தமிழக முதல்வர் விஜய்யின் (CM Vijay) தனி செயலாளர் என வியூக வகுப்பாளரான ‘The Route’ நிறுவனர் ஜெகதீஷ் பழனிசாமி (Jagadish Palanisamy) பதிவிட்டுள்ளார்.
ஜெகதீஷ் பழனிசாமி தமது சமூக வலைதள பக்கங்களில், “18 ஆண்டுகளுக்கு முன்பு, உங்களுடன் போட்டோ எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்த தீவிர ரசிகனாக நான் இருந்தேன். இன்று, மாநிலத்தின் “மாண்புமிகு முதலமைச்சரின் தனிச் செயலாளராக” உங்கள் அருகில் நிற்கும் இந்த தருணம், வாழ்க்கை முழுமையடைந்ததை உணர்த்துகிறது. இன்று நான் யாராக இருக்கிறேனோ, அதற்கு முழு முதற்காரணம் நீங்கள்தான்.
எவ்வளவு சோகமாக இருந்தாலும், உங்கள் முகத்தில் இருக்கும் ஒரு சிறு புன்னகை போதும், என் மனநிலையை முழுமையாக மாற்றி நேர்மறையான ஆற்றலைத் தந்துவிடும். என் கடினமான காலங்களில் நான் ஓடுவதற்கு நீங்கள் கொடுத்த அந்த உத்வேகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
என் ”கடவுளுக்கு” இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தளபதி விஜய் அண்ணா. நீங்கள் தமிழக மக்களுடன் இணைந்து இன்னும் பல உயரங்களைத் தொடவும், உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்!” என பதிவிட்டுள்ளார்.
யார் இந்த ஜெகதீஷ் பழனிசாமி? (Jagadish Palanisamy)
“The Route” நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், “எங்கள் நிறுவனத்தின் நிறுவனர் ஜெகதீஷ் பழனிசாமி, 2020-ம் ஆண்டு ‘தி ரூட்’ (The Route) நிறுவனத்தைத் தொடங்கினார். இந்தியா முழுவதும் மிகவும் துடிப்பான, புதுமையான, அனுபவம் வாய்ந்த மற்றும் ஊக்கமளிக்கும் திறமை மேலாண்மை (talent management) மற்றும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்வதே இதன் பொதுவான நோக்கமாகும்.
திரைப்படத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட அவர், திரைப்படத் தயாரிப்பில் களமிறங்கி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை இணைத் தயாரிப்பாளர்.. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியா முழுவதும் பெரும்பாலான திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட இந்தத் திரைப்படம் முக்கிய காரணமாக அமைந்தது, இது ஒரு வரலாற்று வெற்றியாகக் கருதப்பட்டது.
2023-ம் ஆண்டு மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. தளபதி விஜய், சஞ்சய் தத் மற்றும் த்ரிஷா நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘லியோ’ (#Thalapathy67) படத்திற்கு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிப்பாளராகப் பணியாற்றினார்.
விடாமுயற்சியுடன் உழைக்கக்கூடிய அவர், உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்குச் சிறந்த திரைப்பட அனுபவத்தை வழங்குவதற்காக, கடின உழைப்பின் மூலம் எப்போதும் கூடுதல் சிறப்பாகச் செயல்படுவதைப் பெருமையாகக் கொள்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவின் வியூக வகுப்பாளர்
தற்போது முடிவடைந்த தமிழக சட்டசபை தேர்தலில் கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் மட்டுமே ஆன தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களைக் கைப்பற்றி அதன் தலைவர் விஜய், தமிழக முதல்வரானார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த வெற்றிக்குப் பின்னால் இருப்பது சோசியல் மீடியாவை அந்த கட்சி கையாண்ட அணுகுமுறைதான்.
விஜய் ரசிகர்கள் குறித்த முழுமையான தரவுகளை வைத்து அவர்கள் மூலம் விஜய் தொடர்பான பிரசாரங்கள், சோசியல் மீடியா ‘அல்காரிதங்கள்’ மூலம் முன்னெடுக்கப்பட்டன. இதற்கு பின்புலமாக இருந்தது ஜெகதீஷ் பழனிசாமியின் “The Route” நிறுவனம்தான்.
டிஜிட்டல் ஊடகங்களில் விஜய் ரசிகர்கள் மூலம் ”செயற்கையான அலை” உருவாக்கப்பட்டு அது வாக்காளர்களிடம் விஜய்யை மிக முக்கியமான அரசியல் தலைவராக கொண்டு சேர்த்து இன்று முதல்வராக்கி இருப்பதன் பின்னணியில் செயல்பட்டது ‘The Route’ நிறுவனம்.
தற்போது ‘The Route’ நிறுவனர் ஜெகதீஷ் பழனிசாமி, முதல்வர் விஜய்யின் தனி செயலாளராக தமது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
