பட்ஜெட்டுக்கு முன்னரே ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு- எ.வ.வேலு மீது உரிமை மீறல் பிரச்சனை எழுப்பிய ஆதவ் அர்ஜூனா!

Published On:

| By Mathi

எ.வ.வேலு மீது உரிமை மீறல் பிரச்சனை

”திமுக ஆட்சியில் 2026–2027 ஆம் ஆண்டிற்கான CRIDP திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு ரூபாய் 2,000 கோடி முன்கூட்டியே நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது” தொடர்பாக முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மீது சட்டசபையில் உரிமை மீறல் பிரச்சனையை தற்போதைய பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எழுப்பினார்.

தமிழக சட்டசபையில் இன்று (செப்டம்பர் 8) அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் விதி எண் 219-ன் கீழ், மாண்புமிகு முன்னாள் அமைச்சர், இன்றைய சட்டமன்ற உறுப்பினர் எ.வ. வேலு, நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, 14.01.2026 நாளிட்ட ஜி.ஓ. எண் 06 மூலம் 2026–2027 ஆம் ஆண்டிற்கான CRIDP திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு ரூபாய் 2,000 கோடி முன்கூட்டியே நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அத்தொகை 2026–27-ல் மொத்த திட்ட அனுமதிக்குள் பின்னர் சரி செய்யப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த நேரத்தில் 2026-27 மானியக் கோரிக்கைகள் பேரவையால் வாக்களிக்கப்படவோ, Appropriation Act நிறைவேற்றப்படவோ இல்லை.

இருப்பினும் இப்பணிகளுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, 2025–2026 நிதியாண்டிலேயே 80 பணி ஆணைகளும் வழங்கப்பட்டு, எதிர்கால Budget Provision மீது ரூபாய் 2,000 கோடி Committed Liability உருவாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது சட்டமன்ற நடைமுறைக்கு எதிரானது. சட்டமன்றத்தில் பட்ஜெட் அப்ரூவ்டு இல்லாமலேயே, எதிர்கால பட்ஜெட்டிலிருந்து 2,000 கோடி ரூபாயை, அதாவது இவங்க ஆட்சிக்கு வந்துருவோம்னு நினைச்சுட்டு, எதிர்கால பட்ஜெட்டிலிருந்து 2,000 கோடி ரூபாயை சட்டமன்ற அனுமதியோடு எடுத்துருக்காங்க.

இந்தப் பேரவையின் முன் அனுமதி இன்றி பட்ஜெட்டை எதிர்பார்த்து பொறுப்பு ஏற்படுத்திய Anticipation of the Budget ஆகும்.

ADVERTISEMENT

அரசியலமைப்புச் சட்ட உறுப்புகள் 2002 முதல் 2006 வரை மாநிலத்தின் செலவினங்களைப் பரிசீலித்து மானியம் வழங்கும் அதிகாரத்தைப் பேரவைக்கு அளிக்கின்றன. குறிப்பாக உறுப்பு 203-ன் கீழ் மானியத்தை ஏற்க, மறுக்க அல்லது குறைக்க பேரவைக்கு உள்ள அதிகாரம், ஒப்பந்தப் பொறுப்பை முன்கூட்டியே உருவாக்கியதால் செயல்முறையில் பறிக்கப்பட்டுள்ளது.

பின்னர் நிதி ஒதுக்கீடு பெறுவது முன்பே உருவாக்கப்பட்ட அங்கீகாரம்மற்ற பொறுப்பை சட்டபூர்வமாக்காது.

எனவே பேரவையின் நிதி மேலாதிக்கத்தையும் கண்ணியத்தையும் பாதிக்கும் இவ்விவகாரத்தை, பேரவை விதி பேரவை விதி 225-ன் கீழ் அவை உரிமைக்குழுவிற்கு Examination, Investigation and Report-க்காக அனுப்புமாறு பணிவுடன் கோருகிறேன்.

இப்பொறுப்பின்மை தொடர்பாகச் சிறு குறிப்பினையும் தேவையான ஆவணங்களையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்: பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் காலையிலே என்னுடைய அலுவலகத்திற்கு வந்து இந்தக் குறிப்பையெல்லாம் தந்தார்கள். அதை நான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, இப்போது விளக்கமாக அது பற்றி இங்கே விளக்கி இருக்கின்றார்கள்.

இதை முறையாக ஆய்வு செய்து, இது உரிமை மீறல் பிரச்சினையில் வருமா அல்லது வேறு எந்த நடவடிக்கைக்கு இதை உள்ளாக்கலாம் என்பதைப் பற்றிய முடிவை நான் பின்னர் ஆய்வு செய்த பிறகு அறிவிப்பேன்.

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: எதற்கு இந்த அவையில் இந்த முக்கிய உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டு வருகிறோம் என்றால், ஒரு சட்டமன்றத்தில்தான் நம்முடைய பட்ஜெட்டை வந்து அப்ரூவல் வாங்க முடியும்.

ஆனால் தேர்தல் நேரத்தில், எதிர்காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றுவிடும் என்கின்ற ஒரு நம்பிக்கையுடன், சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் பண்ணாமல், மானியத்தை அப்ரூவல் வாங்காமல், எதிர்கால பட்ஜெட்டிலிருந்து 2,000 கோடி ரூபாயை ஒதுக்கியது மிகப்பெரிய தவறு. இதற்குள் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது என்பதை நாங்கள் பதிவு செய்கிறோம்.
அந்த ஊழல் குற்றச்சாட்டு இருக்கா, இல்லையா என்பது எதிர்காலத்தில் உள்ள Investigation Body-க்கு நான் கொண்டு போவேன் என்கிறதை பதிவு பண்ணலாம்.

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்: முதல்முறையாக இப்படிப்பட்ட நிகழ்வு நம்முடைய அவையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. முறையாக அதை ஆய்வு செய்து, எப்படிப்பட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கலாம் என்பதைப் பற்றி நாம் முடிவெடுப்போம்.

சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட நிலையில எ.வ.வேலு மீது உரிமை மீறல் பிரச்சனையை ஆதவ் அர்ஜூனா முன்வைத்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share