மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு மத்திய கல்வி அமைச்சராக நியமிக்கப்பட இருப்பதாக விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்ததை தொடர்ந்தால் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவது உறுதி என்கின்றனர்.
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா கட்சிகளின் அதிருப்தி எம்.பி.க்கள் ஆதரவு தந்துள்ளனர். இதனால் இந்த எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதேபோல உ.பி. மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெறுவதால் அம்மாநிலங்களைச் சேர்ந்த சில அமைச்சர்கள் கட்சி பணிக்கு அனுப்பப்பட்டு சிலர் அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளனர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி காக்ரோச் ஜனதா பார்ட்டி உள்ளிட்ட கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதனால் தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றப்படுவார் எனவும் நாமும் பதிவு செய்திருந்தோம்.
இந்த நிலையில், விசிக எம்.பி. ரவிக்குமார், “கல்வி அமைச்சர் ஆகிறார் நிர்மலா சீதாராமன்” என குறிப்பிட்டு வாழ்த்துகளையும் தமது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
