மேகதாது அணை பிரச்சனையில் புதிய காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் விளக்கம் அளித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று ஜூன் 22-ந் தேதி அமைச்சர் ஆனந்த் பேசியதாவது: காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நமது மாநிலத்தின் வரலாற்று சிறப்புமிக்க நதிநீர் உரிமைகளையும் காப்பதில் இந்த அரசு துளியும் சமரசம் செய்து கொள்ளாது என்பதை இப்பேரவையில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடகாவின் தற்போதைய முதலமைச்சர் அவர்கள் மேகதாது பிரச்சனையை சமீபத்தில் எழுப்பிய உடனேயே, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் 25.05.2026 அன்று அரசு தலைமை வழக்கறிஞர், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து இப்பிரச்சனை குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தினார்கள். அத்துடன் நிற்காமல், நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள் அடுத்த நாளே 26.05.2026 தனது கடிதத்தின் வாயிலாகவும், 27.05.2026 அன்று மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களை நேரில் சந்தித்தும், மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என மீண்டும் வலியுறுத்தினார்கள்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 25.05.2026 அன்று உத்தரவிட்டதின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பாக புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் மேகதாது திட்டத்தை எதிர்த்து 27.05.2026 அன்று ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 18.06.2026 அன்று அமைச்சர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவினைத் தலைவர் ஆகியோருடன் ஆலோசித்தார்.
இப்பேரவையில் 19.06.2026 அன்று மேகதாது அணை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் நகலை அன்றே தனது நேர்முகக் கடிதம் வாயிலாக மாண்புமிகு முதல்வர் அவர்கள் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்கள் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
இவ்வாறு தமிழக நலன் கருதி இந்த அரசு, மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆலோசனைப்படியும் மேகதாது திட்டத்தை முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுத்து வருகிறது. ஆனால் சிலர் நடுவர் மன்றம் அமைக்குமாறு கோருவது சரியான அணுகுமுறை அல்ல என கருதுகின்றனர். சில தரப்பினர் பரப்பி வரும் தவறான புரிதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நமது அரசின் நேர்த்தியான அணுகுமுறை பற்றி இம்மாமன்றத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
கடந்த நவம்பர் 13, 2025 அன்று மேகதாதுக்கு எதிராக நாம் தொடர்ந்த வழக்குகளை உச்சநீதிமன்றம், மேகதாது அணைத் திட்டம் ஆரம்ப நிலையில் தான் உள்ளது எனக் கூறி தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்பின் பத்தி 29-ல் மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என நீதிமன்றம் குறிப்பிட்டது. இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, கர்நாடகாவோ அல்லது கேரளாவோ தன்னிச்சையாகப் புதிய அனுமதிக்கப்படாத திட்டங்களைக் கையில் எடுத்துவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருந்தோம்.
டிசம்பர் 2025-ல் ஒன்றிய அரசு தன்னிச்சையாகக் காவிரி நீர் வளத் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. மேலும், கடந்த மே 2026 நாளிட்ட ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் கடிதம் மூலம் மத்திய நீர்வள ஆணையம் (CWC) கர்நாடகாவின் மேகதாது திட்ட அறிக்கை (DPR) மீது தனது தொழில்நுட்பக் கருத்துக்களை வழங்கி அடுத்தகட்ட நகர்வுக்குக் காத்திருப்பது அம்பலமாகியுள்ளது. இருப்பினும், இந்த வழிகாட்டுதல்களைக் கடுமையாக எதிர்த்தும், தமிழ்நாடு அரசு 09.06.2026 அன்று ஒரு கடிதம் எழுதியுள்ளது.
இந்தச் சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே குறிப்பிட்டவாறு நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அண்மையில் 27.05.2026 அன்று மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து மேகதாது அணை விவகாரம் குறித்த தமிழ்நாட்டின் நியாயமான கவலைகளைக் குறிப்பிட்டு கோரிக்கை மனு சமர்ப்பித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமலும், நடுவர் மன்றத் தீர்ப்புக்கு முரணாகவும் மேகதாது பகுதியில் எந்த ஒரு கட்டுமானப் பணிகளும் அனுமதிக்கக் கூடாது என்றே அக்கோரிக்கையில் மிகவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
2018 உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட்ட 50% நம்பகத்தன்மை கொண்ட 177.25 டி.எம்.சி தண்ணீர் பங்கீட்டை எந்த ஒரு புதிய நடுவர் மன்றமும் மாற்ற முடியாது. எனவே கர்நாடகா தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 177.25 டி.எம்.சி-யில் எந்த மாற்றமும் ஏற்படாது.
1956 ஆம் ஆண்டு நதிநீர் தாவா சட்டத்தின் பிரிவு 4(1)-ன் படி ஏற்கனவே தீர்க்கப்பட்ட பிரச்சனையை மீண்டும் திறக்க சட்டத்தில் இடமில்லை.
2018 தீர்ப்பில் உபரி நீர் (Surplus water) குறித்து துல்லியமாக கணக்கிடப்படவில்லை, இதனைப் பயன்படுத்தி கர்நாடகா உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு அசல் வழக்கைத் தொடர்ந்தது. 1956 நதிநீர் தாவா சட்டத்தின்படி இத்தகைய புதிய நதிநீர் பிரச்சனையை ஒரு நடுவர் மன்றத்தால் மட்டுமே தீர்க்க முடியும் என்பது உச்சநீதிமன்றத்தில் நமது வாதமாகும்.
காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) நிராகரித்துவிட்டது என்று கூறுவது முற்றிலும் தவறானது. காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) நிராகரிக்கவில்லை, மாறாக எவ்வித கருத்தும் கூறாமல் மத்திய நீர்வள ஆணையத்திடமே (CWC) திருப்பி அனுப்பியுள்ளது. எனவே ஆபத்து இன்னும் நீங்கவில்லை.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒன்றிய அரசும் கர்நாடகாவும் புதிய வழிகாட்டுதல்களின் கீழ் மேகதாது திட்டத்தை மறைமுகமாக மேற்கொள்ள முற்படும் வேளையில் நாம் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது. அந்த வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களிடம் வழங்கிய கோரிக்கையின் தொடர்ச்சியாகவும், ஒன்றிய அரசின் தன்னிச்சையான நகர்வுகளை முடக்குவதற்கும், உபரி நீர் மீது தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதற்கும் ஒரு மிகச்சிறந்த அணுகுமுறையாகவே புதிய நடுவர் மன்றக் கோரிக்கையை முன்வைத்துள்ளோம். புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை இப்பேரவைக்கு மிக உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் ஆனந்தன் பேசினார்.
பின்னணி என்ன?
தமிழக சட்டசபையில் மேகதாது அணைக்கு எதிராக கடந்த ஜூன் 19-ந் தேதி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முதல்வர் விஜய் கொண்டு வந்த இந்த தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஒரு திருத்தம் கொண்டு வந்தார். அதில், புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இடம் பெற்றிருந்தது. இத்திருத்தத்தை முதல்வர் விஜய் ஏற்றுக் கொள்ள சட்டசபையில் உதயநிதி கொண்டு வந்த திருத்தத்துடன் அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் உதயநிதியின் தீர்மானத்தை முதல்வர் விஜய் ஏற்றுக் கொண்டதற்கு அதிமுக, சிபிஎம், பாமக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து சட்டசபையில் இன்று அமைச்சர் ஆனந்த் இதற்கு விளக்கம் அளித்தார்.
