பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இப்படிப் பேசுவது தவறு; எல்லோரும் அமருங்கள், உட்காரச் சொல்லுங்கள். ஆளும் கட்சியைப் பொறுத்தவரை நமக்குத்தான் அதிக பொறுப்பு உள்ளது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் எச்சரித்தார்.
சட்டமன்றத்தில் இன்று பேசி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,””திமுகவின் திட்டம் என்னவென்றால், அவர்கள் பேசுவதை நாம் கேட்க வேண்டும்; ஆனால் நாம் பேசுவதை அவர்கள் கேட்கவே மாட்டார்கள். இப்போது கூட, “நேரு அண்ணன், நாங்கள் பேசிவிடுகிறோம்” என்கிறார்; ஆனால் நாங்கள் பேசும்போது கேட்க மாட்டார்கள், சத்தம் போட்டுக் கொண்டே இருப்பார்கள். அதனால், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு. வேலு அவர்களுக்குப் பதில் சொல்லிவிடுகிறேன்” என்றார். அப்போது திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், “நாங்களும் எழுந்து கொள்ளலாமா?” என்றார். உடனே, தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த சபாநாயகர், “மாண்புமிகு அமைச்சர், இப்படிப் பேசுவது தவறு; எல்லோரும் அமருங்கள், உட்காரச் சொல்லுங்கள். ஆளும் கட்சியைப் பொறுத்தவரை நமக்குத்தான் அதிக பொறுப்பு உள்ளது. நேற்று முதல்வர் பேசும்போது எப்படி அமைதி காத்தீர்கள்? அதே அமைதியை இப்போதும் நீங்கள் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள் பார்க்கிறார்கள்; யார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றார்.
