தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர், கடந்த 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், இச்சட்டமன்ற கூட்டத்தொடரை மூன்று நாட்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முடிவிற்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, “இந்த விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய், திருத்தங்களுடன் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும், இந்தத் தீர்மானம் குறித்து நேற்று அதிருப்தி வெளியிட்ட அதிமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன.
அமோனியா வாயு கசிவு குறித்து விவாதம்
இதற்கிடையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் அரசு சார்பில் விளக்கம் மட்டுமே அளிக்கப்பட்டது.
சட்டசபையில் காரசார விவாதம்
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தொடர் விவாதத்தின் போது, தேசிய கீதம் இரண்டு முறை ஒழிக்கப்பட்டதாகக் கூறி சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மின்வெட்டுப் பிரச்சனை மற்றும் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை ஒளிபரப்பு செய்வதில் உள்ள குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரசாரமாகப் பேசினார்.
முதல்வர் பதிலுரை
இந்நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று அதற்குத் தமிழக முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்க உள்ளார். இதற்காக இன்றைய சட்டசபை கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியுள்ளது.
மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது
இதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்களின் திருத்தங்களை அவை ஏற்கும் நிகழ்வு நடைற்றது. இதைத்தொடர்ந்து தற்போது முதல்வர் விஜய் உரை நிகழ்த்த தொடங்கி உள்ளார். தவெக அரசை தேர்ந்தெடுத்த தமிக மக்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் விஜய் தனது அரசியல் பயணம் குறித்து விவரித்து வருகிறார்.
