தமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் (Stalin) பேசியதற்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் (Thirumavalavan) பதிலடி தந்துள்ளார்.

மதுரையில் இன்று ஜூன் 30-ந் தேதி செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: எங்களை பொறுத்தவரையில் தவெக ஆட்சிக்கு ஆதரவு வழங்குகிற அத்தனை கட்சிகளும் வாக்கு தவற வாய்ப்பில்லை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், இடதுசாரிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தவெகவுக்கு அளித்த வாக்குறுதிகளைக் கட்டாயம் காப்பாற்றும்.
காங்கிரசை பொறுத்தவரையில், எல்லா கட்சிகளுக்கும் முன்னதாக, அந்த அணிக்கு ஆதரவு மட்டும் நல்காமல், கூட்டணியில் இணைகிறோம். உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வரையில் என்னென்ன தேவைகள் என்பன குறித்து அறிவித்துவிட்டு, அவர்கள் அந்த கூட்டணி உறவை உறுதிப்படுத்தினார்கள்.
அடுத்து இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்குகிறார்கள். 5 ஆண்டுகள் வரையில் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே இடதுசாரிகளின் விருப்பம் என்பதை திரும்பத் திரும்ப அவர்கள் உறுதிப்படுத்தி வருகிறார்கள்.
அதே நிலைப்பாட்டைதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கொண்டிருக்கிறது. எனவே, இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.
விஜய் அழைத்த ஆலோசனை கூட்டம்
தவெக ஆட்சிக்கு ஆதரவு தரும் கட்சிகளுடைய கூட்டம் நாளை ஜூலை 1-ந் தேதி நடைபெறுகிறது. புதிய கூட்டணி அறிவிப்பு வெளியாகுமா? என்பது அங்கே போய் பேசிய பிறகுதான் தெரியும்.
இப்போதைய நிலையில் ஒரு தேநீர் விருந்து என்கிற அடிப்படையில்தான் அழைத்துள்ளனர். தவெக ஆதரவு கட்சி தலைவர்களை மட்டுமன்றி, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். விசிகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள், 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கிறோம். தலைவர் என்கிற முறையிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையிலும் நானும் அதிலே பங்கேற்கிறேன். ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் அவரும் பங்கேற்பார். அதேபோல வன்னியரசு, ஜோதிமணி ஆகிய நால்வரும் பங்கேற்போம். கூடுதலாக, பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் அவர்களும் அதிலே பங்கேற்க உள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது பற்றி ராஜினாமா செய்கிறவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். ”அதிமுகவுல உங்களுக்கு என்ன பிரச்சனை? எதுக்காக நீங்க வந்து பதவி விலகுறீங்க?” என அவர்களிடம் கேட்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அதிமுகவுக்குள் நிகழும் உட்கட்சி முரண்கள் என்ன? என்பதைத்தான் நீங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
அதிமுகவிலிருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் இதுவரை பதவி விலகியிருக்கிறார்கள் இது அதிமுகவுக்குள் எழுகிற மிக முக்கியமான ஒரு பிரச்சனை. ரொம்ப சீரியஸா விவாதிக்க வேண்டிய ஒன்று. எனவே, இந்த கேள்விகளை நீங்கள் அதிமுகவினரிடம் வெளிப்படையாக கேட்க வேண்டும். அவர்கள்தான் நாட்டு மக்களுக்கு இதை தெளிவுபடுத்த வேண்டும்.
தவெக அமைச்சர் (சரத்குமார்) போதைப் பொருளை பயன்படுத்தவில்லை என்பது கட்டாயமாக நிரூபிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் நாம் ஆதாரம் இல்லாமல் ஒரு கருத்தைச் சொல்லிவிட முடியாது. இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
எந்த நேரத்திலும் தேர்தல்…ஸ்டாலின் சொன்னது என்ன?
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், “ தமிழகத்தில் 3 அல்லது 6 மாதங்களுக்குள்.. எந்த நேரத்திலும் தேர்தல் வர வாய்ப்புள்ளதால், திமுகவினர் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்” என பேசியிருந்தார். அதற்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
