப் பெற்றார். மதிமுகவின் பி. செல்லம் 31,220 வாக்குகளையும், தமிழ் மாநில காங்கிரஸின் எம். ஆண்டி அம்பலம் 28,465 வாக்குகளையும் பெற்றனர். விஸ்வநாதன் 7,544 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழ் மாநில காங்கிரஸ் வசமிருந்த தொகுதியை அதிமுகவுக்குக் கொண்டுவந்தார்.

1999 செப்டம்பர் 11 அன்று திருவட்டாரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜே. ஹேமச்சந்திரன் வெற்றி பெற்று திமுக வசமிருந்த தொகுதியைக் கைப்பற்றினார்.

2000 பிப்ரவரி 17 அன்று நெல்லிக்குப்பம், திருச்சி-II, அறந்தாங்கி ஆகிய மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.

நெல்லிக்குப்பத்தில் திமுகவின் வி.சி. சண்முகம் 62,256 வாக்குகளையும், அதிமுகவின் எம். வேலாயுதம் 47,367 வாக்குகளையும் பெற்றனர். திமுக 14,889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

திருச்சி-II தொகுதியில் திமுகவின் அன்பில் பெரியசாமி 60,990 வாக்குகளையும், அதிமுகவின் டி. ரத்தினவேல் 41,330 வாக்குகளையும் பெற்றனர். திமுக 19,660 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அறந்தாங்கியில் எஸ். திருநாவுக்கரசரின் எம்.ஜி.ஆர். அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. அன்பரசன் 71,491 வாக்குகளைப் பெற்றார். அதிமுகவின் ராஜா பரமசிவம் 44,733 வாக்குகளைப் பெற்றார். சி. அன்பரசன் 26,758 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அதிமுகவிடமிருந்து தொகுதியைக் கைப்பற்றினார்.

இந்தத் தொடர் தேர்தல்கள் மாநில ஆட்சியை மாற்றவில்லை. ஆனால் 1996-ல் ஏற்பட்ட திமுக பேரலை எந்த அளவுக்குத் தொடர்கிறது, அதிமுக எந்த அளவுக்கு மீண்டு வருகிறது என்பதை அவ்வப்போது அளந்த தேர்தல்களாக அமைந்தன.

2002 ஆண்டிப்பட்டி: ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கிய தேர்தல்

2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும் ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. இருந்தபோதும் அவர் முதல்வராகப் பதவியேற்றார்.

பின்னர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அவர் முதல்வர் பதவியை விட்டு விலக வேண்டியதாகியது. ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார். ஜெயலலிதா சட்டமன்றத்துக்குள் வருவதற்காக ஆண்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2002 பிப்ரவரி 21 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பிப்ரவரி 24 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா 78,437 வாக்குகளைப் பெற்றார். திமுகவின் வைகை சேகர் 37,236 வாக்குகளைப் பெற்றார். மதிமுக வேட்பாளர் வி. ஜெயச்சந்திரன் 8,421 வாக்குகளையும், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி 5,126 வாக்குகளையும் பெற்றனர். ஜெயலலிதா 41,201 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதன்பின்னர் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலக, ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.

1954 குடியாத்தம் காமராஜருக்கு எவ்வளவு முக்கியமோ, 2002 ஆண்டிப்பட்டி ஜெயலலிதாவுக்கும் அதே அளவு அரசியல் முக்கியத்துவம் கொண்ட தேர்தல்.

2009 திருமங்கலம்: தமிழக அரசியல் அகராதியையே மாற்றிய தேர்தல்

2006 சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலத்தில் மதிமுக சார்பில் வெற்றி பெற்ற வீர இளவரசன் மறைந்ததால் அந்தத் தொகுதி காலியானது. 2009 ஜனவரி 9 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக சார்பில் லதா அதியமான் போட்டியிட்டார். அவருக்கு எதிராக அதிமுக சார்பில் மு. முத்துராமலிங்கம் போட்டியிட்டார். விஜயகாந்தின் தேமுதிகவும் தனியாகக் களம் கண்டது.

லதா அதியமான் 79,422 வாக்குகளைப் பெற்றார். அதிமுகவின் முத்துராமலிங்கம் 40,156 வாக்குகளைப் பெற்றார். திமுக 39,266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆனால் திருமங்கலம் தேர்தலின் வரலாற்று முக்கியத்துவம் முடிவைவிட தேர்தலைச் சுற்றி எழுந்த பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுகளில்தான் இருந்தது.

அதன்பிறகு தமிழக அரசியல் அகராதியில் “திருமங்கலம் ஃபார்முலா” என்ற சொல்லாடல் நிலைத்துவிட்டது.

2015 ஸ்ரீரங்கம்: ஜெயலலிதா இல்லாத முதல் சோதனை

2011 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானார்.

2014 செப்டம்பரில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்ததால் அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இதனால் ஸ்ரீரங்கம் தொகுதி காலியானது.

2015 பிப்ரவரி 13 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிமுக சார்பில் எஸ். வளர்மதி போட்டியிட்டார். அவர் 1,51,561 வாக்குகளைப் பெற்றார். திமுகவின் என். ஆனந்த் 55,045 வாக்குகளைப் பெற்றார். வளர்மதி 96,516 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா சட்டமன்றத்துக்கு வெளியே இருந்த காலத்தில் அவரது சொந்தத் தொகுதியை அதிமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தக்கவைத்ததால் அரசியல் ரீதியாக முக்கியமான தேர்தலாக இது அமைந்தது.

2015 ஆர்.கே.நகர்: ஜெயலலிதாவின் இன்னொரு மீள்வருகை

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை 2015 மே 11 அன்று விடுதலை செய்தது. இதையடுத்து அவர் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.

அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெறுவதற்காக ஆர்.கே.நகர் அதிமுக எம்.எல்.ஏ. பி. வெற்றிவேல் மே 17 அன்று ராஜினாமா செய்தார். 2015 ஜூன் 27 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜெயலலிதா 1,60,432 வாக்குகளைப் பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி. மகேந்திரன் 9,710 வாக்குகளைப் பெற்றார். ஜெயலலிதா 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2002 ஆண்டிப்பட்டியைப் போலவே ஜெயலலிதாவின் மற்றொரு மிகப்பெரிய அரசியல் மீள்வருகைத் தேர்தலாக ஆர்.கே.நகர் அமைந்தது.

2017 ஆர்.கே.நகர்: அதிகாரப்பூர்வ அதிமுகவை வீழ்த்திய தினகரன்

2016 டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா மறைந்ததால் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி காலியானது.

அதன்பின் அதிமுகவில் கடுமையான அதிகாரப் போராட்டம் வெடித்தது. சசிகலா–தினகரன் தரப்பு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, பின்னர் எடப்பாடி பழனிசாமி–ஓ.பன்னீர்செல்வம் இணைந்த தரப்பு என கட்சிக்குள் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

இடைத்தேர்தல் முதலில் 2017 ஏப்ரலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் 2017 டிசம்பர் 21 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

சுயேட்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் 89,013 வாக்குகளைப் பெற்றார். அதிகாரப்பூர்வ அதிமுக வேட்பாளர் ஈ. மதுசூதனன் 48,306 வாக்குகளையும், திமுகவின் என். மருது கணேஷ் 24,651 வாக்குகளையும் பெற்றனர். தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜெயலலிதாவின் சொந்த தொகுதியில் அதிகாரப்பூர்வ அதிமுக வேட்பாளரை, கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட தினகரன் சுயேச்சையாகத் தோற்கடித்தது மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2019: 22 தொகுதிகள்… எடப்பாடி பழனிசாமி அரசைக் காப்பாற்றிய தேர்தல்கள்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தமிழக சட்டமன்றத்தில் பல தொகுதிகள் காலியாகின.

இதில் 18 தொகுதிகளுக்கு 2019 ஏப்ரல் 18 அன்று மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற்றது.

மீதமிருந்த சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே 19 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த 22 தொகுதிகளின் முடிவு அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு நீடிக்குமா என்ற கேள்வியுடன் நேரடியாக இணைந்திருந்தது.

பூந்தமல்லியில் திமுகவின் ஏ. கிருஷ்ணசாமி 1,36,905 வாக்குகளைப் பெற்று, அதிமுகவின் ஜி. வைத்தியநாதனை 60,096 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பெரம்பூரில் திமுகவின் ஆர்.டி. சேகர் 1,06,394 வாக்குகளைப் பெற்று, அதிமுகவின் ஆர்.எஸ். ராஜேஷை 68,023 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

திருப்போரூரில் திமுகவின் எல். இதயவர்மன் 1,03,248 வாக்குகளைப் பெற்று, அதிமுகவின் எஸ். ஆறுமுகத்தை 21,013 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சோளிங்கரில் அதிமுகவின் ஜி. சம்பத்து 1,03,545 வாக்குகளைப் பெற்று, திமுகவின் ஏ. அசோகனை 16,056 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

குடியாத்தத்தில் திமுகவின் எஸ். காத்தவராயன் 1,06,137 வாக்குகளைப் பெற்று, அதிமுகவின் ஆர். மூர்த்தியை 27,841 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆம்பூரில் திமுகவின் ஏ.சி. வில்வநாதன் 96,455 வாக்குகளைப் பெற்று, அதிமுகவின் ஜோதி ராமலிங்க ராஜாவை 37,767 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஓசூரில் திமுகவின் எஸ்.ஏ. சத்யா 1,15,027 வாக்குகளைப் பெற்று, அதிமுகவின் ஜோதி ரெட்டியை 23,213 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பாப்பிரெட்டிப்பட்டியில் அதிமுகவின் ஏ. கோவிந்தசாமி 1,03,981 வாக்குகளைப் பெற்று, திமுகவின் ஏ. மணியை 18,493 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அரூரில் அதிமுகவின் வி. சம்பத்குமார் 88,632 வாக்குகளைப் பெற்று, திமுகவின் சி. கிருஷ்ணகுமாரை 9,394 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நிலக்கோட்டையில் அதிமுகவின் எஸ். தேன்மொழி 90,982 வாக்குகளைப் பெற்று, திமுகவின் சி. சவுந்தரபாண்டியனை 20,675 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திருவாரூரில் திமுகவின் பூண்டி கலைவாணன் 1,17,616 வாக்குகளைப் பெற்று, அதிமுகவின் ஆர். ஜீவானந்தத்தை 64,571 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தஞ்சாவூரில் திமுகவின் டி.கே.ஜி. நீலமேகம் 88,972 வாக்குகளைப் பெற்று, அதிமுகவின் ஆர். காந்தியை 33,980 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மானாமதுரையில் அதிமுகவின் எஸ். நாகராஜன் 85,228 வாக்குகளைப் பெற்று, திமுகவின் கே. காசிலிங்கத்தை 8,194 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆண்டிப்பட்டியில் திமுகவின் ஏ. மகாராஜன் 87,079 வாக்குகளைப் பெற்று, அதிமுகவின் ஏ. லோகிராஜனை 12,323 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பெரியகுளத்தில் திமுகவின் கே.எஸ். சரவணகுமார் 88,393 வாக்குகளைப் பெற்று, அதிமுகவின் எம். மயில்வேலை 20,320 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சாத்தூரில் அதிமுகவின் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், திமுகவின் எஸ்.வி. சீனிவாசனை வெறும் 1,101 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பரமக்குடியில் அதிமுகவின் என். சதன் பிரபாகர் 82,438 வாக்குகளைப் பெற்று, திமுகவின் எஸ். சம்பத்குமாரை 14,032 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

விளாத்திகுளத்தில் அதிமுகவின் பி. சின்னப்பன் 70,139 வாக்குகளைப் பெற்று, திமுகவின் ஏ.சி. ஜெயக்குமாரை 28,554 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அரவக்குறிச்சியில் திமுகவின் வி. செந்தில் பாலாஜி 97,800 வாக்குகளைப் பெற்று, அதிமுகவின் வி.வி. செந்தில்நாதனை 37,957 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திருப்பரங்குன்றத்தில் திமுகவின் பி. சரவணன் 85,434 வாக்குகளைப் பெற்று, அதிமுகவின் எஸ். முனியாண்டியை 2,396 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஒட்டப்பிடாரத்தில் திமுகவின் எம்.சி. சண்முகையா 73,241 வாக்குகளைப் பெற்று, அதிமுகவின் பி. மோகனை 19,657 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சூலூரில் அதிமுகவின் வி.பி. கந்தசாமி 1,00,782 வாக்குகளைப் பெற்று, திமுகவின் பொங்கலூர் என். பழனிசாமியை 10,113 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மொத்தம் 22 தொகுதிகளில் திமுக 13 இடங்களையும், அதிமுக 9 இடங்களையும் வென்றது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருந்தாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் கிடைத்த அந்த 9 வெற்றிகள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தேவையான எண்ணிக்கையைப் பாதுகாக்க உதவின.

எனவே 2019-ன் 22 தொகுதி தேர்தல்களை “ஒரு ஆட்சியைக் காப்பாற்றிய இடைத்தேர்தல்கள்” என்று குறிப்பிடுவது பொருத்தமானது.

2023 ஈரோடு கிழக்கு: திமுக அரசின் முதல் பெரிய இடைத்தேர்தல் சோதனை

2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றிருந்தார். அவர் 2023 ஜனவரியில் மறைந்ததால் தொகுதி காலியானது. 2023 பிப்ரவரி 27 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

திமுக தலைமையிலான கூட்டணியில் அந்தத் தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்கப்பட்டது. மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார். அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு போட்டியிட்டார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,156 வாக்குகளைப் பெற்றார். கே.எஸ். தென்னரசு 43,923 வாக்குகளைப் பெற்றார். இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசுக்கு மக்கள் அளித்த முதல் பெரிய இடைக்காலத் தீர்ப்பாக இந்த வெற்றி முன்வைக்கப்பட்டது.

2024 விக்கிரவாண்டி: அதிமுக இல்லாத மும்முனைப் போட்டி

விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. நா. புகழேந்தி 2024 ஏப்ரல் 6 அன்று மறைந்ததால் தொகுதி காலியானது.

இதையடுத்து 2024 ஜூலை 10 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

திமுக சார்பில் அன்னியூர் சிவா என்ற ஏ. சிவசண்முகம் போட்டியிட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமகவின் சி. அன்புமணி களமிறங்கினார். நாம் தமிழர் கட்சியும் தனியாகப் போட்டியிட்டது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலைப் புறக்கணித்தது. தேமுதிகவும் போட்டியிடவில்லை. இதனால் அதிமுக வாக்குகள் யாருக்குச் செல்லும் என்பதே தேர்தலின் முக்கிய விவாதமாக மாறியது. திமுகவின் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகளைப் பெற்றார். பாமகவின் சி. அன்புமணி 56,296 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் அபிநயா 10,602 வாக்குகளையும் பெற்றனர்.

அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளையும் திமுக தலைமையிலான கூட்டணி வென்ற சில வாரங்களுக்குப் பிறகு நடந்த தேர்தல் என்பதால், அந்த வெற்றி தொடர்கிறதா என்பதை அளவிடும் சோதனையாக விக்கிரவாண்டி பார்க்கப்பட்டது.

2025 ஈரோடு கிழக்கு: இரண்டு ஆண்டுகளில் மீண்டும் இடைத்தேர்தல்

2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 2024 டிசம்பரில் மறைந்தார். இதனால் இரண்டு ஆண்டுகளுக்குள் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் ஒரு இடைத்தேர்தலைச் சந்தித்தது.

2023-ல் காங்கிரஸ் போட்டியிட்ட இந்தத் தொகுதியில், 2025 இடைத்தேர்தலில் திமுக நேரடியாகக் களமிறங்கியது. திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் மு.க. சீதாலட்சுமி போட்டியிட்டார். அதிமுகவும் பாஜகவும் தேர்தலைப் புறக்கணித்தன. 2025 பிப்ரவரி 5 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வி.சி. சந்திரகுமார் 1,15,709 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் மு.க. சீதாலட்சுமி 24,151 வாக்குகளைப் பெற்றார். நோட்டாவுக்கு 6,109 வாக்குகள் கிடைத்தன. வி.சி. சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஒரே சட்டமன்ற காலகட்டத்தில் ஈரோடு கிழக்கு இரண்டு முறை இடைத்தேர்தலைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

2026 தாராபுரம், மதுராந்தகம்: விஜய் அரசுக்கு முதல் இடைத்தேர்தல் சோதனை

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரம் (தனி) தொகுதியில் சத்யபாமாவும், மதுராந்தகம் (தனி) தொகுதியில் மரகதம் குமரவேலும் வெற்றி பெற்றனர். தேர்தலுக்குப் பிறகு இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் இரண்டு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு 2026 அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் செப்டம்பர் 7-ஆம் தேதி அறிவித்தது. செப்டம்பர் 9-ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, செப்டம்பர் 16-ல் முடிவடைகிறது. அக்டோபர் 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆன முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் சோதனை என்பதாலும், அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் பதவியை ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட தேர்தல் என்பதாலும் இந்த இரு தொகுதிகளின் முடிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இடைத்தேர்தல்கள் சொல்லும் அரசியல்

இந்த வரலாற்றைப் பார்த்தால், இடைத்தேர்தல் என்பது காலியான ஒரு தொகுதியை நிரப்புவதற்கான தேர்தல் மட்டுமல்ல என்பது தெளிவாகிறது.

1954 குடியாத்தம் காமராஜரை முதல்வராகத் தொடர வைத்தது.

1969 நாகர்கோவில், 1967 தோல்விக்குப் பிறகு காமராஜரின் அரசியல் மீள்வருகைக்கு வழிவகுத்தது.

1973 திண்டுக்கல், எம்.ஜி.ஆர். தொடங்கிய புதிய அதிமுகவுக்கு தமிழக அரசியலில் மிகப்பெரிய இடத்தை உருவாக்கிக் கொடுத்தது.

அதைத் தொடர்ந்து 1974 கோவை மேற்கு வெற்றி, திண்டுக்கல் வெற்றி தற்செயலானது அல்ல என்பதை நிரூபித்தது.

1982 பெரியகுளம் எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கு தொடர்ந்து நீடிப்பதை வெளிப்படுத்தியது.

1991 துறைமுகம், அதிமுக–காங்கிரஸ் பேரலைக்குப் பிறகும் திமுகவின் அரசியல் அடித்தளம் முற்றிலும் அழிந்துவிடவில்லை என்பதைக் காட்டியது.

2002 ஆண்டிப்பட்டி ஜெயலலிதாவை மீண்டும் சட்டமன்றத்திற்குள் கொண்டு வந்து முதல்வர் பதவிக்குத் திரும்ப வழிவகுத்தது.

2009 திருமங்கலம் தமிழக தேர்தல் அரசியலில் “திருமங்கலம் ஃபார்முலா” என்ற புதிய சொல்லாடலையே உருவாக்கியது.

2015 ஸ்ரீரங்கமும் ஆர்.கே.நகரும் ஜெயலலிதாவை மையமாகக் கொண்ட தமிழக அரசியலின் வலிமையை மீண்டும் வெளிப்படுத்தின.

2017 ஆர்.கே.நகர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியை தலைகீழாக மாற்றியது.

2019-ல் 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் தொடர்ச்சியையே தீர்மானித்தன.

2023, 2025 ஈரோடு கிழக்கு தேர்தல்களும், 2024 விக்கிரவாண்டி தேர்தலும் ஆட்சியில் இருந்த திமுகவுக்கான அரசியல் சோதனைகளாக அமைந்தன.

அந்த நீண்ட வரிசையில் இப்போது மதுராந்தகம்–தாராபுரம் இடைத்தேர்தல்கள் வந்துள்ளன.

அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் ஏற்பட்ட தேர்தல்கள் என்பதால், இவற்றின் முடிவு இரண்டு தொகுதிகளுக்கான முடிவாக மட்டும் பார்க்கப்படப் போவதில்லை.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு என்ன?

2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்திருக்கிறதா?

திமுக எந்த அளவுக்கு மீண்டு வருகிறது?

இந்த மூன்று கேள்விகளுக்கும் மதுராந்தகம்–தாராபுரம் வாக்காளர்கள் அளிக்கப் போகும் பதில், தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் விவாதத்திற்கான முக்கிய திசைகாட்டியாக அமைய உள்ளன.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share