முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி பதிலடி!

Published On:

| By Mathi

Udhayanidhi Unleashes Sharp Criticism Against CM Vijay

சட்டசபையில் முதல்வர் விஜய் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi) கடுமையாக விமர்சித்துள்ளார்.

சட்டசபையில் இன்று ஜூன் 23-ந் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு முதல்வர் விஜய் பதில் உரையாற்றினார். அப்போது திமுகவை மறைமுகமாக விமர்சித்தார்.

ADVERTISEMENT

முதல்வர் விஜய்யின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. இதன் பின்னர் சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் விஜய் பேசும்போது நாங்கள் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தோம். வழக்கம்போல தேர்தல் பிரச்சாரங்களில் பேசுவது போன்ற சினிமா பாணியிலான வசனங்களை அவர் தனது பதிலுரையில் கையாண்டார்.

ADVERTISEMENT

தவறான தகவல் தந்த முதல்வர் விஜய் (CM VIJAY)

அவையில் சில தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பதிவு செய்யத் தொடங்கினர். உடனே நானும், எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்து, ‘பாயிண்ட் ஆப் ஆர்டர்’ (Point of Order) விதியின் கீழ் பேசுவதற்கு அனுமதி கோரினோம். சபை மரபுப்படி ஒரு தவறான கருத்தை மறுப்பதற்குப் பேசுவது எங்கள் உரிமை. ஆனால், சபாநாயகர் எங்களை அனுமதிக்கவில்லை.

சபை நேரம் முடிந்த பின்னும் பேசிய அமைச்சர்கள்

நேற்று நான் எதிர்க்கட்சித் தலைவராகப் பேசியபோது, அமைச்சர்கள் பலமுறை குறுக்கிட்டுப் பேசினார்கள். முதலமைச்சரிடம் கேள்வி கேட்டால், அவர் எதற்கும் பதிலளிக்கவில்லை. ஆனால் அமைச்சர்கள் எழுந்து நின்று அதே விஷயத்தைத் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தனர். அவை நேரம் முடிந்துவிட்டதாகச் சபாநாயகர் அறிவித்த பிறகு நாங்கள் கிளம்பிச் சென்றுவிட்டோம். நாங்கள் சென்ற பிறகு, மற்றொரு அமைச்சர் அவையில் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். நாங்கள் வீட்டுக்குச் சென்று தொலைக்காட்சியில் பார்த்தோம்.

ADVERTISEMENT

ஷூட்டிங் ஸ்பாட் போல சட்டசபை

இன்று முதலமைச்சர் ஒரு ஸ்கிரிப்டை (Script) தயார் செய்து கொண்டு வந்திருந்தார். ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் (Shooting spot) நடிகர் வசனம் பேசுவதைப் போல, தனது முழு உரையையும் நடித்து முடித்துவிட்டு, இடையில் யாரும் குறுக்கிடக் கூது என்ற மனநிலையிலேயே அவர் செயல்பட்டார். நேற்றைய கேள்விக்குப் பதிலளிக்காதவர், இன்று முழுமையாக ஒப்பித்துவிட்டுச் சென்றார். மக்கள் எதிர்பார்க்கும் பொறுப்பான பதில்களை அவர் வழங்கவில்லை.

தமிழ்த் தாய் வாழ்த்து

ஆளுநர் அவைக்கு வரும்போது தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கி, இறுதியில் தேசிய கீதம் பாடுவதுதான் மரபு. ஆனால், இந்த முறை ஏன் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது? இது குறித்துக் கேட்டதற்கு, ‘கலைஞரின் படத்திறப்பு விழாவின்போது நீங்கள் அப்படிச் செய்தீர்கள்’ என்கிறார். ஆனால், குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் உள்ள புரோட்டோகால் (Protocol) வித்தியாசம் முதலமைச்சருக்குத் தெரியவில்லை.

விவசாயிகள் போராட்டம்

41 லட்சம் மாணவர்கள் பயனடைந்த திட்டங்கள் ஏன் முடக்கப்பட்டன? மின்வெட்டு, பயிர் கடன் தள்ளுபடி, மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்துக் கேட்டால், தெளிவான பதிலின்றி விவசாயிகளைத் திமுக தூண்டிவிடுவதாகக் கொச்சைப்படுத்துகிறார். திருவள்ளூரில் விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நியாயமான போராட்டத்தை நடத்துகிறார்கள். இதற்கும் திமுக மீது பழி போடுகிறீர்கள்.

சட்டம் ஒழுங்கு என்னாச்சு?

சட்டம்-ஒழுங்கு: டிஜிபி நியமனம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்துக் கேட்டால், பதில் சொல்வதற்கு அவகாசம் கேட்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே நாளில் மாற்றிவிடுவோம் என்றீர்கள். ஆனால், 40 நாட்களில் 24 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன். நேற்று சபாநாயகர் ஆதாரத்தைக் கேட்டார், நான் இதோ ஆதாரத்தை வைத்திருக்கிறேன்.

    ஷோபா மாடல் அரசியல்

    எங்கள் தயவில் தான் ஆட்சி நடக்கிறது’ என்று மீண்டும் மீண்டும் சொல்லாதீர்கள். நாங்கள் யாருடைய தயவிலும் இல்லை. நீங்கள் அப்படி இல்லை என்றால், ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு கட்சித் தலைவர் வீட்டுக்கும் சென்று ஏன் ஆதரவு கேட்டீர்கள்? அப்போதெல்லாம் அந்தச் சோபாக்களில் அமர்ந்துதானே பேசினீர்கள்? ஒவ்வொரு முறை நீங்கள் கட்சித் தலைவர் வீட்டுக்குச் செல்லும்போதும் புதிய சோபாக்கள் மாறின. அதையெல்லாம் மக்கள் பார்த்தார்கள். இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அமைச்சரின் அறையிலேயே அழைத்துச் சென்று கட்சி சேர்க்கிறீர்கள். இது ‘பீரோ புல்லிங்’ (Bureau bullying) போல உள்ளது.

    சினிமா பாணி சட்டசபை

    சட்டமன்றத்தைச் சினிமா தியேட்டர் போலவும், ஷூட்டிங் ஸ்பாட் போலவும் மாற்றிவிட்டார்கள். சபாநாயகரிடம் அனுமதி கேட்டு ‘ஆக்ஷன்’, ‘கட்’ என்று பேசும் சூழல் நிலவுகிறது. இது அனைத்தும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் (Trend) ஆவதற்கும், ரீல்ஸ் (Reels) போடுவதற்கும் திட்டமிடப்பட்ட நாடகமாகவே தெரிகிறது. முதலமைச்சரின் அரை மணி நேரப் பேச்சில், சமூக வலைதளங்களில் பதிவிடக் குறைந்தது 10 ரீல்கள் தேறும். அமைச்சர்கள் சிலர் டான்ஸ் ஆடும் அளவிற்குச் சென்றுவிடுவார்களோ என்று தோன்றுகிறது. விரைவில் சட்டமன்றத்திற்குள் கேரவான், மேக்கப் கலைஞர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள் என அனைவரும் வந்துவிடுவார்கள் போலிருக்கிறது.

    தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு?

    தேர்தல் வாக்குறுதிகளான மாதம் ₹4500, மகளிருக்கு உரிமைத் தொகை ₹2500, சிலிண்டர் மானியம் போன்றவற்றைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. திமுக ஆட்சியின் பழைய திட்டங்களைத் தொடர்வதைத் தாண்டி, எந்தப் புதிய அறிவிப்பும் இல்லை. இத்தகைய செயல்பாடுகள் இந்த ஆட்சியை ஒரு கேலிக்கூத்தாகவும், சினிமாத்தனமான ஆட்சியாகவும் மாற்றியுள்ளது. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    Photo of author
    Mathi

    30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
    Join Our Channel
    Share