கத்தார் நாட்டில் எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 66 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு, கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ” கத்தார் நாட்டில் ராஸ் கஃபான் தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கடந்த 21.06.2026 அன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம். ராதபுரம் வட்டம். சிதம்பராபுரம் யாக்கோபுரத்தைச் சேர்ந்த மரித் (வயது 26), பணகுடி பகுதி சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சஜித்குமார் (வயது 25) மற்றும் அழகியநம்பியாபுரத்தைச் சேர்ந்த சுவின் (வயது 24), ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும். வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடனும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு அவர்களை இப்பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
தமிழ்நாடு அரசின் உதவி எண்கள்
இந்தியாவிற்குள் +91 1800 309 3793
வெளிநாட்டு தொடர்புக்கு 191 80 6900 9900, +91 80 6900 9901.
