தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 23) ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் பதில் அளித்தார்.
அப்போது கடந்த கால ஆட்சிகளை கடுமையாக விமர்சித்தார். இறுதியாக அன்று அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் செய்த செய்கையை இன்று சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் செய்து காட்டினார்.
இந்தசூழலில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இன்றைய சட்டப்பேரவை நிகழ்வு குறித்து முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளார்களைச் சந்தித்து பேசினார்.
சிஎம் மோடுக்கு வாங்க…
அவர், “தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த முதலமைச்சர் விஜய், ஒரு முதலமைச்சர் பொறுப்பிற்கான தகுதியோடு நடந்து கொள்ளவில்லை. நேற்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ‘இந்த அரசின் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் முதலமைச்சர்’ என்று தெளிவாகச் சொன்னார். ஆனால் அவர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குற்றம் சுமத்துவதை மாத்திரமே தன்னுடைய பணியாகக் கொண்டு அவர் செயல்பட்டார்.
இன்னும் அவர் எலக்ஷன் மோடிலிருந்து (Election mode) சிஎம் மோடுக்கு (CM mode) மாறாமலே இருக்கிறார். எலக்ஷன் மோடுல போய் எப்படி பேசுவாரோ, அதேபோல ஏற்றி இறக்கிப் பேசுவது, திரைப்படத்தில் நடிப்பது போலப் பேசுகின்ற பணியை மாத்திரமே இன்றைக்கும் செய்தார். சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாகவே அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்; ஸ்டுடியோவாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். எதிரில் இருப்பவர்களுக்கு கேமரா முன்னாடி எப்படிப் பேசுவது அவருக்குப் பழக்கமோ, அதே பழக்கத்தில்தான் இன்றைக்கும் பேசினார்.
வாய திறங்க
தமிழ்நாட்டுடைய தலையாய பிரச்சனையாக இன்றைக்குப் பொதுமக்கள் கருதுவதும், அவர்கள் போராட்டம் நடத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிற வன்முறைகள்—மிகக் குறிப்பாகப் பெண்கள் மீதான வன்முறைகள், சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள். இது குறித்து இன்னும் எதிர்க்கட்சி என்ற முறையில் திராவிட முன்னேற்றக் கழகம் எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. ஆனால் பொதுமக்கள் மிகக் கடுமையாக இதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது கோயம்புத்தூர் சம்பவத்தை ஒட்டி நடந்ததாக இருந்தாலும், கும்மிடிப்பூண்டியிலே அந்தச் சிறுகுழந்தை பாதிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த சம்பவமாக இருந்தாலும், இது எதற்கும் அவர் பதிலளிக்கத் தயாராக இல்லை. அதேபோல தவெக-வைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தி, அதன் மீது வழக்கும் தொடுக்கப்பட்டிருக்கிறது. அது குறித்தும் அவர் வாய் திறப்பதற்குத் தயாராக இல்லை.
நடிகராகவே செயல்படுகிறார்
ஆனால் இவற்றையெல்லாம் திசை திருப்புவதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தாக்குதல் நடத்துவதும், குட்டிக்கதை சொல்வதும்… ஒரு முதலமைச்சராக அவர் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகளை விட்டுவிட்டு, இன்னும் நடிகராகவே தன்னை நினைத்துக் கொண்டு செயல்படுகிறார் என்பதுதான் வருத்தத்திற்குரிய செய்தி. அதிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் நேற்றைக்கு விவசாயிகள் போராட்டத்தைப் பற்றிச் சொல்லியிருந்தார். அது திராவிட முன்னேற்றக் கழகம் தூண்டிவிடுகிறது என்று சொல்கிறார். இன்னும் திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டக் களத்திற்கு வரவில்லை. ஆட்சி அமைந்து 40 நாட்கள் ஆகிறது, சட்டமன்றம் கூடி இன்னும் ஆளுநர் உரை மீதான விவாதம் முடியவில்லை என்று நாங்கள் காத்திருக்கிறோம். பொதுமக்களோ, விவசாயிகளோ காத்திருக்கத் தயாராகவில்லை. ஆனால் அந்த விவசாயிகளை திராவிட முன்னேற்றக் கழகம்தான் தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்துகிறது என்று அவர் சொல்கிறார்.
எழுதி கொடுத்த ஸ்கிரிப்ட்டை பேசுகிறார்…
இன்றைக்கு அவருடைய ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருகின்ற—அதையும் அவர் சொன்னார், எந்த நெருக்கடியும் இல்லாமல் அவர்களே சுதந்திரமாக எனக்கு ஆதரவு தந்திருக்கிறார்கள் என்று—அந்த கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) விவசாயிகள் பிரச்சனைக்காகப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அது திராவிட முன்னேற்றக் கழகம் தூண்டிவிட்டதா? தங்களுடைய கூட்டணியில் இருக்கிறவர்கள், தங்கள் ஆட்சி நடத்துவதற்கு ஆதரவு தருபவர்களே போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இது எதுவும் களயதார்த்தம் புரியாமல், தனக்கு எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டை மட்டும் பேசுகின்றவர் என்கின்ற காரணத்தினால் சட்டமன்றத்தில் இதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.
சிறந்த மகன் யார் தெரியுமா?
’அப்பா’ குறித்துக் குட்டிக்கதை சொல்றார். வழக்கமா தேர்தல் போது குட்டிக்கதை சொல்லுவார்; அவருடைய திரைப்படப் பாடல் ரிலீஸ், பட ரிலீஸ்கெல்லாம் குட்டிக்கதை சொல்லுவார். இன்றைக்கும் குட்டிக்கதை சொல்கிறார். அப்பா கதை… உங்கள் அப்பாவுக்கு நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பதையே உங்க அப்பா பேட்டி கொடுத்திருக்கிறார். மரியாதைக்குரிய எஸ்.ஏ. சந்திரசேகர், ‘என்னுடைய மகன் என் கட்டுப்பாட்டில் இல்லை, புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில் இருக்கிறார்’ என்று வெளிப்படையாகப் பேட்டி கொடுத்திருக்கிறார். அது குறித்து இன்னும் நீங்க எந்தத் தெளிவும் சொல்லல.
எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர்கள் சொன்னது போல, கணவனைக் காணவில்லை என்று மனைவி செங்கல்பட்டு கோர்ட்டிலே வழக்கு தொடுத்திருக்கிறார். அப்பாவைக் காணாமல் மகனும் மகளும் தவித்துப்போயிருக்கிறார்கள். நீங்கள் அதெல்லாம் விட்டுட்டு அடுத்தவங்க அப்பா கதை சொல்றீங்க. ஆனால் எங்கள் தலைவர் எப்படி ஒரு சிறந்த மகன் என்பதற்கு எங்களுக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மரியாதைக்குரிய டாக்டர் ராமதாஸ் சொன்னார்—’மகன் என்றால் மு.க. ஸ்டாலினைப் போல் இருக்க வேண்டும்’ என்று தமிழ்நாட்டில் இருக்கின்ற படிக்கின்ற பிள்ளைகள் அவரை எப்படி அழைத்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் . எனவே எங்களுக்கு அறிவுரை கூறுகிற வேலையை முதலமைச்சர் விஜய் நிறுத்திக் கொள்ள வேண்டும். முதலில் உங்கள் குடும்பத்தை நீங்கள் பாருங்கள், அடுத்தவர்கள் குறை சொல்வதை அப்புறம் வைத்துக் கொள்ளலாம்.
இப்படி ஒரு டைவர்ஷன் பாலிடிக்ஸ் மூலமாகவே ஆட்சியை நடத்திவிடலாம் என்று நினைத்தால், பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுக்கு வாக்களித்தவர்கள் 35%; உங்களுக்கு வாக்களிக்காமல் மற்ற கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் 65%.
ஏமாந்து போவீர்கள்
இந்த 65% பேரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், உங்களுக்கு வாக்களித்த 35% பேரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் . உங்களை நம்பி வாக்களித்தவர்களுக்கான பணியைச் செய்யாமல், எதிர்க்கட்சி என்ற முறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது என்ன குற்றச்சாட்டு சொல்லலாம், அதன் மூலம் எப்படிப் பிரச்சனைகளைத் திசை திருப்பலாம் என்று நினைத்தீர்கள் என்றால் ஏமாந்து போவீர்கள்.
இந்த திசை திருப்புற வேலைலாம் வேண்டாம்
இந்த ஆட்சியுடைய தலையாய பிரச்சனையாக இருக்கின்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை, ஆறு மாத கால அவகாசம் கொடுக்கின்ற பிரச்சனை அல்ல. ஒரு புதிய திட்டத்தைத் தீட்டுவதற்கோ, துவங்குவதற்கோ, அறிவிப்பதற்கோதான் இந்த ஆறு மாத கால அவகாசம் என்பதெல்லாம். ஆனால் அன்றாட மக்களைப் பாதிக்கின்ற பிரச்சனைக்கு அன்றேதான் தீர்வு காண வேண்டும். இன்னைக்கு உடம்பு சரியில்லைன்னா இன்னைக்குத்தான் மருத்துவர்ட்ட போய் வைத்தியம் பார்க்க முடியும் . சட்ட ஒழுங்கு பிரச்சனையில பெண் குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கிறது என்றால் அதை இன்றைக்குத்தான் கேட்க முடியும். அதைத்தான் பொதுமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள், அதைத் திசைதிருப்புகின்ற வேலையைத் தயவு செய்து நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
உங்கள் போக்கை திருத்துங்க
அடுத்தது ஒரு நரேட்டிவ் செட் பண்ண (Narrative set) விரும்புறீங்க—ஊழலற்ற ஆட்சிதான் தருவதாகவும், மீதி இதுவரைக்கும் இருந்த ஆட்சி எல்லாரும் ஊழல் ஆட்சி என்பது போலவும் ஒரு நரேட்டிவ் செட் பண்ண முயற்சிக்கிறீங்க.. உங்கள் மீது ஒன்றிய அரசு தொடுத்திருக்கின்ற வழக்குகள் என்ன? கார் வாங்கியதில் தவறு நடந்திருக்கிறது, வரி கட்டவில்லை என்று வழக்கு இருக்கிறது.
நீங்கள் திரைப்படத்தில் நடிப்பதற்கு பிளாக்கில் (Black) சம்பளம் வாங்கின பிரச்சனை இருக்குது. உங்கள் படங்கள் பிளாக்கில் டிக்கெட் விற்று ஓடிய பிரச்சனை இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் செய்துவிட்டு ஏதோ உத்தமர்போல், நீங்கதான் இந்த நாட்டைக்காக்க வந்த காந்திபோல் சட்டமன்றத்திலே நின்று வசனம் பேசுவது கதைக்கு உதவாது, உங்களுடைய போக்கை நீங்கள் திருத்திக்கொள்ள வேண்டும்.
‘வாய் திறக்கவில்லை என்று வாய் திறங்க சிஎம் சார்; என்று சொன்னதுக்குக் காரணம், பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு என்ன நீதி கிடைக்கும், அந்தப் பாதிப்புக்கு உட்படுத்திய உங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு என்ன தண்டனை—இப்படிக் கேட்கத்தான். உங்களுடைய உயர்கல்வித்துறை அமைச்சர் போய் உங்க பாட்டு போட்டுட்டு டான்ஸ் ஆடுறார், ‘வாடி வாடி’ அப்படி… ‘கைப்படாத சிடி’ன்னு பாட்டைப் போட்டு ஆடுறார்.
அந்தச் சிறு பெண் குழந்தைகளுக்குப் போய் ‘கால் சொடுக்கெடுத்து விடுறேன்’னு தொடுகிறார். ‘குட் டச், பேட் டச்’னு பள்ளிக்கூடத்தில பள்ளிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியத்தை, ஒரு உயர்கல்வித்துறை அமைச்சர் போய் ஒரு பெண் குழந்தைக்குப் பொதுவெளியில, டிவி கேமராக்கள் சூழ இருக்கிற இடத்தில செய்றார். முதல்ல உங்க அறிவுரையெல்லாம் அங்கு அவருக்குக் கூறுங்க. அங்க கூறி முடிச்சிட்டு வாங்க.
சிங்கிள் டேக்ல முடிக்க ப்ளான்
அதேபோல நேற்றைக்குச் சட்டமன்றம் எதிர்க்கட்சித் தலைவர் உரையோடு முடிந்தது என்று சபாநாயகர் அறிவிக்கிறார், எல்லாம் எழுந்து நாங்க வெளியில வந்துறோம். அப்புறம் திருப்பிப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அதற்குப் பதில் சொல்வார்னு பதில் சொல்லச் சொல்றார். நேற்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது மூன்று அமைச்சர்கள் தொடர்ந்து குறுக்கீடு செய்ததற்கு இதே சட்டப்பேரவைத் தலைவர் அனுமதி அளித்தார்.
இன்னைக்கு முதலமைச்சருக்குக் குறுக்கீடு செய்யக்கூடாதுன்னு சொன்னார். இதுவரைக்கும் இருந்த தமிழக அரசியல் வரலாற்றில், சட்டப்பேரவை வரலாற்றில் எந்த முதலமைச்சருக்கும் குறுக்கீடு இருந்தால், எதிர்க்கட்சித் தலைவர்கள் குறுக்கீடு செய்தால் அவர்களைப் பேசவிடுவது வழக்கம். ஆனால் இன்னைக்கு ‘சிங்கிள் டேக்ல (Single take) இந்த ஷாட்டை முடிச்சிடனும்’ அப்படின்னு முடிவு பண்ணி, எதிர்க்கட்சித் தலைவர் குறுக்கீடு இல்லாமல் தவிர்ப்பதற்கான முயற்சி எடுத்தீங்க.
எந்த வழக்கையும் சந்திக்க தயார்?
நேற்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் பேசுகின்ற பொழுது ஆதாரம் கேட்ட சட்டப்பேரவைத் தலைவர், இன்றைக்கு ஆதாரம் கேட்டாரா? கேட்கல. வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார் முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குற்றம் சுமத்துகிறார். இதற்கெல்லாம் ஆதாரம் எங்கேன்னுதான் நாங்கள் கேட்டோம். அந்த ஆதாரம் கேட்க வேண்டிய வாய்ப்பை மறுபடியும் கேட்கவிடாமல் தட்டிப்பறித்து, ‘முதலமைச்சர் பேசுவார் பேசுவார், பேசி முடித்துப்பேசிக் கொள்ளலாம்’னா முதலமைச்சர் மனதுக்கு வந்ததெல்லாம் பேசி முடிச்சு, ரெக்கார்ட் ஆகி லைவ்ல (Live) போன பிறகு, அதற்கு நாங்க பேசும்போது லைவை வேணாலும் கட் பண்ணுவீங்க. இல்லை ‘சட்டப்பேரவை முடிந்தது’ நீங்க சபாநாயகர் சொன்னா உங்களுக்குத்தான் அதிகாரம், எங்களைப் பதிலளிக்காமல் வெளியில் அனுப்பி விடலாம். இப்படிப்பட்ட நிலைமையைச் சட்டமன்றத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, குறுக்கீடு செய்து பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்றீங்க, ஆதாரம் எங்கன்னு கேட்கறதுக்கு விடாமல் இன்றைக்கு இந்தச் சட்டப்பேரவை நிகழ்வுகளை முடித்திருக்கிறார்கள்..
அதில் அவருடைய ஆக்ஷன் ஹீரோ திறமையை வேற காட்டினார்—’நாங்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் எதிர்வரிசையில் இருக்கிறவர்கள் பயந்து போயிருப்பாங்க’. ஏன்னா வழக்கு தொடுப்பதற்கு, முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடுப்பதற்கு நீங்க தயாராயிட்டு இருக்கீங்க, அதுதானே? தொடுத்துப் பாருங்கள், சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறோம். யார் மீது வழக்கைத் தொடுத்தாலும், என் மீது வழக்கைத் தொடுத்தாலும், யார் மீது வழக்கு தொடுத்தாலும் இதையெல்லாம் சந்திப்பதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தயங்காது.
மிசானா என்னனு தெரியுமா?
இந்திராகாந்தி தெரியுமா உங்களுக்கு? இந்தியாவின் இரும்புப் பெண்மணி, பிரதமர், உச்சபட்ச அதிகாரம் கொண்டவர். அவர் கொண்டு வந்த மிசாவுக்கு அர்த்தம் தெரியுமா? அந்த மிசா காலத்திலே திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு சிரமப்பட்டதுன்னு தெரியுமா ? அந்த மிசா காலத்திலே எங்களுடைய தலைவர் சிறையில் இருந்தார்ன்னு தெரியுமா? எத்தனை எதிர்க்கட்சிகளுடைய வழக்குத் தாக்குதல்கள், இதையெல்லாம் தாண்டித்தான் அந்தத் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன்னுடைய பணியை, மக்கள் பணியைச் செய்து கொண்டிருக்கிறது . இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். ஒன்றிய அரசு போட்ட வழக்கு உங்க முதுகுல இருக்கு, உங்க முதுகுல இருக்கற அழுக்கை முதல்ல நீங்க பாருங்க, மற்றவர்களைப் பேசுவதை அப்புறம் பார்த்துக்கலாம் .
பொதுமக்களுக்கு அன்றாட பிரச்சனை—சட்ட ஒழுங்கு பிரச்சனை, மின்சாரப் பிரச்சனை, நீங்கள் அறிவித்த விவசாயக் கடனை முறையாகத் தள்ளுபடி செய்யல—இப்படிப் பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. இவை எதற்கும் ஒரு முறையான பதில் சொல்லாமல், சட்டப்பேரவையை ஒரு சினிமா காட்சியைப் போல நினைத்துக் கொண்டு பேசுவதும், அதன் மூலமாக எதிர்க்கட்சிகளை மிரட்ட நினைப்பதும் நடைமுறைக்கு வராது. எல்லா அரசியலும் பார்த்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்; எல்லா ஒடுக்குமுறைகளையும் சந்தித்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். மிசாவைத் தாண்டி இனி நாங்கள் பார்க்கப் போவதில்லை. மிசாவில் இருந்தவர்கள் கூட்டணியில இருக்கிறாங்க, அவங்ககிட்ட வேணாலும் அந்த வரலாற்றை நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இனி ஒரு முறையான முதலமைச்சராக இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவிக்கு வந்துட்டீங்க, அந்தப் பதவிக்கு வந்த பிறகு அந்தப் பதவிக்கு மரியாதை சேர்க்கின்ற விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யை இந்த நேரத்தில் நான் வலியுறுத்துகிறேன்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் தன்னிச்சையாகத்தான் ஆதரவளித்தது என முதல்வர் விஜய் சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு,
தன்னிச்சையாகத்தான் போனார்கள். ஆனால், எந்தக் கூட்டணியில் இருந்து அவங்க ஓட்டு வாங்குனாங்க. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் நின்று, திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும் வாக்களித்துதான் அவர்கள் வந்திருக்கிறார்கள். நான் சட்டப்பேரவையில பேசும்போது சொன்னேன்—’எனக்கு வாக்களித்த, என்னுடைய வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி’ன்னு. நேற்றைக்கு முஸ்லிம் லீக் சார்பாகப் பேசிய வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர், ‘என்னுடைய வெற்றிக்கு பாடுபட்ட திராவிட முன்னேற்ற கழகத் தலைவருக்கு நன்றி’ன்னு அவர் பதிவு செய்திருக்கிறார். எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளில் வெற்றி பெற்றவர்களுடைய தோளில்தான் நீங்கள் உட்கார்ந்து இருக்கீங்க. வாக்களித்த மக்கள் சட்டப்பேரவையை அந்தந்தத் தொகுதியில் இருந்து பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க இந்தச் சினிமா வசனம் பேசுவதை நிறுத்திக்கங்க.
தேசிய கீதம் திமுக ஆட்சியிலும் பாடப்பட்டது என்று ஆதாரத்துடன் சொல்லியிருக்கிறாரே
என்ன ஆதாரம்? அவரே என்ன சொல்லிட்டாரு, குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி. குடியரசுத் தலைவருக்கான உச்சபட்ச மரியாதை வழங்கப்படுகிறது. இந்தச் சட்டமன்றப் பேரவையிலே சபாநாயகர், ஆளுநர் இதுவரைக்கும் பேசுனப்ப என்ன நடைமுறை இருந்ததோ, அந்த நடைமுறையைத்தான் நாங்க நடைமுறைப்படுத்தச் சொல்றோம்.
‘பார்ட்டி ஃபண்ட் (Party fund) சொன்னாலே ஏன் எரியுது என்று கேட்டிருக்கிறார்.
அவையில சொல்ற குற்றச்சாட்டு அனைத்தும் ஆதாரம் இல்லாமல் பேசுறீங்க. பார்ட்டி ஃபண்டுக்கு ஆதாரம் இருக்கா? ஆதாரம் வச்சிருந்தா வெளியிடணும். நிதிநிலை சரியில்லைன்னு வெள்ளை அறிக்கை வெளியிட்டார்கள். அதுபோல இதற்கும் வெளியிடணும் வெளியிடாமல் வெறுமையாகச் சட்டமன்றத்தில பேசி, நீங்க அதை லைவ்ல போட்டு, ரீல்ஸ் (Reels) எடுத்து கட் பண்ணிப் போட்டு, அதன் மூலமாகத் தனக்கு வாக்களித்தவர்களுடைய மனதை மயக்குவதற்கு, அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்குத்தான் இந்த வேலையைச் செய்றீங்க. ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்க, சந்திப்பதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தயாராக இருக்கிறது .

இன்னொன்று சைகை செய்கிறார், அதற்குப் பேரவைத் தலைவர்ட்ட அனுமதி வேற கேட்கிறார் . நேற்றைக்கித் தன் சக உறுப்பினர்களோடு பேசிக்கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் செய்கையை வந்து குற்றம் சுமத்தி, நேத்துக்குப் பேரவைத் தலைவர் ஒரு நீண்ட உரையாற்றுகிறார் . ஆனால் இன்னைக்கு ஒரு முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எவ்வளவு தரக்குறைவாக நடந்து கொள்கிறார்? எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ‘கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தது’ என்பதற்குத் காட்டிய சைகையைக் காட்டுகிறார் . அப்ப உங்களுக்கும் வி.எஸ். பாபுவுக்கும் என்ன வித்தியாசம்? வி.எஸ். பாபு அது என்ன ஸ்டேட்டஸ்ல பண்ணாருன்னு எல்லாரும் நாட்டுல பார்த்துட்டுதானே இருந்தாங்க. அவர் என்ன நிலையில், என்ன கதியில் இருந்து அதைச் செய்தார்ன்னு… அதை ஒரு முதலமைச்சர் வந்து திருப்பிப் பண்ணா, ரிப்பீட் (Repeat) பண்ணா, அப்ப வி.எஸ். பாபு கேட்டகிரிதானே நீங்களும்? நீங்க எப்படி எல்லாம் திரிந்து கொண்டிருக்கீங்கன்னு மக்கள் பார்த்துக் கிட்டு இருக்காங்க. ஆனால் மற்றவர்களைப் பேசுவதை, மற்றவர்களைக் கேலி செய்வதை, கிண்டல் செய்வதை, இந்த உடல் மொழியை வெளிப்படுத்துவதைத் திரைப்பட நடிகராக இருக்கும்போது செய்யறதை விட்டுட்டு, இப்ப வந்து முதலமைச்சரான பிற்பாடு செய்தால் இது முறையற்ற செயல்.
கேரியர் கழன்றிருக்கும்

கரூர் சம்பவம் மீண்டும் இன்னைக்குப் பேசிருக்காரு. எங்க பழி போடுறாங்க… பக்கத்து மாநிலத்தில் அல்லு அர்ஜுன் மீது இப்ப வழக்கு, வழக்குல அவர் பேர் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் 41 பேர் இறந்த இடத்தில் நின்றவர் இவர்தான், எங்கள் தலைவர் அவர் மீது குறையே சொல்லல. எங்க தலைவர் என்ன சொன்னார்? ‘எந்தக் கட்சித் தலைவனும் தான் தொண்டன் இறப்பதை விரும்ப மாட்டான், அதை ரசிக்க மாட்டான்’ அப்படின்னுதான் சொன்னாரு. ஒரு புதிய கட்சி ஆரம்பிச்சிருக்கீங்க, உங்களுக்கு விவரம் தெரியாமல் நடந்திருக்குன்னு சொல்லி எங்க முதலமைச்சர் கருணையோடு நடந்து கொண்டதுனாலதான் இன்றைக்கு இந்தப் பேச்செல்லாம் நீங்க பேசுறீங்க. அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடர்ந்தது போல ஒரு வழக்கு தொடர்ந்து நீங்க உங்க கெரியர் உச்சம் எல்லாம்…கெரியர் கழன்றிருக்கும்” என்று காட்டமாக பதிலளித்தார்.
