தமிழக சட்டசபையில் யார் மூத்த உறுப்பினர் என்கிற சுவாரசிய விவாதம் நடந்தது.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று ஜூன் 22-ந் தேதி பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் பேசினார்.
அப்போது, “இன்றைய தினம் எல்லோரும் வாழ்த்துக் கூறியபடி, நமது முதல்வர் விஜய் (CM Vijay) பிறந்தநாள். அந்த வாழ்த்திலே நீங்கள் எத்தனை பேர் வாழ்த்துக் கூறினாலும் கூட, என்னுடைய வாழ்த்துக்கு சற்று முக்கியத்துவம் இருக்கின்றது என்பதை உங்களுக்குக் கூறிக்கொள்ள நான் ஆசைப்படுகின்றேன்.
ஏனென்றால் இந்த அவையின் மூத்த உறுப்பினர் நான்தான். ஒரு மூத்த உறுப்பினரின் வாழ்த்துகள் நமது முதல்வர்களுக்கு சேரும்பொழுது மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்” என்றார்.
அப்போது திமுகவின் சிவசங்கர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர், “மூத்த உறுப்பினர் எனில் வயது என்ன” என கேள்வி எழுப்ப சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “உறுப்பினர் பார்த்தால் ரொம்ப யங்கா (Young) இருக்கீங்க. நீங்க மூத்த உறுப்பினர்னு சொல்றீங்க? என்னனு கேக்குறாங்க” என விளக்கம் கேட்டார்.
இதற்கு பதிலளித்த போஜராஜன், “தட் இஸ் (That is), குரோனிக்கல் (Chronological) ஏஜ் மூத்த உறுப்பினர். பயோலாஜிக்கல் (Biological), ஸ்பிரிச்சுவல் (Spiritual), சோசியாலஜிக்கல் (Sociological) எல்லாத்துலயும் நான் யங் (Young) தான். உங்களுடைய பாராட்டுக்கு நன்றி” என சபாநாயகரிடம் கூறினார்.
மேலும், “வயது 79, அவை குறிப்புப்படி என்னுடையது 79 வயது, மூத்த உறுப்பினர் என்று அவை குறிப்பிலே இருந்தது, அதை வைத்துத்தான் சொல்லுகின்றேன். இளையவர் ஏதோ 26 வயது என்று குறிப்பிட்டிருந்தார்கள், அந்த கருத்து சரியாக இருக்கும் என்பதை நம்பி தான் இந்த தகவலை உங்களுக்கு தருகின்றேன். ஆகவே, என்னுடைய வாழ்த்துகளை முதல்வர் விஜய்க்கு சொல்லிக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்” என்றார்.
”அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு வயது 78. முன்னாள் அமைச்சர் திமுகவின் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு வயது 76. பாஜகவின் போஜராஜனுக்கு வயது 79.. அதனால்தான் அவர் மூத்த உறுப்பினர்” என்கிற விவரங்களையும் எம்.எல்.ஏ.க்கள் தங்களிடையே பகிர்ந்து கொண்டனர்.
”முதல் முறை எம்.எல்.ஏ.வானவர் போஜராஜன்; ஆனாலும் சட்டசபையில் மூத்த உறுப்பினராக இருக்கிறார்” என்கிற சுவாராசியம் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகி இருக்கிறது.
