கரூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.பி.பிரபாகரிடம் அவர் நேரில் வழங்கியதை அடுத்து, அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரூர் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்தது. கடந்த மே 10ஆம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றுக்கொண்டார். இதனிடையே, சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சனை பூதாகரமானது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் 22 பேர் ஒரு பிரிவாகவும், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 பேர் மற்றொரு பிரிவாகவும் செயல்படத் தொடங்கினர்.
இந்நிலையில், அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக, அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்களித்தனர். இதனால் கடும் அதிருப்தியடைந்த எடப்பாடி பழனிசாமி, அந்த 25 எம்.எல்.ஏக்களின் கட்சிப் பொறுப்புகளைப் பறித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏக்களான மதுராந்தகம் குமாரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யா பாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, அன்றைய தினமே தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இவர்களைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ-வுமான சி.விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த வரிசையில், நேற்று கரூர் தொகுதி எம்.எல்.ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கைப்பட எழுதிய கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தார். எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 41 ஆகக் குறைந்துள்ளது.
மேலும், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி உள்ளிட்ட 7 தொகுதிகள் தற்போது தமிழகத்தில் காலியாக உள்ளன. இதன் காரணமாக, தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 227 ஆகக் குறைந்துள்ளது. காலியாக உள்ள இந்த 7 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
