தவெக ஆட்சியில் செய்தது என்ன? – முதல்வர் விஜய் விளக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழக வெற்றிக் கழக அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

சட்டமன்றத்தில் இன்று ஜூன் 23-ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில்: “பெண்கள் பாதுகாப்புக்காக ‘சிங்கப் பெண்’ சிறப்புப்படை, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம், போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனிப்படை, குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ரூ. 134.83 கோடி சிறப்புத் தொகுப்புத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன. வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த 717 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு பணியில் இருந்தவர்களுக்கு வேறு கடைகளில் வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் கவனிக்கப்படாமல் கைவிடப்பட்ட அம்மா உணவகங்கள் அனைத்தும் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பத்திரப்பதிவுத் துறையில் நடக்கும் பகல் கொள்ளைக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அலுவலகம் வராமலேயே பதிவு செய்யும் ‘வருகையில்லா ஆவணப் பதிவு முறை’ கொண்டுவர உத்தேசிக்கப்பட்டு, அதற்கான பணிகள் செயல்பாட்டில் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஸ்கேன் மையங்களில் கரு உருவாவதற்கு முன்னும் பின்னும் ஏற்படும் தவறுகளைக் கண்காணிக்கவும், மருத்துவ நிறுவன முறைப்படுத்தும் சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் மருத்துவ மற்றும் ஊரகப் பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு வங்கிகளில் ஏழை எளிய மக்கள் வாங்கிய கடன்களுக்கு முதற்கட்டமாக ரூ. 2,045 கோடி தள்ளுபடி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கடந்த இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜல் ஜீவன் மிஷன் திட்டம் புதுப்பிக்கப்பட்டு, ‘ஜல் ஜீவன் மிஷன் 2.0’ நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரூ. 18,500 கோடி அளவில் உறுதியளிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் மைய விரிவாக்கத் திட்டம், கோயம்புத்தூரில் மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் காட்டுப்பள்ளி எல்.என்.டி (L&T) கப்பல் கட்டும் தளம் விரிவாக்கத் திட்டத்திற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அனைத்து நிர்வாக நடவடிக்கைகளையும் மின்னணு முறையில் (Digitalization) மாற்றம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சட்டவிரோதக் கல்குவாரிகள் மற்றும் அனுமதியின்றி கனிமங்களை எடுத்துச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது; பல்வேறு குவாரிகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளன. கனிமங்களைக் கண்காணிப்பது, எல்லைகளை நிர்ணயிப்பது மற்றும் ஆளில்லா விமானம் (Drone) மூலம் அளவீடு செய்வது போன்றவற்றைச் செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் அலுவலர் தலையீடு இல்லாமல், லஞ்ச லாவண்யமற்ற தமிழகத்தை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இது எல்லாம் சாம்பிள்தான்.. இன்னும் இருக்கிறது. வெறும் 40 நாட்களில் இவ்வளவு செய்துள்ளோம்.. இனிவரும் நாட்களில் லஞ்ச லாவண்யம் இல்லாத பெண்களுக்கு பாதுகாப்பான தமிழ்நாட்டை மக்களுக்க தருவதுதான் நமது டார்கெட்கண்டிப்பா நிறைவேற்றி காட்டுவோம்.

ADVERTISEMENT

மின்கட்டணத்தைக் குறைக்கவும், விவசாயிகளின் நலனுக்காகவும் பல்வேறு மின்தடைகளை நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:

125 சிறப்பு மின் தடை நீக்க வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

77 புதிய மின் தடை நீக்க மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கான உதவி மற்றும் கடன்கள்:

சுமார் 14,43,504 விவசாயிகளுக்கு ரூ. 5,932.23 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாத சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்குக் குறைந்தபட்சமாக ரூ. 35,000 நிதிப் பயன் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை சார்ந்த நடவடிக்கைகள்:

மின்சாரச் சாதனங்கள் மற்றும் மின்மாற்றிகளில் (Transformers) ஏற்படும் பழுதுகளைச் சரிசெய்ய, 10 உயர்மட்டக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மின் விநியோக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இரவு நேரங்களிலும் மின் தடைகளை உடனுக்குடன் சரிசெய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share