திமுக தயவால் தவெக ஆட்சி நடக்குதா? கொந்தளித்த முதல்வர் விஜய்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஐயூஎம்எல் ஆதரவோடு விஜய் ஆட்சி அமைத்தார். இதைத்தொடர்ந்து எங்கள் ஆதரவோடுதான் விஜய் ஆட்சி நடக்கிறது என திமுக தரப்பில் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் முதல்வர் விஜய் அதற்கு சட்டப்பேரவையில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் 3-வது நாள் அமர்வு இன்று நடைபெற்றது.ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கட்சி நிதி என்ற பெயரில் அடித்த கொள்ளையை தற்போது கஜானாவிற்கு சென்று சேர்த்துக்கொண்டிருக்கிறோம். மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட்டால் விட மாட்டோம். மக்கள் தயவால் தான் த.வெ.க. ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மனசாட்சி உள்ள சக்திகளால் தான் ஆட்சி நடக்கிறது.

ADVERTISEMENT

“இப்போது புதிதாக ஒரு ஆயுதத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? ‘அவர்களுடைய தயவால்தான் நமது ஆட்சி நடக்கிறது’ என்பதுதான் அது. இந்த ஆட்சி மக்கள் தயவாலும், மனசாட்சியுள்ள சக்திகளின் ஆதரவாலும் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. ‘நாங்கள் தான் அனுப்பி வைத்தோம், நாங்கள் தான் அனுப்பி வைத்தோம்’ என்று சிலர் கூறுகிறார்களே, அப்படி அனுப்பி வைத்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தபோது ஏன் கதறுகிறீர்கள்? ஏன் இவ்வளவு கோபம்? ஏன் இவ்வளவு கதறல்ஸ்?

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்தது அவர்கள் சுயேச்சையாக எடுத்த முடிவு என்று கூறுகிறார்கள். அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்ததும் அவர்கள் சுயேச்சையாக எடுத்த முடிவு என்றுதான் சொல்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க, இதில் எங்கிருந்து ‘நாங்கள் தான் அனுப்பி வைத்தோம், நாங்கள் தான் அனுப்பி வைத்தோம்’ என்று சொல்வது.. புரியவில்லையே.. ஆனால், மக்களுக்கு எல்லாமே நன்றாகப் புரியும்; அவர்கள் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share