திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க.வைச் (AIADMK) சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட முன்னாள் செயலாளரும் – முன்னாள் அமைச்சருமான பா. பெஞ்சமின் இன்று ஜூன் 10-ந் தேதி திமுகவில் இணைந்தார்.



இது தொடர்பாக திமுக வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் யாமினி இளையராஜா – மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் தினேஷ் – 155வது வட்டக் கழக செயலாளர் ராஜ்குமார் பச்சையப்பன், மத்திய மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார்டு கவுன்சிலர், துணை மேயர், அமைச்சர்.. 2 முறை தோல்வி
அதிமுகவில் 1988-ம் ஆண்டு முதல் பணியாற்றியவர் பெஞ்சமின். வில்லிவாக்கம் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த பெஞ்சமின் சென்னை மாமன்ற 145-வது வார்டு உறுப்பினராக, துணை மேயராக பதவி வகித்தார்.

2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அப்போது முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் பள்ளி கல்வித் துறை அமைச்சராகவும், ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் ஊரக தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் பெஞ்சமின்.

2016-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ராஜேஷை 8,402 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெஞ்சமின், அதே மதுரவாயல் தொகுதியில் 2021-ல் 31,721 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதியிடம் தோல்வி அடைந்தார்.
தற்போதைய சட்டசபை தேர்தலில் 3-வது முறையாக மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பெஞ்சமினுக்கு 3-வது இடம்தான் கிடைத்தது. இத்தொகுதியில் தவெகவின் ரேவந்த் சரண் வெற்றி பெற்றார்.

சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவின் எஸ்பி வேலுமணி தலைமையிலான அணியில் இணைந்தார் பெஞ்சமின். இதனால் அதிமுகவின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட பெஞ்சமின். தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.

திமுகவில் இணைந்தது ஏன்?
திமுகவில் இணைந்த பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பெஞ்சமின் கூறியதாவது: திராவிடர் இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாகத் திகழக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவரும், தமிழகத்தினுடைய முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலினின் அன்பினாலும் பண்பினாலும் அரவணைப்பினாலும், இன்னைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் நான் புதிதாக இன்றைக்கு இணைந்திருக்கின்றேன்.
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லை என்று சொன்னாலும் தொண்டர்களை அரவணைத்துச் செல்லக்கூடிய அவருடைய மாண்பினை போற்றக்கூடிய வகையிலே, அவருடைய அன்பினால் ஈர்க்கப்பட்டு இன்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டிருக்கின்றேன்.
இதுவரையில் நான் சார்ந்திருந்த இயக்கத்திற்கு எப்படி உண்மையாகவும் விசுவாசமாகவும் பணியாற்றினேனோ, அதேபோன்று இன்றைக்கு இணைந்திருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தில் களப்பணியாற்றுவேன்.
இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும், இன்னைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருக்கக்கூடிய தொண்டர்கள் முதற்கொண்டு நிர்வாகிகள் வரைக்கும் இன்னைக்கு தலைமை ஒரு கட்டுப்பாட்டுடன் தலைவர் சொல்லக்கூடிய கருத்துக்களை ஏற்று, தொண்டர்களும் நிர்வாகிகளும் இன்றைக்கு ஒரு சகோதரத்துவத்துடன் இருக்கக்கூடிய ஒரு நல்ல பாங்கினை இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் ஸ்டாலின் வழிநடத்தி வருகின்றார்கள்.
ஸ்டாலினின் அன்பாலும் அரவணைப்பாலும் நான் ஈர்க்கப்பட்டு, இந்த இயக்கத்திலே நான் இன்றைக்கு இணைந்திருக்கின்றேன். நிச்சயமாக இந்த இயக்கத்திற்கு, இயக்கத்தினுடைய தலைமைக்கும் நான் கட்டுப்பட்டு அவர்கள் சொல்லக்கூடிய அந்த கட்டளையை ஏற்று நான் களப்பணி ஆற்றுவேன் என்பதை மீண்டும் ஒருமுறை அன்போடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
தவெகவுக்கு ஏன் போகவில்லை?
செய்தியாளர்கள் கேள்விகளும் பெஞ்சமின் பதில்களும்:
செய்தியாளர்: ஜெயலலிதா மற்றும் எடப்பாடியோட ஆட்சி காலத்துல அமைச்சரவையில நீங்க பணியாற்றி இருக்கீங்க. இந்த திடீர் முடிவுக்கான காரணம்?
பெஞ்சமின்: நான் சார்ந்திருந்த இயக்கத்துல ஜெயலலிதாவுக்குப் பின்னால், அடுத்த தலைமையைக் ஏற்று நான் நல்ல முறையில் தான் பணியாற்றி இருக்கின்றேன். இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழல், அதேபோன்று தொடர்ச்சியாக நாங்கள் மக்கள் பணியாற்ற வேண்டும், மக்களுக்கு நன்மை செய்யப்பட வேண்டும், அந்த நல்ல நோக்கத்திற்காகத்தான் இன்றைக்கு நான் திராவிட முன்னேற்றக் கழகத்திலே இணைந்திருக்கின்றேன்.
செய்தியாளர்: பொதுவாவே ஆளும் கட்சி எதுவோ அந்த கட்சியிலதான் மாற்று கட்சியினர் இணையறது வழக்கமா இருக்கும். ஆனா திமுகவில் கட்சியினர் இணையறது அதிகமா இருக்கு?
பதில்: பொதுவாக நாங்கள் எந்தவொரு வேலையாக இருந்தாலும் சரி, இந்த இயக்கத்தில் களப்பணி ஆற்றித்தான் பழக்கப்பட்டவர்கள். இன்றைக்கு அதிகார மையத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் சென்றிருக்கலாம். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் ஸ்டாலின், அதேபோன்று இளைஞரணியின் தலைவர் உதயநிதி ஆகிய இருவரும் இன்றைக்கு தொண்டர்களை வழிநடத்தக்கூடிய விதம்… எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, இன்றைக்கு அவர்கள் வழிநடத்தக்கூடிய இந்த இயக்கத்தினுடைய மாண்பு… அவற்றை எல்லாம் நாங்கள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறோம்.
அந்த ஒரு நல்ல நோக்கத்திற்காகத்தான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், கடந்த காலங்களிலே மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை எல்லாம் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு செய்திருக்கின்றது. இன்றைக்குக் கூட அந்தத் திட்டங்களை எல்லாம் இன்றைக்கு ஆளுகின்ற அரசு அதைத் தொடரக்கூடிய நிலை இருக்கிறது என்று சொன்னால், அதுதான் மக்கள் நலத்திட்டங்கள்.
அப்படிப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை வகுத்துத் தந்து, எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு இயக்கம், தொண்டர்களை அரவணைத்துச் செல்லக்கூடிய பாங்கு… மாண்பு… அந்தப் பாங்கினை எதிர்த்துத் தான்… பாங்கினை நோக்கித்தான் இன்றைக்கு இந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும் இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்திலே நான் இணைந்திருக்கின்றேன். இவ்வாறு பெஞ்சமின் கூறினார்.
