வளர்ந்து வரும் தமிழ்நாடு பட்ஜெட்: எந்த திசையில் செல்கிறது?

Published On:

| By நா.மணி

நா.மணி, வே.சிவசங்கர்

காரசாரமான விவாதங்களுடன் தமிழக மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்த முதல் வரவு செலவு திட்ட சட்டமன்றக் கூட்டம் இன்றுடன் நிறைவு பெற இருக்கிறது. தமிழ்நாட்டின் வருவாய் வளர்ச்சி வலுவாக இருக்கிறது. வருவாய் பற்றாக்குறை, வட்டி சுமை, மூலதனச் செலவின் போக்கு ஆகியவை தமிழ்நாட்டின் நிதிநிலையை எச்சரிக்கும் மூன்று சமிக்ஞைகளாக விளங்குகிறது.

தமிழ் நாட்டின் முதல் வரவு செலவு அறிக்கையின் (1952-53)மொத்த வருவாய் 108 கோடி. மொத்தச் செலவு 105.88 கோடி. உபரி 2.02 கோடி. 2026-27 பட்ஜெட்டில் மொத்தச் செலவு 4.62 இலட்சம் கோடி. இப்படி, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் பட்ஜெட்டின் வரவு செலவு அதிகரிப்பது மட்டுமே ஒரு மாநிலத்தின் நிதி ஆரோக்கியத்தையும் வளர்ச்சியின் தரத்தையும் தீர்மானிக்காது. அரசின் வருவாய் எவ்வளவு வேகமாக வளர்கிறது? அந்த வருவாய் எதற்காகச் செலவிடப்படுகிறது? கடன் வாங்குவது எந்த நோக்கத்திற்காக? மூலதனச் செலவுகள் அல்லது அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதற்கா? என்பவையே முக்கியமான கேள்விகள்.

ஒரு சிறிய ஒப்பீடு

2021–22 முதல் 2026–27 வரையிலான தமிழ்நாடு பட்ஜெட் புள்ளிவிவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், மாநில நிதிநிலையில் ஒரே நேரத்தில் இரண்டு முரண்பட்ட போக்குகளை காணலாம். ஒருபுறம் மாநிலத்தின் சொந்த வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது. மறுபுறம், வருவாய்ப் பற்றாக்குறை மீண்டும் அதிகரித்துள்ளது. வட்டியும் உயர்ந்து வருகிறது. மூலதனச் செலவின் வளர்ச்சி, வருவாய்ச் செலவின் வளர்ச்சியை விடக் குறைவாக உள்ளது.

ADVERTISEMENT

2021–22-ல் தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் மூலதனச் செலவுகள் ரூ.3.03 லட்சம் கோடி. 2026–27-ல் இது ரூ.4.63 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் 52.55 விழுக்காடு அதிகரிப்பு. இந்தப் பெருக்கம் அரசின் சமூகப் பொறுப்புகள் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. கல்வி, சுகாதாரம், நலத்திட்டங்கள், உணவு, மின்சாரம், போக்குவரத்து, சாலைகள், குடிநீர், நகர்ப்புற உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் அரசின் செலவுகள் விரிவடைந்திருப்பதையும் காட்டுகிறது. ஆனால் இந்த வளர்ச்சியில் முக்கியமான ஒரு அம்சம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். மொத்தச் செலவில் வருவாய்ச் செலவுதான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.

2021–22-ல் ரூ.2.61 லட்சம் கோடியாக இருந்த வருவாய்ச் செலவு 2026–27-ல் ரூ.4.06 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 55.37 விழுக்காடு அதிகரிப்பு. அதே காலகட்டத்தில் மூலதனச் செலவு ரூ.42,181 கோடியிலிருந்து ரூ.56,985 கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது. 35.10 விழுக்காடு அதிகரிப்பு. இதுவே தமிழ்நாடு பட்ஜெட்டின் முக்கியமான நிதிச் சவால்.

சம்பளம் அல்ல, மானியங்களும் வட்டியுமே பெரிய சுமை

ADVERTISEMENT



தமிழ்நாடு அரசின் அதிகரிக்கும் செலவுக்கு அரசு ஊழியர்களின் சம்பளமே பிரதான காரணம் என்று பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் பட்ஜெட் கொடுக்கும் புள்ளிவிவரங்கள்
அதை முழுமையாக ஆதரிக்கவில்லை.

2021–22-ல் சம்பளச் செலவு ரூ.63,919 கோடி. 2026–27-ல் அது ரூ.91,032 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 42.42 விழுக்காடு அதிகரிப்பு. ஆனால் வருவாய்ச் செலவில் சம்பளத்தின் பங்கு 24.47 விழுக்காட்டிலிருந்து 22.43 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதாவது சம்பளச் செலவு அதிகரித்திருக்கிறது. ஆனால் மொத்த வருவாய்ச் செலவு அதைவிட வேகமாக அதிகரித்திருக்கிறது. மாறாக, மானியங்கள் மற்றும் பணப் பரிமாற்றங்கள்தான் மிகப்பெரிய செலவுக் கூறாக உள்ளன.

2026–27-ல் மானியங்கள் மற்றும் பரிமாற்றங்களுக்காக ரூ.1.74 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த வருவாய்ச் செலவில் சுமார் 43 விழுக்காடு. இதில் நலத்திட்டப் பணப் பரிமாற்றங்கள், மின்சாரத் துறைக்கான உதவி, போக்குவரத்து மானியங்கள், உணவு மானியங்கள் மற்றும் அரசுப் பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆதரவு உள்ளிட்டவை அடங்குகின்றன.

ADVERTISEMENT

எனவே தமிழ்நாட்டின் நிதிச்சுமையை மதிப்பிடும்போது, சம்பளச் செலவு என்ற ஒற்றைக் கண்ணோட்டத்தைத் தாண்டி மானியங்கள், பரிமாற்றங்கள், ஓய்வூதியம் மற்றும் வட்டி செலவு ஆகியவற்றின் ஒட்டுமொத்த அமைப்பைப் பார்க்க வேண்டும்.

வருவாய் வளர்ச்சி ஓர் முக்கியமான சாதனை



2021–22-ல் தமிழ்நாட்டின் சொந்த வருவாய் ரூ.1.41 லட்சம் கோடி. 2026–27-ல் அது ரூ.2.55 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 80.83 விழுக்காடு அதிகரிப்பு. இதில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.1.27 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. சொந்த வரியில்லாத வருவாய் ரூ.14,139 கோடியிலிருந்து ரூ.27,835 கோடியாக உயர்ந்துள்ளது.
இதன் பொருள், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தனது சொந்த வளங்களைத் திரட்டும் திறனை கணிசமாக அதிகரித்துள்ளது.

இங்கும் ஒரு முக்கியமான கேள்வி இயல்பாகவே எழலாம்.

வருவாய் அதிகரிப்பது மட்டுமே போதுமா? அந்த வருவாய் எந்த வகையில் திரட்டப்படுகிறது?
என்பதும் முக்கியம்.

மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் வணிக வரிகளே தொடர்ந்து மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் முத்திரை மற்றும் பதிவுக் கட்டணங்களின் பங்கு 2021–22-ல் 10.46 விழுக்காடாக இருந்தது; 2026–27-ல் 15.48 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதாவது, வருவாய் திரட்டும் முறையின் சமூகப் பாதிப்பு குறித்தும் தனியாக விவாதிக்க வேண்டியுள்ளது.

தீராத பற்றாக்குறை பிரச்சினை

ஒரு மாநிலத்தின் வருவாய் வரவுகள் அதன் அன்றாட வருவாய்ச் செலவுகளை முழுமையாகச் சமாளிக்க முடியாத நிலைதான் வருவாய்ப் பற்றாக்குறை. தமிழ்நாட்டில் இந்தப் பற்றாக்குறை தொடர்ந்து இருந்து வருகிறது. 2021–22-ல் ரூ.58,693 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறை, 2023–24-ல் ரூ.37,540 கோடியாகக் குறைந்தது. இது நிதி மேலாண்மையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

ஆனால் அதன் பிறகு மீண்டும் உயர்ந்தது. 2026–27-ல் ரூ.55,775 கோடியாகியுள்ளது. இது 2025–26-ஐ விட 33.96 விழுக்காடு அதிகம். இடைக்கால பட்ஜெட்டில் கணிக்கப்பட்ட ரூ.48,696 கோடியையும் விட அதிகம்.

இது மிகவும் முக்கியமான எச்சரிக்கை. வருவாய்ப் பற்றாக்குறை என்றால், அரசின் வழக்கமான வருவாயே அதன் வழக்கமான செலவுகளைச் சமாளிக்கப் போதவில்லை என்பதே. இந்நிலையில் கடன் வாங்கிய பணத்தின் ஒரு பகுதி உற்பத்தி சொத்துகளை உருவாக்குவதற்குப் பதிலாக அன்றாடச் செலவுகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

வட்டிக்காக செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும்

தமிழ்நாடு நிதிநிலையை மதிப்பிடும்போது இன்னொரு கவலைக்குரிய அம்சம் வட்டி செலவு. 2023–24-ல் ரூ.55,431 கோடியாக இருந்த வட்டி செலவு, 2026–27-ல் ரூ.78,683 கோடியாக உயர்ந்துள்ளது. அதன் வருவாய்ச் செலவில் உள்ள பங்கு 17.99 விழுக்காட்டிலிருந்து 19.39 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

வேறு வார்த்தைகளில் சொன்னால், 2026–27-ல் தமிழ்நாடு அரசு செலவிடும் ஒவ்வொரு ரூ.100 வருவாய்ச் செலவில் சுமார் ரூ.19.40 ஏற்கெனவே வாங்கிய கடன்களுக்கான வட்டியாகச் செல்கிறது. இது எதிர்கால அரசுகளின் நிதிச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக்கூடிய அம்சமாகும்.
ஏனெனில் சம்பளம், ஓய்வூதியம், வட்டி போன்ற கட்டாயச் செலவுகளை உடனடியாகக் குறைக்க முடியாது. இவை அதிகரிக்கும்போது கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, புதிய வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றுக்கான நிதி சுருங்கும் அபாயம் உள்ளது.

மூலதனச் செலவு… இன்னும் வேகம் தேவை…

ஒரு மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு சாலைகள், குடிநீர், பாசனம், பள்ளிகள், மருத்துவமனைகள், நகர்ப்புற உள்கட்டமைப்பு போன்ற உற்பத்தி திறனை உருவாக்கும் முதலீடுகள் அவசியம். தமிழ்நாட்டின் மூலதனச் செலவு 2021–22-ல் ரூ.42,181 கோடியிலிருந்து 2026–27-ல் ரூ.56,985 கோடியாக உயர்ந்துள்ளது. வளர்ச்சி 35.10 விழுக்காடு.‌ ஆனால் வருவாய்ச் செலவு 55.37 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதன் விளைவாக மொத்த வருவாய் + மூலதனச் செலவில் மூலதனச் செலவின் பங்கு 13.90 விழுக்காட்டிலிருந்து 12.31 விழுக்காடாகக் குறைந்துள்ளது. மேலும் 2026–27-ல் மூலதனச் செலவு முந்தைய ஆண்டைவிட 0.43 விழுக்காடு குறைந்துள்ளது. இதனை வெறும் “மூலதனச் செலவு குறைந்துவிட்டது” என்று மட்டும் பார்க்கக் கூடாது. ஆனால் நலத்திட்டச் செலவுகளுக்கும் நீண்டகால உற்பத்தி முதலீட்டிற்கும் இடையிலான சமநிலை எவ்வாறு இருக்க வேண்டும்? என்ற கேள்வியை இது எழுப்புகிறது.

நிதிப் பற்றாக்குறை

தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2021–22-ல் ரூ.92,529 கோடி. 2026–27-ல் ரூ.1.22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 31.65 விழுக்காடு அதிகரிப்பு. ஆனால் இதனை மட்டும் வைத்து மாநிலத்தின் நிதிநிலை மோசமடைந்துவிட்டது என்று கூற முடியாது. ஏனெனில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) நிதிப் பற்றாக்குறையின் பங்கு 4.33 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதாவது தமிழ்நாட்டின் பொருளாதார அளவு, நிதிப் பற்றாக்குறையை விட வேகமாக வளர்ந்திருக்கிறது. எனவே இங்கே ஒரு நுணுக்கமான மதிப்பீடு தேவைப்படுகிறது. நிதிப் பற்றாக்குறையின் தொகை உயர்ந்துள்ளது; ஆனால் பொருளாதாரத்தின் அளவுடன் ஒப்பிடும்போது அதன் சுமை குறைந்துள்ளது.


தமிழ்நாடு பட்ஜெட்டின் உண்மையான சவால்

இந்தப் புள்ளிவிவரங்களை மொத்தமாகப் பார்க்கும்போது தமிழ்நாடு பட்ஜெட்டைப் பற்றிய ஒரே வரி தீர்ப்பை வழங்க முடியாது. இது முழுமையான நிதி நெருக்கடியின் பட்ஜெட்டும் அல்ல. அதே நேரத்தில் கவலைப்பட வேண்டிய பிரச்சினைகள் இல்லாத பட்ஜெட்டும் அல்ல. ஒருபுறம்,
சொந்த வருவாய் 80.83 விழுக்காடு உயர்ந்துள்ளது. சொந்த வரி வருவாய் 79.04 விழுக்காடு உயர்ந்துள்ளது. நிதிப் பற்றாக்குறை–GSDP விகிதம் 4.33 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

சமூக நலத்திட்டங்களுக்கும் பொதுச் சேவைகளுக்கும் அரசு தொடர்ந்து அதிகம் செலவிடுகிறது. மறுபுறம், வருவாய்ப் பற்றாக்குறை மீண்டும் ரூ.55,775 கோடியாக உயர்ந்துள்ளது. வட்டி செலவு ரூ.78,683 கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய்ச் செலவு மூலதனச் செலவை விட வேகமாக வளர்ந்துள்ளது. மூலதனச் செலவின் மொத்தச் செலவில் உள்ள பங்கு குறைந்துள்ளது. கடன் மற்றும் எதிர்கால கடன் சேவைச் சுமை தொடர்ந்து அதிகரிக்கிறது.

செலவின் தரம் எப்படி இருக்க வேண்டும்?

தமிழ்நாட்டின் அடுத்தகட்ட நிதிக் கொள்கைக்கு “செலவைக் குறைக்க வேண்டும்” என்ற எளிய தீர்வு போதாது. நலத்திட்டங்களை வெட்டுவது மட்டுமே நிதி சீர்திருத்தம் அல்ல.மாறாக, எந்தச் செலவு எதிர்கால வருவாயை உருவாக்குகிறது? எந்தச் செலவு மனித மூலதனத்தை உருவாக்குகிறது? எந்தச் செலவு வெறும் தொடர்ச்சியான நிதிச் சுமையாக மாறுகிறது? என்பதை ஆராய வேண்டும். கல்வி மற்றும் பொது சுகாதாரச் செலவுகள் மனித மூலதன முதலீடாகக் கருதப்பட வேண்டும். அதேபோல் பாசனம், குடிநீர், சாலைகள், அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடுகள் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும். அதேசமயம் அரசுப் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன், மின்சாரத் துறையின் இழப்புகள், தேவையற்ற தொடர்ச்சியான நிர்வாகச் செலவுகள் போன்றவற்றை ஆழமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு பட்ஜெட் பயணிக்க வேண்டிய பாதை



தமிழ்நாட்டின் பட்ஜெட்டில் வரவு செலவு வளர்கிறது. வருவாய் திரட்டும் திறனும் வளர்கிறது. சமூகப் பொறுப்புகளும் விரிவடைகின்றன. ஆனால் பட்ஜெட்டின் அளவு வளர்வது மட்டும் போதாது. அதன் தரமும் திறனும் வளர வேண்டும்.

வருவாய்ப் பற்றாக்குறையை நீண்டகாலத்தில் ஒழிப்பது, வட்டி சுமையை கட்டுப்படுத்துவது, அரசுப் பொதுத்துறை நிறுவனங்களின் நிதிநிலையை மேம்படுத்துவது, மின்சாரத் துறையின் இழப்புகளைக் குறைப்பது, அதே நேரத்தில் மூலதன முதலீட்டின் வேகத்தை அதிகரிப்பது ஆகியவை தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு முக்கியமானவை. 2026–27 தமிழ்நாடு பட்ஜெட்டை மதிப்பிடுவதற்கான சரியான பார்வை, அரசு செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் தமிழ்நாட்டின் எதிர்கால வருமானத்தையும், மனித வளத்தையும், சமூக நலனையும் எவ்வளவு கருத்தில் கொண்டு இருக்கிறது என்பதே.

நா.மணி, பேராசிரியர். மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்


வே.சிவசங்கர், பேராசிரியர் பொருளியல் துறை, புதுவை மத்திய பல்கலைக்கழகம்

Photo of author
நா.மணி

நா.மணி, பேராசிரியர், மேனாள் தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share