மதிமுகவின் 2 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய முதல்வர் விஜய் வலியுறுத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று ஜூன் 28-ந் தேதி தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மதிமுகவின்2 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க சொல்லுங்கள்.. தேர்தலில் அவர்களுக்காக பிரசாரம் செய்கிறேன்” என தம்மிடம் முதல்வர் விஜய் கூறியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று செய்தியாளர்களிடம் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மு.வீரபாண்டியன் அளித்த பதில்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, திமுக கூட்டணியில் இருந்தபோது, திமுக தலைவர் ஸ்டாலின் எங்களை எதன் பொருட்டும் நிர்ப்பந்திக்கவில்லை. எந்த அழுத்தத்தையும் தரவில்லை.
நமக்கான தமிழ் மரபுகளில் அரசியல் நெறிகள் இருக்கிறது. அந்த நெறிகளை மீறுவதை கம்யூனிஸ்டுகள் எப்பொழுதுமே விரும்புவதில்லை. நமது சட்ட முறைமைகளை மீறுவதை எப்பொழுதுமே நாங்கள் விரும்பவில்லை.
எந்த குதிரை பேரத்தையும் கம்யூனிஸ்டுகள் ஏற்பதில்லை, விரும்புவதுமில்லை.
எந்த சோபா அரசியலையும், எந்த ”கல்லா பெட்டி” அரசியலையும் கம்யூனிஸ்டுகள் நிராகரிக்கிறோம்.
ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவுவது எங்களுக்கு உடன்பாடில்லை. யாரையும் விலை பேசுவதும் பொருத்தமில்லை.
அதுபோன்ற அரசியலில் கம்யூனிஸ்டுகள் என்றைக்குமே ஈடுபட்டதில்லை. எங்களுக்கும் இதில் உடன்பாடு இல்லை, நாங்கள் அதை நிராகரிக்கிறோம், எப்பொழுதும் அதை ஏற்பதில்லை. இவ்வாறு மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
