தமிழக சட்டசபையில் திமுகவை கடுமையாக விமர்சித்த முதல்வர் விஜய்க்கு அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா (A Raja) காட்டமாக பதிலளித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் நீட்தேர்வு மற்றும் இந்தி, சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும் அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை சைதாப்பேட்டை “கலைஞர் பொன்விழா வளைவு” அருகில் தி.மு.க. மாணவர் அணி சார்பில் இன்று ஜூன் 23-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியதாவது: ஒன்றியத்தில் இருக்கும் ஆட்சியில் நடைபெறுகின்ற அக்கிரமங்களை, குறிப்பாகத் தமிழ் இனத்திற்கு, தமிழ் மொழிக்கு மற்றும் வருங்காலத் தமிழ் சமுதாயத்திற்குச் செய்து கொண்டிருக்கின்ற தீங்கைக் கண்டிக்கக்கூடத் தகுதியற்ற ஒரு அரசாங்கம் இங்கே இருக்கிறது. இது ஒரு பொம்மை அரசாங்கம்.
கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார், பதவி ஏற்றவுடன், ‘நாங்கள் மேகதாது அணையை கட்டுவோம்… இப்போது தமிழ்நாட்டில் ஸ்டாலின் இல்லை, அதனால் கட்டுவோம்’ என்றார்.
‘நீட்’ (NEET) என்கின்ற தேர்வை இந்த ஆண்டும் ஒன்றிய அரசு ஒத்திவைத்து, மீண்டும் நடத்துகிறது.
மத்திய அரசின் சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் சமஸ்கிருதத்தைச் சேர்க்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதைக் கண்டிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் நண்பர்களே!
ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். ‘எங்களுக்குக் கொள்கை எதிரி திராவிட முன்னேற்றக் கழகம்; எங்களுக்கு அரசியல் எதிரி திராவிட முன்னேற்றக் கழகம்; கொள்கை எதிரி பா.ஜ.க’ என்று சொன்ன முதலமைச்சர் விஜய், ‘பாசிசம் என்றால் இது பாயாசமா?’ என்று கேட்டுவிட்டு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தார்.
நீங்கள் எப்படி முதல்வரானீர்கள்?
நான் கேட்கிறேன், தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆகிவிட்டீர்கள், எப்படி ஆனீர்கள்? இப்போதும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, எங்கள் கூட்டணியிலே தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைத்தோம், நீங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தீர்கள். அதற்கு அவர்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ”நாங்கள் அவர்களை அமைச்சர்களாக்கி இருக்கிறோம்” என்கிறீர்கள்.
வெட்கமே இல்லாதவர்கள் ஆட்சி
அமைச்சர்களாக்குவதற்கு உங்களுக்கும் வெட்கமில்லை; அந்த அமைச்சரவைப் பொறுப்பை ஏற்றிருக்கின்ற கட்சிகளுக்கும் வெட்கமில்லை!
அரசியலில் வெட்கமில்லாத இரண்டு பேர் சேர்ந்து கொண்டு, ‘நாங்கள் ஆட்சியை நடத்துகிறோம்’ என்றால், நாங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்? ஏன் வருத்தப்பட வேண்டும்?
விஜய்யின் சட்டசபை பேச்சு
இதற்கு முதலமைச்சர் அந்த ஸ்கிரிப்ட்டை மட்டும் பார்க்காமல் படிக்கிறார். நேற்று ராத்திரி முழுவதும் ரிகர்சல் பார்த்திருக்கிறார். நம்மைத் திட்டும்போது மட்டும் நிலைக்கண்ணாடிக்கு முன்னால் நின்று, மூன்று முறை, நான்கு முறை மனப்பாடம் செய்து என்னவெல்லாம் சொல்லலாம் என்று யோசித்திருக்கிறார். நான் கேட்கிறேன், ‘நாங்கள்தான் எங்கள் கூட்டணியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தோம், ஒரு தேர்தல் வரக்கூடாது என்பதற்காக உங்களுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், பிறகு அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறேன்’ என்று மார்தட்டிக்கொள்கிறீர்களே, இப்படிச் சொல்வதற்கு ஜனநாயகத்தில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? போனவர்களுக்குத்தான் வெட்கமில்லை என்றால், உங்களுக்குமா வெட்கமில்லை?
முதல்வருக்கு தகுதி இருக்கிறதா?
இப்படிப்பட்ட வெட்கங்கெட்ட ஆட்சி இங்கே நடைபெறுகிற காரணத்தினால் தான் மோடிக்கு இந்தத் தைரியம். ‘பாசிசம்’ என்று சொன்னீர்களே, பாசிசத்தை எதிர்ப்பதற்கு 5,000 மாணவர்கள் திரண்டிருக்கிறார்கள். வெறும் மூன்று மாவட்டத்தில் 5,000 பேர் திரண்டிருக்கிறார்கள். நாங்கள் பாசிசத்தை எதிர்க்கிறோம். சட்டமன்றம் இரண்டு முறை கூடிவிட்டது. ஒரே ஒரு தீர்மானம்.. கவர்னர் உரையிலேயே சொல்லி இருக்கிறீர்களே, ‘நாங்கள் மொழித் திணிப்பை ஒப்புக்கொள்ள மாட்டோம், இந்தித் திணிப்பை ஒப்புக்கொள்ள மாட்டோம், சமஸ்கிருதத்தை ஒப்புக்கொள்ள மாட்டோம்’ என்று சொன்னீர்களே… இந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நாங்கள் தமிழ்நாட்டில் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று சொல்லுகின்ற தகுதி இந்த முதலமைச்சருக்கு உண்டா?
ஸ்டாலின் யார் தெரியுமா?
கேட்டால் ‘ஸ்டாலின் சார்’ என்கிறார். யார் அந்த ‘ஸ்டாலின் சார்’? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நான், முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படுகின்ற கடமைகளை நிறைவேற்றுவேன்’ என்று சத்தியப்பிரமாணம் செய்தவர். அதே அரசியலமைப்புச் சட்டத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை சொல்லுகின்ற எந்தத் திட்டத்தையும் அது மும்மொழிக் கொள்கையாக இருந்தாலும் சரி, நீட்டாக இருந்தாலும் சரி எங்களால் ஏற்க முடியாது என்று சொல்லும் துணிச்சல் அவருக்கு உண்டு.
எங்களுடைய இறையாண்மை வேறு. ஒரே நாட்டில் இருக்கிறோம், ஒரே அரசியல் சட்டம், ஆனால் நாங்கள் ‘டெல்லிக்கு அடிபணிய மாட்டோம்’ என்று சொல்லுகின்ற ஒரு மாமனிதர் தான் ஸ்டாலின்.
திராணி இருக்கிறதா?
இன்றைக்கு ஒரே ஒரு வார்த்தை டெல்லியைப் பற்றிக் கேட்பதற்கு இந்த முதலமைச்சருக்குத் திராணி உண்டா? இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் நம் கொள்கையை விட்டுவிடவில்லை. தந்தை பெரியார் அமைத்த கூட்டணி, 1937-ல் தமிழுக்காக மறைமலை அடிகள், கா.சு. பிள்ளை எனப் பலரை இணைத்துத் தொடங்கிய இயக்கம் இது. நாம் பகுத்தறிவு பேசுகிறோம், ஆனால் இருவருக்கும் தாய்மொழி தமிழ். இந்தப் பாரம்பரியத்தில் வந்த நாங்கள், அண்ணாவால், கலைஞரால், முத்துவேல் கருணாநிதி என்ற மாமனிதருக்குப் பின்னால் நின்று கொண்டு மொழிக்காகப் போராடுகிறோம்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர், பாசிசத்தை எதிர்ப்பது உண்மையாக இருந்தால், நடிக்காமல், கேமராவுக்கு முன் நிற்பதாக எண்ணிக்கொள்ளாமல், தமிழ்நாட்டின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டுமானால், உடனடியாகச் சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றத் தயாரா? தமிழ்நாடு சட்டமன்றம் நீட்டை ஏற்க மாட்டோம் என்று தீர்மானம் போட்டது. 140 கோடி மக்கள் இருக்கிற நாடாளுமன்றத்தில் எதை வேண்டுமானாலும் போடலாம், ஆனால் 8 கோடி மக்கள் வாழ்கின்ற நாங்கள் இதை ஏற்க மாட்டோம் என்று சொல்லுகின்ற ஆற்றல் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் உண்டு. அதற்கு காரணம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இன்றைக்கு அப்படிப்பட்ட நிலையை உங்களால் எடுக்க முடியுமா?
மோடிக்கு முட்டு கொடுப்பதா?
எனவே, இன்றைக்குத் தொடங்கப்பட்டிருக்கிற ஆர்ப்பாட்டம் மோடி அரசாங்கத்திற்கு எதிர்ப்பானது மட்டுமல்ல; அந்த மோடி அரசாங்கத்திற்கு மௌனம் காத்து முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறதே இந்த ‘சோபாசெட்’ அரசாங்கம், இந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் தான்.
செய்யப் போவது என்ன?
முதலமைச்சருக்குத் தைரியம் இருந்தால், மொழியின் மீதும், இனத்தின் மீதும், தமிழ்நாட்டின் மீதும் அக்கறை இருந்தால், பழைய ஆட்சியைத் தொடர்ந்து குறை சொல்லிக்கொண்டிருக்காமல், நீ என்ன செய்யப் போகிறாய் என்று சொல்.
தமிழக சிறைகள் நிரம்பும்- ஆ.ராசா (A Raja)
இந்த மண் திராவிட மண்! பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் பண்படுத்திய இந்த மண்ணில், நம் தலைவர் வழியில் நிற்போம். தலைவர் ஆணைக்குக் கட்டுப்பட்டு, விரைவில் ஒன்றிய அரசாங்கத்தையும், மாநில அரசாங்கத்தையும் எதிர்த்து, தலைவர் அனுமதித்தால் இதைவிடப் பெரிய போராட்டத்தை நடத்துவோம். தமிழ்நாட்டின் சிறைகள் நிரம்பும் அளவில் தலைவரின் அனுமதி பெற்றுப் போராட நாம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு ஆ.ராசா பேசினார்.
