”சட்டசபை மாண்பை குலைக்கும் வகையில் பேச கூடாது” என்று சபை முன்னவரான அமைச்சர் செங்கோட்டையனுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு முதல்வர் விஜய் இன்று ஜூன் 23-ந் தேதி பதிலளித்தார். முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தவெக எம்.எல்.ஏ.க்களும் குரல் கொடுத்ததால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.
இதனால் சபை முன்னவரான அமைச்சர் செங்கோட்டையன் குறுக்கிட்டு பேசினார். அப்போது, “உங்க ஆட்சியில மரபை நீங்க கடைபிடிச்சீங்களா?” என செங்கோட்டையன் திமுகவினரை நோக்கி கேட்டார்.
இந்த பேச்சின் போது குறுக்கிட்ட சபாநாயகர், “சபையில் முன்பு எப்படி நடந்தது என்பதைப் பற்றியோ, முன்பு நடந்த நிகழ்வுகள் பற்றியோ நீங்கள் சொல்லி மீண்டும் மீண்டும் இந்த அவையினுடைய மாண்பைக் குலைக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், வேண்டாம்” என்றார்.
