கரூர் சம்பவத்தில் நம் மீதே பழிபோட்டதெல்லாம் கொடுமை – விஜய் வேதனை

Published On:

| By Pandeeswari Gurusamy

vijay

கரூர் சம்பவத்தில் 41 பேரை இழந்த வேதனையை நம் மனதை விட்டு என்றைக்கும்  நீங்கவே நீங்காது என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று ஜூன் 23-ந் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்வர் ஜோசப் விஜய் பேசினார் அப்போது அவர் பேசுகையில் கரூர் பெருந்துயர சம்பவத்தை சுட்டிக் காட்டினார்.

முதல்வர் விஜய் பேசுகையில், “தமிழக மக்களாலும் நம்முடைய ஆதரவு இயக்கங்களாலும் இதோ இன்று இங்கு நம்முடைய தவெக ஆளும் கட்சியாக அமர்ந்திருக்கிறது. இன்று ஆளும் கட்சியாக ஆனதும் அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. “இரண்டு, இரண்டேகால் ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள்” என்று மிகக் கிண்டலாகச் சிலர் பேசுகிறார்கள். எங்களுடைய இந்த இரண்டு, இரண்டேகால் ஆண்டுப் பயணத்தில் எவ்வளவு வலியும் வேதனையும் இருக்கிறது!

ADVERTISEMENT

நம்முடைய மக்கள் சந்திப்பிற்கு எவ்வளவு இடையூறுகள், எவ்வளவு தடைகள்! ஊர் உலகத்தில் யாருக்கும் இல்லாத ஒன்று நமக்கு மட்டுமே என்று தனியாச் சிறப்பு நிபந்தனைகள், நெருக்கடிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நம்மைக் காண வரும் மக்களுக்குச் சரியான பாதுகாப்பு இல்லாமல், நம்முடைய கூட்ட நிகழ்ச்சிகளுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லாமல் என்று இன்னும் வெளியில் சொல்ல முடியாத பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. அனைத்தையும் தாண்டித்தான் நாம் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். ஆனால், இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது (But still miles to go).

நம்முடைய பயணத்தில் எல்லாவற்றிற்கும் உச்சமாக, நம்முடைய சொந்தங்கள், நம்முடைய உறவுகள் 41 பேரை கரூர் சம்பவத்தில் இழந்த வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. நம் மனதை விட்டு என்றைக்கும் அந்த வலியும் வேதனையும் நீங்கவே நீங்காது. அதிலும் நம் மீதே பழிபோட்ட கொடுமைகள் எல்லாம் நடந்தன; அதுவெல்லாம் வேறு தரம். எதற்காக அப்படியெல்லாம் செய்தார்கள் என்று தெரியவில்லை. அரசியல் இப்படியெல்லாம் கொடூரமாக இருக்க வேண்டுமா என்ன? சரி விடுங்கள், இந்த விஜய் தன் மக்களுக்காக எதையும் தாங்கத் தயாராகிவிட்டான்.” என தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share