சட்டசபையில் தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா (Aadhav Arjuna) தவறான தகவலை தெரிவித்த போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் குறுக்கிட்டு திருத்தினார். அதேபோல திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது, “ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது” எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் எச்சரித்தார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது தமிழ்த் தாய் வாழ்த்து ஏன் 1 முறையும் தேசிய கீதம் மட்டும் 2 முறையும் பாடப்பட்டது? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முதலில் விளக்கம் தந்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “தமிழ்த் தாய் வாழ்த்து எங்களுடைய முதல்வருக்கு உயிர். அந்த அளவுக்கு நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம். இந்த அவையின் மாண்பை நாங்களும் பாதுகாக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் சொல்லக்கூடிய கருத்தும் நோக்கமும் தமிழக மக்களுக்கு தவறாக செல்லக் கூடாது என்பதற்கான பதிவை நாங்கள் செய்கிறோம். கடந்த 3, 4 ஆண்டுகளாக தமிழ்த் தாய் வாழ்த்து இங்கே பாடப்படவில்லை” என்றார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருத்திய சபாநாயகர்
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “கடந்த காலங்களில் இங்கே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது” என அமைச்சர் ஆதவ் அர்ஜூனவின் பேச்சை திருத்தினார்.
ஆனாலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “ஆளுநர் முன்பு தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படவில்லை” என்றுதான் சொல்கிறேன் என்றார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன “காம்ப்ரமைஸ்” அப்படிங்கிற வார்த்தை எங்களுக்கு கடினமாக இருந்தது. நாங்கள் எந்த விதமான காம்ப்ரமைசும் செய்யவில்லை. தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது எங்களுடைய முதலமைச்சருடைய வெற்றி, தமிழக மக்களுடைய வெற்றி. எந்த காம்ப்ரமைசும் இங்கே நடைபெறவில்லை” என்றார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
ஆதாரம் இல்லாமல் பேசாதீங்க..
இன்றைய விவாதத்தின் போது பாலியல் வன்முறை தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா திமுக மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். உடனடியாக குறுகிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “ஆதாரம் இல்லாமல்.. நீங்களும் ஆதாரம் இல்லாமல் சொல்லக் கூடாது.. ஆதாரம் இருக்கிறது எனில் எந்த ஊர்? எந்த வழக்கு? எந்த போலீஸ் ஸ்டேஷன்? என சொல்லுங்க.. ஆதாரம் இல்லாமல் சொல்லக் கூடாது?” என்றார். அதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜூனா, “நாளைக்கே நான் ஆதாரத்தை கொடுக்கிறேன்” என்றார். ஆனால் இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
