தமிழக சட்டசபையில் மத்திய அரசு குறித்து சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்த கருத்துகளை ‘வேண்டாம்’ என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தடுத்தது பேசுபொருளாகி இருக்கிறது.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று ஜூன் 22-ந் தேதி விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன், “குறிஞ்சி பூ பூப்பதைப் போல், எப்படி அது மக்களுக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தருகின்றதோ, அதே போன்று 12 ஆண்டுகள் ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக இருந்து சாதனை படைத்த எங்களுடைய தலைவர், நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் 12 ஆண்டுகளை முடித்திருக்கின்றார் என்ற நல்ல செய்தியினை உங்களுக்கெல்லாம் சொல்லிக்கொள்கிறேன். அது உங்களுக்கு எல்லாம் தெரியும். இந்த மாமன்றம் கூட அவருக்கு வாழ்த்து தெரிவித்து நமது மாண்பை உயர்த்தி கொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்” என்றார்.
வன்னி அரசு Vs சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் (Vanni Arasu)
அப்போது எழுந்த அமைச்சர் வன்னி அரசு, “நம்முடைய மரியாதைக்குரிய பா.ஜ.க-வினுடைய உறுப்பினர் அவர்கள் பேசும்பொழுது, 12 ஆண்டுகள் இந்தியாவை ஆளுகின்ற பா.ஜ.க மோடி அவர்கள் குறித்து, மரியாதைக்குரிய இந்தியாவினுடைய தலைமை அமைச்சர் மோடி அவர்கள் குறித்து பேசும்பொழுது பெருமிதம் கொண்டு பேசினார்கள். இந்த அவை அது குறித்து பாராட்டி மாண்பை உயர்த்தி கொள்ள வேண்டும் என்று சொல்வதின் மூலமாக, மாண்பு இந்த அவையில் குறைவாக இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறாரா?” என கேள்வி எழுப்பினார்.
ஆனால், குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “அப்படி நீங்க அப்படி எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் தன்னுடைய விருப்பத்தை சொல்லி இருக்கிறார்” என்றார்.
இருப்பினும் அமைச்சர் வன்னி அரசு, “மன்னிக்கணும். தயவுசெய்து.. ஏனென்றால், தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதி, நான் அதை ஏற்கனவே நம்ம தேசியக் கல்விக் கொள்கை 2020, இந்த அரசு…” என பேசிய போது மீண்டும் குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “உறுப்பினர் பேசிய அந்த அந்த உரையில இருந்து நீங்கள் மறுப்புச் சொல்லுகிற கருத்து எதுவும் இருப்பதாக எனக்கு மனதிற்குப் படவில்லை” என்றார்.
இதை ஏற்காத அமைச்சர் வன்னி அரசு, “மன்னிக்க வேண்டும்.. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் இயக்கத்தின் மூலமாக தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய 3458 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும், அது தர வேண்டும் என்கின்ற கோரிக்கையை தொடர்ந்து வைக்கிறோம். அதை மறுக்கின்ற ஒரு அரசு இந்திய ஒன்றிய அரசு” என்றார்.
சிபிஎம் அதிருப்தி
இது தொடர்பாக சிபிஎம் கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி சமூக வலைதளத்தில், “தமிழ்நாடு சட்டமன்றம் ஜனநாயகத்தோடு நடைபோடுகிறது.அஇஅதிமுக வெளிநடப்பு.திமுக சபையில் முழுமையாக பங்கேற்பு.. அமைச்சரிடமே “ஆதாரம் கொடுங்கள்” என பேரவைத் தலைவர் கேட்டுக் கொண்டார். ரசிக்கமுடிந்தது.
மின்துறை அமைச்சர் பேசிய நீக்கப்பட்ட வார்த்தையை யாரும் கேட்காமலேயே சபைக்குறிப்பிலிருந்து நீக்கியது மிகவும்பாராட்டுக்குறியது.
சில்வர் டம்ளரா? வாட்டர்பாட்டிலா என டைமிங்காக அனைவரையும் சிரிக்க வைத்த மூத்த தலைவர்களின் கலகலப்பு மெல்லிய நீரோடை போல் குளிர்ந்து தென்றலாக பரிணமித்தது . ஆளும்கட்சி எதிர்கட்சியினர் மகிழ்ந்த தருணம் அது.தொடரட்டும்…
ஆனாலும்… அமைச்சர் வன்னியரசு அவர்கள் ஒன்றிய பாஜக அரசு பற்றி குறிப்பிட்ட போது பேரவைத் தலைவர் மிகக் கடுமையாக கடுமை காட்டினார்.
அதேசமயத்தில் அறநிலையத்துறை அமைச்சரோ ஒன்றிய பாஜக அரசு பழனி மலையில் ஒரு திட்டத்திற்காக முன்மொழிந்தும் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் மறுத்துவிட்டதை மிகுந்த அழுத்தத்தோடு பதிவு செய்தார்.இதற்கு பேரவைத் தலைவர் கடுமை காட்டவில்லை.!
சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்கள் கோரிக்கைகளை அந்தந்த கட்சி அமைப்புகளின் பாணியில் சிறப்பாகவே உரையாற்றினார்கள். தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாள் இன்று. வாழ்த்துவோம்..! உரை நிகழ்த்திய எதிர்க்கட்சியின் தலைவருக்கும் வாழ்த்துகளை கூறுவோம்” என தெரிவித்துள்ளார்.
