தமிழக அரசியலில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
முன்னதாக, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று காலை, அதிமுக முன்னாள் அமைச்சரும் கரூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் முறைப்படி வழங்கினார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரும் சென்றுள்ளார். ஆளுநர் உரைக்கு முறைப்படி நன்றி தெரிவிப்பதற்காகவும், தற்போதைய அரசின் மீதான குதிரை பேரம் குறித்த புகார்களுக்கு விளக்கம் அளிப்பதற்காகவும் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமாரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா மற்றும் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் பதவி விலகியிருந்த நிலையில், இன்று ஆறாவது எம்.எல்.ஏ-வாக எம்.ஆர். விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்துப் பதவி விலகி வரும் சூழலில், ஆளுநரை சபாநாயகர் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
