ஊழல் குறித்து சட்டமன்றத்தில் வெடித்த முதல்வர் விஜய்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தவெக ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் எல்லாருக்கும் எதுவும் தெரியவில்லை என்று விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் எங்கள் உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் மக்கள் சேவை செய்யத் தெரிந்த அளவிற்கு, சுயநலத் தேவையை செய்து கொள்ள தெரியாது என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 23) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் ஜோசப் விஜய் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டின் கருவூலம் திசைமாறி, உருமாறி, தேய்ந்து, ஓய்ந்து கிடக்கிறது” என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டுப் பேசினார்கள். அவ்வாறு அடுக்கு மொழியில் வசனம் பேசுவதை விடுத்து, வளமான இலக்கியமாக இதே சட்டமன்றத்தில் பேசியவர்களின் திறமையான ஆட்சியில் நடந்த நிதி மேலாண்மை குறித்து, நாம் வெள்ளை அறிக்கை வெளியிட்டோம். அந்த வெள்ளை அறிக்கை வெளியானதில் இருந்தே அவர்களுக்கு கண்ணை கட்டுதுங்க.

ADVERTISEMENT

அந்த காலத்தில்தான் “பிள்ளையோ பிள்ளை, தொல்லையோ தொல்லை” என்று ஒரு பழமொழி கூறுவார்கள். அதைப் போல, கடந்த ஆட்சியாலும் அவர்களாலும் இன்று தமிழ்நாட்டிற்கு தொல்லையோ தொல்லை. இத்தகையதொரு இக்கட்டான நிலையை உருவாக்கி வைத்து விட்டு, தற்போது நமக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை என்றும், நம்முடைய அமைச்சர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எதுவும் தெரியாது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆமாங்க எங்களுக்கு சில விஷயங்கள் தெரியாதுதான்!

  • எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் மக்கள் பணி செய்யத் தெரிந்த அளவிற்கு, மக்கள் பணத்தைச் சுருட்டத் தெரியாது.
  • டெண்டர்களை முறைப்படுத்தத் தெரிந்த அளவிற்கு, அதன் மதிப்பீட்டை உயர்த்தி ஊழல் செய்யத் தெரியாது.
  • தகுதியானவர்களுக்குப் பதவி உயர்வும், வெளிப்படையான முறையில் பணியிட மாறுதல் கலந்தாய்வும் நடத்தத் தெரியுமே தவிர, பதவி உயர்வுக்கும் பணியிட மாற்றத்திற்கும் பணம் பறிக்கத் தெரியாது.
  • புதிய பணியிடங்களை உருவாக்கத் தெரியுமே தவிர, அந்தப் பணியிடங்களைப் பணத்திற்காக விற்கத் தெரியாது.
  • கோயில்களில் நடக்கும் நிர்வாகச் சீர்கேடுகளைத் தடுக்கத் தெரியுமே தவிர, கோயில் பணத்தைக் கொள்ளையடிக்கத் தெரியாது; தங்கத்தை உருக்கித் தாரை வார்க்கத் தெரியாது.
  • கனிம வளங்களைப் பாதுகாக்கத் தெரிந்த அளவிற்கு, அவற்றைக் கடத்தி விற்றுக் கொள்ளையடிக்கத் தெரியாது.
  • அரசு வருவாயை அரசு கஜானாவிற்குச் செலுத்தத் தெரியுமே தவிர, அந்தப் பணத்தைத் தனிநபர் கஜானாவிற்கு மடைமாற்றத் தெரியாது.
  • போதை கலாச்சாரத்தைத் தடுக்கத் தெரியுமே தவிர, அதை வளர்க்கத் தெரியாது.
  • நம் குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கை, குழந்தைகள் என அனைத்துப் பெண்களையும் மதிக்கத் தெரியுமே தவிர, ‘ஓசி பஸ்’, ‘ஆயிரம் ரூபாய் கேசு’ என அவர்களை இழிவாகப் பேசத் தெரியாது.

எங்கள் உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் மக்கள் சேவை செய்யத் தெரிந்த அளவிற்கு, சுயநலத் தேவையை செய்து கொள்ள தெரியாது. எனவே, எங்களைப் பார்த்து “எதுவும் தெரியாது” என்று விமர்சிப்பவர்களுக்கு நாங்கள் கூறிக் கொள்வது இதுதான்: “இத்தகைய முறைகேடுகளைச் செய்ய எங்களுக்குத் தெரியாதுதான். உங்களைப் போன்ற முறைகேடுகளை நாங்கள் தெரிந்து கொள்ள போவதும் இல்லை; தெரிந்து கொள்ள ஆசைப்படவும் இல்லை. அது கடைசி வரை எங்களுக்குத் தெரியாமலேயே இருந்துவிட்டுப் போகட்டும்” என்று பேசினார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share