எந்த நேரத்திலும் சட்டசபை தேர்தல்.. மு.க.ஸ்டாலின்

Published On:

| By Mathi

DMK MK Stalin Signals Possibility of Early Elections in Tamil Nadu

தமிழக சட்டசபை தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் (MK Stalin) தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் 5,000-க்கும் அதிகமான அதிமுகவினர் திமுகவில் இன்று ஜூன் 28-ந் தேதி இணைந்தனர். இந்த இணைப்பு விழா நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 75 ஆண்டு கால பவள விழா காணும் திராவிட முன்னேற்றக் கழகம், 6 முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு பேரியக்கம். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர் கலைஞர் அவர்கள் அரை நூற்றாண்டு காலம் தாங்கிப் பிடித்த இந்த மாபெரும் இயக்கத்திற்கு நீங்கள் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மக்கள் திலகம் எம். ஜி. ஆர் அவர்கள் இந்த இயக்கத்தின் பொருளாளராக இருந்தவர். அவர் உதயசூரியன் சின்னத்தில்தான் முதன்முதலில் வெற்றி பெற்றார். ஒருமுறை சட்டமன்றத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் பெயரைச் சொல்லி ஒரு உறுப்பினர் பேசியபோது, ‘எனக்குத் தலைவர் கலைஞர் தான்’ என்று கூறி எம். ஜி. ஆர். கண்டித்த நிகழ்வு, அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவுக்குச் சான்று.

ADVERTISEMENT

நான் இளைஞனாக இருந்த போது சைதாப்பேட்டையில் ஒரு நாடகம் நடத்தினேன். அதற்கு எம். ஜி. ஆர். அவர்கள் தலைமை தாங்கினார். அவர் முன்னால் சேர் போட்டிருந்தாலும், பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியாது என்று அந்தச் சேரை அப்புறப்படுத்திவிட்டுத் தரையில் அமர்ந்து நாடகத்தைப் பார்த்தார். அந்த வரலாற்றையெல்லாம் கடந்து, இன்று நான் கட்சியின் தலைமைத் தொண்டனாக உங்கள் அனைவரையும் வரவேற்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.

இன்று ஆளுங்கட்சியில் நடக்கும் முறைகேடுகள், மின்வெட்டு, விவசாயிகளின் போராட்டம் என மக்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள். ஆட்சியைப் பிடிப்பதற்காக மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதிலேயே அரசு குறியாக இருக்கிறது. ஆனால், மக்கள் உண்மையை உணர்ந்துவிட்டார்கள்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டைக் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. தேர்தல்களில் வெற்றியும் தோல்வியும் சகஜம். ஆனால், நம் இயக்கம் இலட்சக்கணக்கான தொண்டர்களின் இதயத்தில் இருக்கிறது. அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டு, கலைஞர் அவர்களால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கத்தை யாரும் வீழ்த்த முடியாது.

தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரும். 3 மாதங்கள் கழித்து, 6 மாதங்கள் கழித்தும் வரலாம். ஏனெனில் இந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை.

ADVERTISEMENT

பெரும்பான்மை என்றால் என்ன? 234-ல பாதி இல்ல.. 118-வது வரணும். இப்ப 108 இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளனர். நம்மோடு இருந்த கூட்டணி கட்சிகள் ஆதரவில்தான் இன்றைக்கு இந்த ஆட்சி இருக்கிறது. இந்த ஆட்சியின் ஓட்டம் எங்கே போய் நிற்கும் என தெரியாது. அதனால் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். எந்தச் சூழலிலும் வரலாம். 100% நாம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share