“நான் இந்த கூட்டத்தில் தலை குனிந்து நிற்கிறேன்” என்று நேற்று கோவளத்தில் நடந்த தமிழக வெற்றி கழக தோழமை கட்சிகள் கூட்டத்தில் வைகோ பேசியிருக்கிறார்.
திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழக ஆட்சிக்கு, காங்கிரஸ், மதிமுக, ஐயூஎம்எல், விசிக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இந்த நிலையில் நேற்று கோவளத்தில் முதல்வர் விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிபிஎம், சிபிஐ தவிர மற்ற கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் கட்சித் தலைவர்கள் அனைவரும், கூட்டணி தொடர்பாக பேசினர்.
அப்போது பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘நான் இந்த கூட்டத்தில் தலை குனிந்து நிற்கிறேன் . மற்ற தலைவர்கள் எல்லாரும் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு வந்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தும் அவர்கள் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர்.
திமுகவின் செல்வாக்கினாலும் , ஆசை வார்த்தைகளாலும் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் அங்கே சென்று விட்டார்கள்” என்று பேசியிருக்கிறார்.
அதோடு திமுக அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்பாக பேசிய வைகோ, ”விஜய் வரக்கூடாது என்பதற்காக திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேர வேண்டும் என சில முயற்சிகள் நடந்தன. ஆனால் திமுகவும் அதிமுகவும் ஒன்று சேர வேண்டும் என்று அந்த காலத்திலேயே ஒரிசாவின் முன்னாள் முதல்வர் பட்நாயக் முயற்சி செய்தார்.
ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இது தொடர்பாக ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், போலீசும் திருடனும் எப்படி ஒரே அணியில் சேர முடியும் என்று கேள்வி எழுப்பினார். அதாவது திமுக திருடன், அதிமுக போலீஸ் என்ற வகையில் அவர் பேசியிருந்தார்.
ஆனால் அவருடைய சித்தாந்தத்திற்கு எதிராக இப்போது முதல்வர் விஜய் வந்து விடக்கூடாது என்பதற்காக திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைக்க முற்பட்டிருக்கிறது. இதுவே விஜயின் பெரிய பலத்தை காட்டுகிறது.
1980 தேர்தலில், அவர் ஒவ்வொரு தொகுதியிலும் பேசும்போது குறிப்பிட்ட மூன்று வார்த்தைகளை சொன்னார். அது என்னவென்றால், நான் என்ன தவறு செய்தேன் என்பதுதான். இதைக் கேட்ட மக்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தார்கள்.
அதேபோல் தற்போது திமுகவும் ஏதாவது சூழ்ச்சி செய்து… ஒருவேளை இந்த ஆட்சிக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் கூட மீண்டும் விஜய் மக்களிடம் நியாயம் கேட்டால் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றியை கொடுப்பார்கள் என்று பேசினார்” என கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகிறார்கள்.
.
