பச்சை குத்தியவர்கள் நாங்கள்.. நிர்மல் குமார் மதுரைக்கு என்ன செய்வார் – செல்லூர் ராஜு கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

மதுரைக்கு அமைச்சர் நிர்மல் குமார் தனது பதவி காலத்தில் என்ன செய்வார் என்பதை சொல்ல வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

ADVERTISEMENT

“தவெகவின் தாக்கத்தால் அதிமுக பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட பலர் கூறி வருவது குறித்த கேள்விக்கு, “இதுபோல் பேசியவர்கள் எல்லாம் காலப்போக்கில் காணாமல் போய்விட்டனர்; ஆனால், அதிமுக என்றும் நிலைத்து நிற்கிறது என்பதுதான் வரலாறு. 1977-இல் ஆட்சிக்கு வந்த உடனேயே, தற்போதைய அரசியல் சூழலில் எடுக்கப்படும் பல நடவடிக்கைகளை அன்றே செய்து காட்டியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அதன் அடிப்படையில் கலைஞர் கருணாநிதியையே கோட்டைப் பக்கம் வரவிடாமல் செய்தவர். ஐந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சிகிச்சைக்காகப் படுத்துக்கொண்டே தேர்தலில் வென்ற மாபெரும் தலைவர் அவர்.

புரட்சித்தலைவரையும் அவரது இயக்கத்தையும் யாராலும் வெல்ல முடியாது. ‘கடவுளைக் கண்டவனும் இல்லை, புரட்சித்தலைவரை வென்றவனும் இல்லை’ என்பதுதான் அவரது தொண்டர்களின் எண்ணம். இது போன்ற அரசியல் சூழல்களை அதிமுக ஏற்கனவே பலமுறை சந்தித்துள்ளது. கட்சியை விட்டுச் சென்ற நண்பர்கள் நன்றாக உழைத்தார்கள், பாடுபட்டார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர்கள் ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் சென்றுள்ளார்கள், அது வெற்றி பெறட்டும்” என்று கூறினார்.

ADVERTISEMENT

அதிமுகவிலிருந்து விலகப் போவதாக எழும் வதந்திகள் குறித்த கேள்விக்கு, “நான் அதிமுகவிலிருந்து விலகப் போவதாகவும், வேறு கட்சியில் இணையப் போவதாகவும் வதந்திகளைப் பரப்புகிறார்கள். நான் சிறுவயதில் (டிரவுசர் போட்ட காலத்தில்) இருந்தே எம்.ஜி.ஆர் மன்றத்தில் உறுப்பினராக இணைந்து, இந்த இயக்கத்தில் நீண்டநெடிய நாட்களாக அடிமட்டத் தொண்டனாக இருந்து வருகிறேன். புரட்சித்தலைவர் சொன்னவுடனேயே பச்சை குத்திக்கொண்டவர்கள் நாங்கள். அதன் பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காகவும் இங்கு 2,000-க்கும் மேற்பட்டோர் பச்சை குத்திக் கொண்டனர். இந்தக் கட்சியின் கடைசித் தொண்டனாக நானே இருப்பேன்.

பொது வாழ்க்கையில் என்னை கிண்டல், கேலி செய்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. பேரறிஞர் அண்ணா சொன்னது போல, பொது வாழ்க்கையில் கல்லடியும் வரும், சொல்லடியும் வரும்; அதேபோல் பாராட்டு மழையும், மாலையும், மரியாதையும் வரும். அனைத்தையும் நான் சமமாக ஏற்றுக்கொள்வேன்.” என்றார்.

ADVERTISEMENT

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் மதுரை திட்டங்கள் குறித்து:

மேலும் பேசிய அவர் “அமைச்சர் நிர்மல்குமார் புதிதாகப் பதவிக்கு வந்திருக்கிறார். அவர் ஏற்கனவே எங்கள் கட்சியில் இருந்தவர்தான், இங்கிருந்து சென்றுதான் தற்போது அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளார். அவர் மதுரை மாவட்டத்திற்குப் பல நன்மைகளைச் செய்ய வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் இருந்த இரண்டு அமைச்சர்களும் மதுரைக்கு எதையும் செய்யவில்லை. ஆனால், இந்த அமைச்சர் அதிகமாகப் பேசுகிறார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டங்களைக் கொடுத்துள்ளோம். இன்று அவர் சொகுசாகச் செல்லும் பாலங்கள், சாலை விரிவாக்க வசதிகள், மீனாட்சி அம்மன் கோவில் அழகுபடுத்தப்பட்ட திட்டம் எனப் பலவற்றைச் சொல்லலாம். குறிப்பாக, முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்து மதுரை மக்களின் தாகத்தைத் தீர்த்தது அதிமுகதான். இதனைத் தற்போதைய அமைச்சர் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவெக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருக்கும் நிர்மல்குமார் மதுரைக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை விளக்க வேண்டும். ‘சின்னப் பிள்ளைகள் வெள்ளாமை வீடு வந்து சேராது’ என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த ஆட்சி அமைந்துவிடக் கூடாது. சின்னக் குழந்தைகள் வீட்டில் சொன்னார்கள் என்பதற்காக மக்கள் வாக்களித்து விட்டார்கள். ஆனால், அடுத்த தேர்தல் வரும்போது, கடந்த ஆட்சியில் என்ன செய்தார்கள் என்பதை மக்கள் நிச்சயம் சிந்திப்பார்கள். எனவே, அமைச்சர் நிர்மல்குமார் தனது பதவிக் காலத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பட்டியலிட்டால் நன்றாக இருக்கும்.

தவெக அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும். ஆண்டிற்கு ஆறு சிலிண்டர்கள், 2500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, தாய் மாமன் சீர் என மக்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். மதுரைக்காரர்கள் ஏற்கனவே பாசக்காரர்கள்.. போடுகிற ஓட்டை பிள்ளைகள் சொல்லிவிட்டது என்று போட்டு விட்டார்கள். இது நிரந்தரமாக வேண்டுமென்றால் அவர்களது நடவடிக்கையில் தான் உள்ளது என்றார்” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share