பாஜகவால் முதல்வரான விஜய்? நயினார் நாகேந்திரன் ‘பகீர்’!

Published On:

| By Mathi

Did Vijay Become CM with BJP's Help? Nainar Nagendran Drops Shocking Claim

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பதற்கு முன்னதாக, பாஜகவின் உதவியை தற்போதைய அமைச்சர் நிர்மல்குமார் கேட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் இன்று ஜூன் 23-ந் தேதி செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அமைச்சர் நிர்மல் குமார் சட்டம் பயின்றவரா என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் சட்டம் படித்திருந்தால், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவுகளை நிறைவேற்ற முடியாது என்று கூறியிருக்க மாட்டார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இத்தகைய கருத்துகளைத் தெரிவிக்கும் அவர், சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் நீடிக்கத் தகுதியற்றவர்

ADVERTISEMENT

தவெக மாதிரி சாதாரண கட்சி அல்ல..

பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ, தங்களது உறவினர்களை ஆளுநர்களாக நியமிக்கலாம் என்றால், அது எங்காவது நடந்துள்ளதா என்று ஆதாரத்துடன் அமைச்சர் நிர்மல்குமார் சொல்ல வேண்டும். இது ஏனோ தானோ என்று செயல்படும் கட்சி அல்ல; தமிழக வெற்றிக்கழகம் போன்ற சாதாரண கட்சியும் அல்ல, இது பாரதிய ஜனதா கட்சி. இன்று மட்டுமல்ல, இனிவரும் காலங்களில் எத்தனை தேர்தல்கள் வந்தாலும், இந்தியாவை ஆளப்போகும் கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டுமே.

அடுத்த தேர்தலில் தவெக இருக்குமா? இல்லையா?

தமிழக வெற்றிக்கழகம் அடுத்த தேர்தலில் இருக்குமா இல்லையா என்பது தெரியவில்லை. சட்டமன்றத்தில் அதிகம் பேசுபவர் முதலமைச்சர் மட்டும்தான்; அவர் தொடர்ந்து பதிலுரை அளித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய எந்த ஒரு கேள்விக்கும் அவர் இதுவரை ஒருமுறை கூட எழுந்து பதில் சொல்லவில்லை. அத்தகைய முதலமைச்சரின் அமைச்சரவையில், நிர்மல் குமார் சட்ட அமைச்சராக இருக்கிறார். அவர் ஒரு காலத்தில் பாரதிய ஜனதா கட்சியிலும், அதன் பிறகு அண்ணா திமுகவிலும் இருந்தார்; தற்போது தமிழக வெற்றிக்கழகத்தில் இருக்கிறார். அடுத்த ஆண்டு அவர் எந்தக் கட்சிக்குச் செல்வார் என்று யாருக்கும் தெரியாது.

ADVERTISEMENT

ஆளுநர் ஏன் அழைக்கவில்லை?

நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு நீங்கள் எத்தனை முறை ஆளுநர் மாளிகைக்குச் சென்றீர்கள்? நீங்கள் சட்டம் படித்தவர் தானே, பின்னால் இருப்பவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். நிர்மல் குமார் சட்டம் படித்தவர் தானே, அவர் ஏன் ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்? ஒரு கட்சி தங்களுக்கு இத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், நாங்கள்தான் பெரும்பான்மையுடன் இருக்கிறோம், எங்களை முதலமைச்சராகப் பதவியேற்க அழைக்க வேண்டும் என்று முறைப்படி எழுதி கொடுக்க வேண்டாமா?

பாஜகவினருக்கு போன் செய்த நிர்மல்குமார்

நான் இதே நிர்மல் குமாரிடம் கேட்கிறேன், முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பு நீங்கள் மூன்று, நான்கு முறை ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்றீர்கள்; ஆனால் அதற்கு முன்னதாக, எங்களை முதலமைச்சராகப் பதவியேற்க அனுமதியுங்கள் என்று யாருக்கெல்லாம் நீங்கள் போன் செய்து பேசினீர்கள்? யாருக்கெல்லாம் போன் செய்தீர்கள் என்று நான் சொல்லட்டுமா? அப்போது மட்டும் பாரதிய ஜனதா கட்சி உங்களுக்கு இனித்தது.

ADVERTISEMENT

ஆளுநர் உங்களை எத்தனை முறை திருப்பி அனுப்பினார்? சட்டம் சரியாகப் படிக்கத் தெரியாததாலும், சரியாக எழுதத் தெரியாததாலும் தான் அவர் உங்களைத் திருப்பி அனுப்பினார்; இதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இனிமேல் இவ்வாறு பேசாமல் சட்டமன்றத்தில் தேவையான விஷயங்களை முதலில் கவனியுங்கள்.

அன்று அணில்.. இன்று குரங்கு

முந்தைய அரசாங்கத்தில் மின்சாரத்துறை அமைச்சர், மின் தட்டுப்பாடு ஏற்பட்டபோது ‘அணில் வந்தது’ என்றார். இப்போது இவர் ‘குரங்கு வந்திருக்கிறது’ என்கிறார்; அணில் போய் இப்போது குரங்கு வந்திருக்கிறது.

இனிவரும் காலங்களில், பாரதிய ஜனதா கட்சியின் மூலம் தமிழகத்தில் நல்லதொரு ஆட்சி மலரும்; அப்போது மின் தட்டுப்பாடு இல்லாத மாநிலமாக இது நிச்சயம் மாற்றப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share