அடுத்து எஸ்.பி.வேலுமணி? திடீர் பரபரப்பு!

Published On:

| By Minnambalam Desk

Ex AIADMK Minister S.P. Velumani Likely to Resign as MLA?

அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய சென்னை புறப்படுவதாக கோவையில் திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை, சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் அடுத்தடுத்து பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

ADVERTISEMENT

இவர்களைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் விராலிமலை சி.விஜயபாஸ்கர், தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கையோடு அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துவிட்டார்.

மற்றொரு அதிமுக முன்னாள் அமைச்சர் கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேற்று தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

ADVERTISEMENT

இதனிடையே கோவையில் நேற்று முன்தினம் தமது ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று ஜூன் 30-ந் தேதி காலை முதல் கோவையில், எஸ்.பி.வேலுமணி தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போகிறார்; தவெகவில் இணையப் போகிறார் என்கிற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

ADVERTISEMENT

இது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி தரப்பில் நாம் விசாரித்த போது, “இன்று சென்னைக்கு செல்வது உறுதி. எடப்பாடி பழனிசாமியிடம் திரும்ப வந்த போது பறிக்கப்பட்ட மா.செ. பதவியை கொடுக்க வேண்டும் என கேட்டார் எஸ்பி வேலுமணி. அதை தராமல் துணைப் பொதுச்செயலாளர் பதவியை கொடுத்தார் எடப்பாடி. இதை எஸ்பி வேலுமணியால் ஏற்க முடியவில்லை” என்கின்றனர்.

மேலும், ”எஸ்பி வேலுமணி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால் தவெகவில்தான் இணைவார்; விராலிமலை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், சென்னை புறநகர் மா.செ. கேபி கந்தன் ஆகியோருடன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் தவெகவில் இணைய வாய்ப்புகள் அதிகம்” என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அதிமுக தரப்பில் நாம் கேட்ட போது, “எஸ்.பி.வேலுமணி எந்த முடிவையும் அறிவிக்கவும் இல்லை; எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவும் இல்லை.. அதனால் நாங்கள் எந்த கருத்தும் சொல்ல முடியாது” என்கின்றனர்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share