தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்யபாமாவை திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உருவகேலி செய்துவிட்டதாக தவெக, பாஜக மற்றும் விசிக கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். தாராபுரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்களும் திமுகவினரும் பிரம்மாண்ட வரவேற்பளித்தனர்.
தாராபுரம் பிரசார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “மக்களாகிய நீங்களே தாராபுரம் வேட்பாளரை என்ன சொல்லி கூப்பிடுகிறீர்கள்? பெட்டி பாமா.. இன்னொன்னும் இருக்கு பல்டி பாமா.. எப்படிதான் அந்த உருவத்தை வைத்து கொண்டு பல்டி அடித்தாங்கன்னு தெரியலை”என பேசியிருந்தார்.
இதற்கு தவெகவின் அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைச்சர் அருண்ராஜ், “ தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின்… நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில்… அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார். அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். This is DMK’s DNA. தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!” என கூறியுள்ளார்.
விசிகவின் துணைப் பொதுச்செயலாளரான அமைச்சர் வன்னி அரசு, ”உருவ கேலி கூடாது என்று வழிகாட்டக்கூடிய தலைவரான அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே இப்படி பேசி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
ஆணாதிக்கம் மிகுந்த சமூக கட்டமைப்பில் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது. அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது.
அதை முடக்கும் வகையில், ஆணாதிக்க சமூகம் தமது அதிகாரத்தை பயன்படுத்துவதை பார்க்கிறோம். அதனால் தான் பெண்களை பொது இடங்களில் கேலி செய்தால் ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என 1998 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்திற்கு ‘தமிழ்நாடு பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்டம்’என பெயர் சூட்டப்பட்டது.
இச்சட்டத்தை இயற்றியவர் யார் தெரியுமா? திமுக தலைவரும்
திராவிட இயக்கத்தின் ஆளுமையுமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
தந்தையின் சட்டத்தை மதிக்காமல் மீறுவது சரியா? ” என கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், “தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பொதுக் கூட்ட மேடையில், தவெக வேட்பாளர் அவர்களைப் பற்றி உருவ கேலி செய்யும் விதமாக பேசியது கடும் கண்டனத்திற்குரியது.
பிரச்சார மேடைகளிலும் பொதுக்கூட்ட மேடைகளிலும் பெண்களை தரக்குறைவாகவும் இழிவாகவும் தொடர்ந்து பேசி வரும் தந்தையும் மகனும் தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து பெண்களை அநாகரீகமாக பேசி வருவது தொடர் கதையாகி வருகிறது. இது போன்ற பேச்சுக்களை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மாற்றுக் கட்சி வேட்பாளர்களை எதிர்க்கத் திராணியின்றி அநாகரீக வார்த்தைகளை பேசி ஓட்டு கேட்பதுதான் திமுகவின் 70 வருட பிரச்சார முறையா? தரம் தாழ்ந்து பேசிப் பேசியே அழிவை நோக்கிச் செல்லும் திமுக எத்தனை பட்டாலும் திருந்திய பாடில்லை” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
