ராமதாஸ் மீது பாமக முன்னாள் எம்.எல்.ஏ அருள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், வேறு கட்சிக்கு செல்கிறீர்களா என்ற கேள்விக்கு, ”இரண்டு நாட்களில் சொல்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே நீடித்து வந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்துள்ளது.
இந்தசூழலில் ராமதாஸ் பக்கம் நின்ற சேலம் அருள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று (ஜூன் 29) சேலத்தில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ அருள் அலுவலகத்தில் பா.ம.க-வைச் சேர்ந்த முக்கிய மாவட்ட நிர்வாகிகள் கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ அருள், ”ராமதாஸ் ஐயாவை நம்பி கோடிகளில் கடன் வாங்கியிருக்கிறோம். ஐயாவுக்காகவும் கட்சிக்காகவும் சொத்துகளை அடமானம் வைத்து கடனில் தவிக்கிறோம். தற்போது நட்டாற்றில் விட்டுவிட்டாரோ என பயமாகவும் வேதனையாகவும் இருக்கிறது” என்று கூறினார்.
அவரிடம் வேற கட்சிக்கு செல்கிறீர்களா? இல்லை பா.ம.க-விலேயே தொடர்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், ”எல்லாம் இரண்டு நாள் கழித்து பாருங்கள்… சொல்கிறோம்” என்று பதிலளித்தார்.
இரண்டு நாள் அவகாசமா? மேலிடத்திலிருந்து சொல்ல வேண்டும் என்பதால் அவகாசமா என்ற கேள்விக்கு, ”அதெல்லாம் இல்லை. அதுபோல கண்டிஷன் போடும் ஆட்களும் நாங்கள் இல்லை” என்று கூறினார்.
