10 ஆண்டுகள் பதவியில் இருந்தவர்கள் ஒரு மாதம் பதவி இல்லையென்றதும் ஓடுகிறார்கள்! – செ.ம.வேலுசாமி ஆவேசம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Velusamy

“அதிமுகவில் 10 ஆண்டுகள் பதவியில் இருந்து அனைத்துப் பலன்களையும் அனுபவித்தவர்கள், ஒரு மாதம் பதவி இல்லை என்றவுடன் வேறு கட்சிக்கு ஓடுகிறார்கள்!” என முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி கடுமையாக விமர்சித்துப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலின் தொடர்ச்சியாக, எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள், அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்களித்தனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கட்சி அமைப்பில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வகித்து வந்த கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டு, அந்தப் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி நியமிக்கப்பட்டார். அதேநேரத்தில், எஸ்.பி.வேலுமணிக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த மாற்றம், கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தியைச் சமநிலைப்படுத்தும் எடப்பாடி பழனிசாமியின் முயற்சியாகப் பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராகப் பொறுப்பேற்ற முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய உரை தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் பதவி இழந்தவுடன் மாற்றுக் கட்சிக்குச் செல்ல முயலும் சில நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “கடந்த 14 ஆண்டுகளாக எனக்கு எந்த அங்கீகாரமும், பதவியும் கிடைக்கவில்லை. இருந்தாலும் உண்மையான அதிமுக தொண்டனாக இந்த இயக்கத்திற்காகவே உழைத்தேன். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாகக் கட்சியால் அனைத்துப் பதவிகளையும், சுகங்களையும் அனுபவித்து பலன் பெற்றவர்கள், ஒரு மாதம் பதவி இல்லை என்றவுடன் வேறு கட்சிக்குத் தாவ ஓடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களால் கட்சி வளராது; உண்மையான தொண்டர்கள் மட்டுமே இந்த இயக்கத்தைக் காப்பாற்றுவார்கள்” என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் கடந்த ஞாயிறன்று தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசிய எஸ்பி வேலுமணி மா.செ. பதவி கொடுத்திருந்தால்தான் நல்லபடியாக செயல்பட முடியும் என பேசி இருந்தார். மேலும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், செ.ம.வேலுசாமியின் இந்த வீடியோ பேச்சு அதிமுகவின் தற்போதைய உட்கட்சி அதிருப்தியையும், நிர்வாகிகள் கட்சி மாறுவதையும் நேரடியாகச் சுட்டிக்காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share